காவிரி நீர் கர்நாடகம் கைவிரிப்பு.

தமிழகத்தின் காவிரி கடைமடை விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சனையான காவிரிப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும் சூழல் எழுந்திருக்கிறது. இந்த வருடம் காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு இன்னும் வழங்க வில்லை. இது தொடர்பாக தமிழகம் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ள கர்நாடகம் போதிய நீர்வரத்து இல்லாததால், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு இந்த ஆண்டு தர வேண்டிய காவிரி நீரை முழுவதுமாக கர்நாடகம் தரவில்லை. இதையடுத்து தில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது.இதில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், தமிழகத்தில் பயிர்களைக் காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் உடனடியாக 26 டி.எம்.சி. நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்திடம் முறையிட்டனர். ஆனால், உடனடியாக தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மழையைப் பொறுத்தே தண்ணீர் வழங்க முடியும் என்றும் கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.