காலநிலை மாற்றத்தின் அபாயங்களை நாம் விளங்கி செயற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது! : செங்கோடன்

parai_voice_of_freedomவிஞ்ஞானம் ஒன்றை எமக்கு தெளிவாக சொல்கிறது. எரிபொருள் பாவனைகள் ( Fossil fuels ) , எரிபொருள் உற்பத்தி முறைகள் ( fracking ), உணவு உற்பத்தி முறைகள் ( meat production ” we slaughter 60 million animals each year excluding animals that we torture for milk, dairy, ice cream, egg and etc” ) , எரிபொருட்களிற்காக நடைபெறும் யுத்தங்கள், தேவையற்ற கண்டுபிடிப்புக்களிற்காக செய்யும் ஆராய்ச்சிகள் என அரசியல்வாதி, தனியார் நிறுவனங்களில் தொடங்கி சாதாரண மனிதர்வரை செய்யும் செயல்கள் காலநிலை மாற்றத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சுயநலம் மிக்க மனிதர்களின் சுயநலம் மிக்க செயற்பாடுகளால் தோற்றுவிக்கப்படும் இந்த காலநிலை மாற்றத்தை தடுக்கத்தவறுவோமானால் இயற்கை அன்னையை அழிவில் இருந்து காக்கமுடியாது. அண்மைய காலங்களில் உலகம் முழுவதும் ஏற்படுகின்ற வெள்ளம், வறட்சி, வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பு சுனாமி என்பவை நாமும் நம் சந்ததியினரும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் பாரிய அழிவுகளின் அபாயங்களை எமக்கு உணர்த்தி செல்கின்றன.

நேற்றைய -21.09.2013- பேரணியில் கலந்து கொண்டோர் பலர் “Fracking” ( சூழலுக்கு பலத்த ஆபத்தை தரக்கூடிய எண்ணெய் அகழ்வு முறை. இம்முறை மூலமே மன்னாரில் எண்ணெய் அகழ்வினை மேற்கொள்கிறார்கள். ஆனால் இது அபாயகரமான எண்ணெய் அகழ்வு முறைபற்றி தமிழ் சமூக ஆர்வலர்களோ, மனித உரிமை செயற்பாட்டாளர்களோ, அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ பேசுவதென்பது இல்லையென்றே கூறலாம்.) க்கு எதிரான பல பதாகைகளையும் வைத்திருந்ததோடு, கோசங்களை எழுப்பியதோடு மட்டும் இல்லாமல், “GEO Engineering” ( இது பில்கேட்ஸ் அவர்களினால் முதலீடு செய்யப்பட்டு கேடுகெட்ட ஐநாவினால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு ஆய்வு முறை. இது வானில் இரசாயனங்களை தூவூவதன் மூலம் வானிலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் செய்முறை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த செயன்முறையும் சூழலுக்கு ஆபத்தை தரக்கூடியது என ஆய்வுகள் வெளிவந்ததன் பின்னர் அதற்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்திருக்கின்றன.( பில்கேட்சும் ராஜபக்சவும் மிகவும் நெருக்கம். இலங்கையில் இது பரிசோதனைக்காகவும், அரசியல்காரணங்களிற்காகவும் ( வறட்சியை, வெள்ளத்தை ஏற்படுத்தி நிவாரணங்களை வழங்குவதன் மூலம் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தல். பதவியில் இருக்க எதுவும் செய்வான் ராஜபக்ச ) பயன்படுத்தப்படுகின்றதோ என்ற பலத்த சந்தேகங்கள் உண்டு. ) ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்களிற்கு தமது அரசாங்கங்கள் மற்றைய நாடுகளில் இவற்றிற்காக யுத்தங்களை நடத்தி குற்றவாளிகளை பதவியில் அமர்த்தி சூழல் மாசடைவதையும் பொருட்படுத்தாது அதனை எதிர்க்கும் மக்களை கொன்று குவித்து தமது எண்ணெய் வேட்டையையும் கனியவளவேட்டையையும் நடத்துகிறார்கள் என்பது தெரிந்திருக்காது.

ஏனெனில் அவர்களிடம் நாங்கள் அதனை கொண்டுபோய் சேர்க்கவும் இல்லை, அவர்கள் நாட்டில் வாழும் நாங்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளிற்கு சேர்ந்து குரல்கொடுப்பதும் இல்லை. இந்த பேரணி இவ்வளவு பிரம்மாண்டமாக நடந்தது என்ற பெயருடன் மட்டும் நின்றுவிடாமல் தமது நாடுகளில் மட்டுமன்றி மற்றைய நாட்டு மக்களிடமும் தெளிவினை ஏற்படுத்தி அரசியல்வாதிகளை அழுத்தங்களிற்கு உள்ளாக்கி பலதேசிய நிறுவனங்கள் இயற்கையை அழிப்பதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அடுத்த நகர்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

