“காலநிலை மாற்றத்தை உலகம் மனிதவர்க்கத்தின் நலன்களோடு சேர்த்து எண்ணத் தவறிவிட்டது” :அப்துல்லா ஷாகிட்

18 – July – 2008
 
ஷிராஸ் டீன் –       மாலைதீவுகளின் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம் 20 வருடங்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச்சபையில் உரை நிகழ்த்தும்போது காலநிலை மாற்றம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதவிடத்து தனது சிறிய இந்து சமுத்திரத்தீவு அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்தவாரம் நடைபெற்ற நிபுணர்கள் குழுவொன்றின் கலந்துரையாடலில் காலநிலை மாற்றம் ஆராயப்பட்டபோது மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாகிட் ஒரு தத்துவரீதியான வினாவைத் தொடுத்துள்ளார். 20 வருடங்களுக்கு முன் முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஏன் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை?

1,190 தனிப்பட்ட தீவுகளைக் கொண்ட இந்நாடான மாலைதீவு பல தீவுகள் 1.2 மீற்றர் மாத்திரம் கடல் மட்டத்திற்கு மேலுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் பாதிப்படையக்கூடியது.

காலநிலை மாற்றம் சம்பந்தமான நாடுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது ஆய்வின் அறிக்கைப் பிரகாரம் கடல்மட்டம் உயர்தல் பாரிய புயல்களைத் தோற்றுவிப்பதுடன் சிறிய தீவுகளின் கடற்கரை மண்ணரிப்புகளும் ஏற்பட வழிவகுக்கும். புவி வெப்பமடைதல், கடல்மட்டம் உயர்வதற்கு வழிவகுக்கும்.

இத்தகைய சம்பவங்கள் மக்கள் குடியேற்றங்களின் உட்கட்டமைப்பைப் பாழாக்குவதுடன் பல முரண்பாடான சுகாதார , பொருளாதார தாக்கங்களுக்கும் வழிவகுக்கும். நன்னீர் பெறும் இடங்களும் விவசாயத்திற்குரிய நிலங்களும் உவர்நீர்க் கலப்பினால் பாழாகும். மீனினம் வாழ உதவும் வளமும் மாசடைந்துவிடும். மேலும், இந்தத் தீவுகளில் இச்சூழலுக்குப் புதிதான உயிரினங்களும் பரவ வழிவகுக்கும்.

இந்தப் பொருளாதார சமூக மனித உரிமைகள் ஆகியவை காலநிலை மாற்றத்தினால் அடையக்கூடிய பாதிப்புகள் பற்றிய கலந்துரையாடலில் தலைமை வகித்த ஷாகிட் அவர்கள் பல வினாக்களை முன்வைத்தார்.

அவர் கேட்டதாவது;

ஏன் மனித இனம் புவியின் வளிமண்டலத்தைப் பாதிக்கக்கூடிய தட்பம் நிறைந்த பொருளாதார திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மிக முக்கியமாக காலநிலை மாற்றம் சம்பந்தமான உலகளாவிய ரீதியில் நடைபெறும் விவாதங்களை எப்படி மாற்ற முடியும்? எப்படி உலகின் அலட்சிய மனப்பான்மையை பகிரப்பட்ட பொறுப்புநிலை, உலகளாவிய ரீதியில் ஒன்றுபட்ட நிலைக்கு மாற்றமுடியும்?

ஷாகிட் தொடர்ந்து காலநிலை மாற்றம் சம்பந்தமாக உலகில் காட்டப்படும் அலட்சியப் போக்குக்கு அதுபற்றிய விஞ்ஞான ரீதியான வரண்ட கொள்கை ஒரு காரணமாகும். மனித வர்க்கத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்களுக்குப் போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனக் கூறினார். அவர் இறுதியாக “காலநிலை மாற்றத்தை உலகம் மனிதவர்க்கத்தின் நலன்களோடு சேர்த்து எண்ணத் தவறிவிட்டது’ எனக் கூறினார்.

மாலைதீவுகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அவற்றுள் ஒன்று தலைநகர் மலேயைச் சூழ 60 மில்லியன் டொலர் செலவில் கொன்கிறீற் மதில் அமைப்பது. கடல்மட்டத்திற்கு மிகவும் மேல்நிற்கக்கூடியதான ஒரு செயற்கைத் தீவை உருவாக்குவது ஆகியனவாகும்.

எனினும் இவை நிரந்தர தீர்வாக அமையமாட்டா. காலநிலை மாற்றம் இப்போதுள்ளது போல துரிதகதியில் மாறினால் மாலைதீவுகள் அழிவை எதிர்கொள்ளும்.

கடல்மட்டம் உயர்ந்து ஒரு தீவு முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட்டால் தீவுகளும் கரையோர பகுதிகளும் உள்ளகக் கட்டமைப்பு அழிந்து அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வாழ்வதற்கு முடியாத நிலை உருவாகும்.

நிபுணர்கள் கூறுவதாவது;

மாலைதீவுக்கும் அதுபோன்ற ஏனைய பல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அவசியமாகத் தேவைப்படுவது காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதாகும்.

ஷாகிட்? “உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தில் மனிதகுலத்தின் பங்கு’என மாலைதீவுகள் முன்வைத்த ஒரு முன்மாதிரியை மேற்கோள் காட்டி ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்திற்கு சமர்ப்பித்த ஒரு தீர்மானத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் 80 நாடுகள் காலநிலை மாற்றத்திற்கும் மனித உரிமைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை ஆய்வு செய்யுமாறும் இதனை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தின் முன்னர் நிறைவு செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

காலநிலைமாற்றம் சம்பந்தமாக உளப்பூர்வமானதும் மனிதாபிமான ரீதியானதுமான ஆக்கபூர்வமான உறுதியானதுமான செயற்பாட்டை சர்வதேச சமூகம் எடுக்கும் என மாலைதீவு நம்பிக்கை கொண்டுள்ளது.

ஐ.நா. சபையின் சூழல் திட்டத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அகிம் ஸ்ரெயினர் உலகளாவிய ரீதியில் காபனீரொட்சைட் வெளியேற்றத்தால் பல நாடுகள் அழிவை எதிர்நோக்குவதன் முன்னர் தடை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 30 வருடகாலமாக நாம் இதுபற்றி முரண்பட்டுக் கொண்டிருப்பதை அடுத்த சந்ததிபார்த்து எள்ளிநகையாடும். 20 வருடங்களுக்கு முன்னர் இதைப்பற்றி அறிந்திருந்தோம். இதற்கு விஞ்ஞான ரீதியாக நிலைப்பாடெடுத்து அரசியல்வாதங்களுக்கு முகங்கொடுத்தோம் என அவர் கூறினார்.

செஞ்சிலுவை அமைப்பைச் சேர்ந்த ஜெரிரால்பொற் காலநிலை மாற்றத்தின் சமூக அம்சங்கள் பற்றிய மேலதிக ஆய்வு வேண்டுமென்றும் மேலும் காலநிலை மாற்றத்தை உலகளாவிய சமூக நீதி சம்பந்தமான விடயமாக்கும் தேவை உண்டெனவும் தனிப்பட்ட சமூகக் குழுமங்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் காலநிலை மாற்றத்தில் சமூக ரீதியான தாக்கங்களை எதிர்கொள்ள பலமான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறார்.

நாங்கள் எப்பொழுதும் அனர்த்தங்களைத் தடுக்க முடியாது. ஆனால், பல மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டநிலையைக் குறைக்கும் தேவைகளில் எமது கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஐ.பி.எஸ்