காஷ்மீர் பலி 40 பேர் படுகொலை.

காஷ்மீர் மக்களின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய பாகிஸ்தான் அரசுகள் மிக மோசமான மனித உரிமை மீறலகளைச் செய்து வருகின்றன. காஷ்மீரில் மூலைக்கு மூலை கொண்டு குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தால் மக்கள் வாழ்வு முழுமையாக அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் இது நாள் வரை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் ராணுவம் நடத்திய பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நேற்று முன்தினம் வரை 37 பேர் பலியாகினர். இந்த நிலையில், கண்பதியார் என்ற இடத்தில் நேற்று முன்தின இரவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில், குலாம்நபி பத்யாரி (வயது 45) என்பவர் உள்பட சிலர் காயமடைந்தனர். உடனடியாக, மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குலாம்நபிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலையில் இறந்தார்.இதுபோல, பெமினா என்ற இடத்திலும் நேற்று முன்தினம் மாலையில் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் முகமது யாகூப் பட் என்பவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி முகமது யாகூப் இறந்தார். மற்ற இரண்டு பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.மரணம் அடைந்த குலாம்நபியின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக டால்கேட் மயானத்துக்கு ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த அளவிலான மக்களே பங்கேற்று இறுதிச் சடங்குகளை நடத்தினர்.மேலும், தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வமா என்ற இடத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று காலையில் கூடினர். ஒரு இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர், அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர், மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெறும்போது இறந்து விட்டார்.இதையடுத்து, காஷ்மீர் கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு மசூதிகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கன் என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்துல் அஜிஸ் என்ற 60 வயது முதியவர் மரணம் அடைந்தது மாரடைப்பால் நிகழ்ந்தது என போலீசார் தெரிவித்தனர்.பதற்றம் நீடிப்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.