கார்த்திகேசன்: உன்னதமான சமூகப் பங்காளனாகச் சமூகத்தை நேசித்த தலைசிறந்த வழிகாட்டி-எம். குமாரசாமி .

27.09.2008.

யாழ். குடாநாட்டின் அரசியல், கல்வி, கலை கலாசார துறைகளில் 1944 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆண்டுவரை தனக்கென ஓர் முத்திரையைப் பதித்தவரும், இத்துறைகளின் முன்னேற்றங்களில் மிகவும் ஈடுபாடுகொண்டு, அவற்றை முன்னெடுத்துச் சென்ற அறிஞர்களில், காலஞ்சென்ற மு. கார்த்திகேசன் ஒரு தனியிடத்தைப் பெற்றவராவார். அவர் இறந்து 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் அரசியலுக்காக கம்யூனிஸ்ட் கட்சியையும், கல்விக்காக ஆசிரியத் தொழிலையும், கலை, கலாசாரத்திற்காக அவர் வாழ்ந்த வண்ணார் பண்ணைப் பகுதியிலுள்ள சமூக நிறுவனங்களின் ஈடுபாட்டையும், மாநகரசபை வரியிறுப்போர் சங்க உறுப்புரிமைக்காக யாழ். மாநகரசபை அங்கத்துவப் பதவியையும் பயன்படுத்தினார். சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இவர் தனது முழுக்கவனத்தைக் காலநேரம் பாராது, சாதி, சமயம் பாராது, பிரதிபலன் நோக்காது செலுத்தியமைக்கான ஒரேயொரு காரணமென்னவெனில், அவர் ஒப்பற்ற, உன்னதமான சமூகப் பங்காளனாகச் சமூகத்தை நேசித்த தலைசிறந்த வழிகாட்டி. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை யாழ். மாவட்டத்தில் ஸ்தாபித்து, அதன் சித்தாந்தத்தை அன்றைய காலகட்டத்தில் அங்கு வேரூன்ற வழிவகுத்த சிறந்த போதனாசிரியர். இவர் இலங்கைக் கம்யூனிஸ்ட்டுகளின் பரம்பரையில் முதற் பரம்பரையைச் சேர்ந்தவராவார்.

கார்த்திகேசனின் கம்யூனிஸ்ட் வாழ்க்கை நெறி, அவர் அன்றைய மலாயாவிலிருந்து இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் மேற்கல்வி பெறுவதற்காக அவரது தகப்பனால் அனுப்பப்பட்ட காலந்தொட்டே ஆரம்பமானது. மலாயாவில் லண்டன் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்துக்கொண்டு, கொழும்பு வந்து கல்விகற்ற காலத்தில் பல்கலைக்கழகக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவர் கலைப்பிரிவிலே கல்வி பயின்றபோது சமகாலத் தோழர்களான, என். சண்முகதாசன், எல். ஆரியவன்சா, எஸ்.கே. கந்தையா, ஏ. சிவலிங்கம் போன்றோரும் அங்கே கல்விகற்று வந்தனர்.