அரசியல்வாதிகள், வியாபார நிறுவனங்கள், சாதாரண மனிதர்கள் போன்றவர்களின் சுயநலம் மிக்க செயல்கள் இயற்கைக்கு அழிவினை ஏற்படுத்திவருவதினை சுட்டிகாட்டி பல பசுமை இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. உலகில் உள்ள பசுமை இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைதி தினமான நேற்றைய நாளில் ( 21-09-2014) காலநிலை மாற்றத்தை முக்கியமாக கருத்தில் கொண்டு இயற்கை அன்னையை அழிவில் இருந்து காக்க தமது அரசாங்கங்கள் செயற்படவேண்டும் என கோரி பாரிய பேரணிகளை வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கின்றன.

இந்தப்பேரணிகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு அரச, தனியார் நிறுவனங்கள், தனிமனித செயற்பாடுகள், ஏற்படுத்தும் இயற்கை அழிவு பற்றிய ஆதங்கங்களை அரசாங்களிற்கும், மக்களிற்கும் அமைதி வழியில் இடித்து உரைத்துள்ளனர். 150 க்கு மேற்பட்ட நாடுகளில் நடைபெற்ற 2700 க்கும் அதிகமான பேரணிகளில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற பேரணியில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான செயற்பாட்டாளர்களும், பிரித்தானியாவின் இலண்டனில் நடைபெற்ற பேரணியில் நாற்பாதியிரத்துக்கும் அதிகமான செயற்பாட்டாளர்களும் என உலகம் பூராவும் இடம்பெற்ற பேரணிகளில் இலடசகணக்காணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

இந்த பேரணிகளில் செயல்பாட்டாளர்கள் வைத்திருந்த சுலோக அட்டைகளில் “மனிதர்கள் வாழ வேறு பிரபஞ்சம் இல்லை” , “வேறு வழியில்லை” போன்ற சுலோக அட்டைகள் பலரது கவனத்தை ஈர்த்ததோடு செயல்பாட்டாளர்களின் தாள வாத்தியங்கள், மற்றும் மிருகங்களை போன்ற உடையணிந்த செயற்பாட்டாளர்கள் என பல சமூகங்களை சேர்ந்தவர்கள் பங்கெடுத்திருந்தனர். அடுத்த வாரத்தில் ஐக்கியநாடுகள் சபையில் காலநிலை மாற்றம் பற்றிய அமர்வு நடைபெற உள்ள நிலையில் உலகலாவிய ரீதியில் நடைபெற்ற இந்த பேரணி அந்த அமர்வில் பல அழுத்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

மேற்குலக அரசியல்வாதிகள் மூன்றாம் உலக, அரேபிய, ஆபிரிக்க நாடுகளில் எரிபொருள், கனியவளம் உட்பட தமது தேவைகளிற்காகவே யுத்தங்களை தூண்டிவருவதோடு, சூழல் மாசடைவதை பொருட்படுத்தாது கனியவளவேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன. அதே நாடுகள் தற்போது தம் நாட்டு கனியவளங்களையும் சூழல் மாசடைவதையும் பொருட்படுத்தாது கொள்ளையடிக்க தொடங்கியிருக்கும் நிலையில் மேற்குலகில் உள்ள இயற்கையை விரும்பும், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட மக்கள் தமது எதிர்ப்பினை காட்டத்தொடங்கியிருக்கின்றனர்.

இதனை பயன்படுத்தி நாம் எமது நாட்டில் இந்த மேற்குலக அரசுகள், நிறுவனங்கள் மேற்கொள்ளும் இயற்கையை மாசுபடுத்தும் சட்டவிரோத கனியவள அகழ்வு, எண்ணை அகழ்வு பற்றி மேற்குலகவாழ் மக்களிடம் எடுத்து சொல்லி எங்களது நாட்டில் இடம்பெறும் அழிவுகளை தடுத்த நிறுத்த தேவையான செயல்களை செய்யலாம். ஆனால் எதிர்காலத்தையும், பிள்ளைகள் எதிர்காலத்தில் வாழத்தேவையான இயற்கையையும் அழிந்து கொண்டிருப்பதை புரிந்து கொள்ளாத எமது தமிழ் மக்களோ தமது பிள்ளைகளிற்கும், எதிர்காலத்திற்கும் ஓடி ஓடி உழைத்துகொண்டிருக்கிறார்கள்.

“எதிர்காலமே கேள்விகுறியாய் தொக்கிநிற்க, எதிர்காலத்திற்காய் பொருள் தேடும் மூடர் கூட்டம் இங்கே. அறிவிழந்த மாந்தர் கூட்டம் இனியும் திருந்தவில்லையெனில் யாவற்றையும் அழித்து மீள மனிதர் தவிர்ந்த உயிரினங்களை மட்டும் படைத்திடுவாய் இயற்கை அன்னையே”