காவிரி, ஓகேனக்கல் கை விரித்தது கர்நாடகம் தவிப்பில் விவாசாயிகள்.

தருமபுரி போன்ற பின் தங்கிய மாவட்டத்தின் குடி நீர் பிரச்சனையைத் தீர்க்க கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் ஓகேனக்கல் பள்ளத் தாக்கில் பாயும் காவிரியில் இருந்து தண்ணீரை எடுத்து வருவதுதான் ஓகேனக்கல் திட்டம். வழக்கம் போல இந்தத் திட்டத்திற்கும் தடை போட்டு வருகிறது கர்நாடக மாநில அரசு. தமிழகத்தை ஆளும் கருணாநிதியோ தமிழக விவசாயிகளின் நீர் உரிமைக்காக போராடுவதை விட்டு டில்லி ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து கிடக்கிறார். பதவிக்காக மட்டுமே போராடும் கருணாநிதியின் குணத்தைத் தெரிந்து கொண்ட மத்திய அரசோ தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சனைகளில் மௌனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஓகேனக்கம் விஷயத்திலும் காவிரியிலும் தமிழகத்திற்கு ஆப்பு வைத்து விட்டது கர்நாடக அரசு. ஓகேனக்கம் விவகாரம் தொடர்பாக மாநில

உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தற்போதைய கொள்ளேகால் தமிழகத்தின் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. பிறகு கொள்ளேகால் கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டது. இவ்வாறு சேர்க்கப்பட்டபோது ஒகேனக்கலில் காவிரி ஆற்றுப் பகுதியில் எல்லையைப் பிரிக்கும்போது கொள்ளேகால் பக்கம் 200 கிலோ மீட்டர் தூரம் கர்நாடகத்துடனும், எதிர்ப் பக்கத்தில் 200 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துடனும் சேர்க்கப்பட்டது. இந்த சமயத்தில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள தீவு போன்ற பகுதியில் எல்லை சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில்தான் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்கிறது. இத்திட்டத்தை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அங்கு எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. தமிழக அரசு குடிநீர் திட்டத்தைத் துவக்குவதுபோல் காவிரி ஆற்றில் சிவனசமுத்திரத்தில் மின் திட்டத்தைத் துவக்க திட்டமிட்டுள்ளது. இங்கு 345 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர் மின் உற்பத்தி திட்டத்தை கர்நாடகம் துவக்க தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. கர்நாடகத்தின் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இந்த மின் திட்டத்துக்குத் தேவையான தண்ணீரை காவிரி ஆற்றில் பெற்று அதே நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும். இதனால் தமிழகத்தின் பங்கு நீரில் எந்தவித குறைவும் ஏற்படாது. அதே நேரத்தில் கர்நாடகத்தின் மின் உற்பத்தித் திட்டத்துக்கும் பாதிப்பு இருக்காது. சிவனசமுத்திரத்தில் நீர் மின் திட்டத்தை அமைக்க ஆகும் முழுச் செலவையும் கர்நாடகமே ஏற்கும். அங்கு மின்சாரத்தை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும். தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும். இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம் தயாராக உள்ளது. தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து முதல்கட்டமாக இரு மாநில தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை விரைவில் துவங்க உள்ளது. அதன்பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெறும். தேவைப்பட்டால் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவர். இப்பேச்சுவார்த்தை சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டம் முடிந்தபிறகு நடத்தப்படும். எனவே, ஒகேனக்கல் பிரச்னையை இந்த சமரச திட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இதை ஏற்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார். ஆக கர்நாடகம் அமைக்கப் போகும் நீர்மிந்திட்டத்திற்கு தமிழகம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கர்நாடகம் ஓகேனக்கல் விஷயத்தில் ஒத்துழைக்கும் என்பதோடு நீர் மின் திட்டத்திற்கே ஒத்துழைப்பு அளிப்பதென்றால் சிக்கலான இன்னொரு விஷயத்திற்குள் தமிழகம் பயணிக்கிறது. அதாவது தமிழகத்திற்குச் சொந்தமான ஓகேனக்கல் பகுதியை அளக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கைக்கு தமிழகமே வலியப் போய் ஒப்புதம் கொடுத்தது போலாகி விடும்.

காவிரி தண்ணீர் இல்லை

தமிழகத்தில்

 

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி. ஆகும். அதில் இப்போது 38 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது.அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்காக திறக்க முடியும். கடந்த ஆண்டில், ஜூன் 12ம் தேதியன்று வெறும் 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்ததால் குறிப்பிட்ட அந்நாளில் நீர் திறக்கப்படவில்லை. இப்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிவிட்ட போதிலும், குறுவை சாகுபடிக்காக 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் தற்போது, 26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஆனால், தனது அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகம் வழக்கமாக கொண்டிருக்கிறது. வழக்கமாக தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரையும் தர கர்நாடகம் மறுத்து வருகிற நிலையில் தற்போது மழை பெய்தாலும் கூட தனது அணைகளை நிரப்பிக் கொண்ட பிறகே தமிழகத்துக்கு தண்ணீரைத் தரும். ஜனவரி 1 முதல் ஜூன் 1 வரை கர்நாடகம் பாசனத்துக்கு தண்ணீரைத் திறக்கக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதை கர்நாடகம் தொடர்ந்து மீறி வருகிறது. இந்த ஆண்டும் தடையை மீறி, தனது மாநில பயிர்களுக்கு தண்ணீரை திறந்துவிட்டுவிட்டதால் தமிழகத்துக்குத் தர அணைகளில் தண்ணீர் இல்லாத நிலை நிலவுகிறது. ஆக மொத்தம் ஓகேன்னக்கல் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவிரியிலும் தண்ணீர் தர மறுக்கிறது. அண்ணன் கருணாநிதி தமிழகத்தையும் தம்பி கருணாநிதி கர்நாடகாவையும் ஆள்கிறார்கள். பரஸ்பரம் சிலைகளை மட்டுமே இவர்களால் திறக்க முடிகிறதே தவிற இரு மாநில விவசாயிகளுக்கிடையில் பரஸ்பர உறவை ஏற்படுத்தாமல் கபடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சந்தர்ப்பவாதிகள்.