இக்காலகட்டத்திலே சோவியத் ரஷ்யாவிலேற்பட்ட அக்டோபர் புரட்சியின் தாக்கமும், மேற்கு நாடுகளிலேற்பட்ட விடுதலைப் போராட்டங்களும், ஸ்பானியக் குடியரசின் உதயமும், உலகளாவிய ரீதியில் மாணவர் மத்தியில் அரசியல் உணர்வைக் கூர்மைப்படுத்தின. பீற்றர் கெனமன் அவர்களும் வைத்திலிங்கம் அவர்களும் 1936 1939 காலப்பகுதியில் நடைபெற்ற ஸ்பானிய யுத்தத்தில், ஸ்பானியக் குடியரசுக்கு உதவுவதற்காக ஐக்கிய ராஜ்யத்திலிருந்து கொண்டே சர்வதேசத் தொண்டர் சபையில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். இந்நேரத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் என். சண்முகதாசன் தலைமையில் மாணவர் கவுன்ஸில் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு சோவியத் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. எல். ஆரியவன்ச அவர்களே அந்தக் கவுன்ஸிலின் செயலாளராகக் கடமையாற்றினார். கார்த்திகேசன் அவர்கள் கவுன்ஸிலின் பிரசார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி அரசியற் செய்திகள் கட்டுரைகளைத் தாங்கி வந்த “மாணவர் செய்தி குtதஞீஞுணtண் Students News’ என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இந்தப் பின்னணியில், இளம் சோவியத் யூனியனுக்கு ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தலேற்பட, உலகெங்குமுள்ள புரட்சிகரச் சிந்தனையுடையோர் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக இயக்கங்களை ஆரம்பித்தனர். இலங்கையிலும், “சோவியத் நண்பர்கள்’ என்ற அமைப்பு உருவாகியது. இந்த அமைப்பின் முக்கிய பங்குதாரராக கார்த்திகேசன் இருந்தார். பின்னர் இந்த ஸ்தாபனம் பீற்றர் கெனமன், அ. வைத்திலிங்கம் ஆகியோரின் வருகையுடன் 1940 ஆம் ஆண்டளவில் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியாகப் பரிணமித்தது. 1943 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சி கலைக்கப்பட்டு, டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்கா, பீட்டர் கெனமன், என். சண்முகதாசன், எல். ஆரியவன்ச போன்றோருடன் கார்த்திகேசனும் சேர்ந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். கட்சியின் பொதுச் செயலாளராகப் பீற்றர் கெனமனே பணியாற்றினார். கட்சியின் அடிப்படைச் சித்தாந்தம் மார்க்ஸிசம் லெனினிஸமாகவேயிருந்தது. கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்காக 1945 களில் கட்சி முழுநேர ஊழியர்களை நியமித்தது. பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் கட்சியின் வளர்ச்சியிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

பீட்டர் கெனமன் ஏரிக்கரைப் (Lake House)பத்திரிகை ஸ்தாபனத்தில் வேலை செய்து, அப்பதவியைத் துறந்த பின்னரே கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டார். சண்முகநாதன் சி.சி.எஸ். அரச பதவியை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் முழுநேர ஊழியரானார். வைத்திலிங்கம் அவர்கள் அரச பதவிகளுக்கு தேடிச் செல்லாது தோட்டத் தொழிலாளர் மத்தியில் வேலை செய்வதற்காக மலைநாடு சென்றார். கார்த்திகேசன் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு கெனமனோடு சேர்ந்து “போர்வேட் Forward பத்திரிகையை அச்சடித்துப் பிரசுரித்து, விநியோகித்து விற்பனை செய்து வந்தார். கட்சிக் காரியாலயத்திலேயே வசித்தும் வந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு கார்த்திகேசனை யாழ்ப்பாணம் செல்லுமாறும் அங்கு ஓர் தொழிலை மேற்கொள்ளுவதுடன், கட்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பணித்தது. இதற்கமைய கார்த்திகேசன் யாழ்ப்பாணம் வந்து, நகரின் விக்டோரியா றோட்டில் வாடகை வீடொன்றில் வசிக்க ஆரம்பித்தார். அவர் யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். காலக்கிரமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை ஆசிரியராகச் சேர்ந்தார். காலக்கிரமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பகால உறுப்பினர்களாக ஆர்.ஆர். பூபாலசிங்கம், எம்.சி. சுப்பிரமணியம், ஏ. அற்புதரட்ணம், அ. சரவணமுத்து, ராமசாமி ஐயர் ஆகியோரிருந்தனர். செயலாளராக கார்த்திகேசன் செயற்பட்டார். இவர்கள் மூலமாகவே கட்சி யாழ்.மாவட்டத்தில் அறிமுகமானது. கார்த்திகேசன் யாழ். இந்துக்கல்லூரியில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்தே கம்யூனிஸ்ட் இயக்கமும் யாழ். மாவட்டத்தில் வேரூன்றியதென்றால் மிகையாகாது. கல்லூரியில் சிறந்த கணித, ஆங்கில ஆசிரியராகவும், கல்லூரிக்கு வெளியே ஓர் சமூக சேவையாளனாகவும், ஓர் அரசியற் போதனாசிரியராகவும், பார்வைக்கு எளிமையானவராகவும் விளங்கினார்.

யாழ்.இந்துக்கல்லூரியில் 1946 இலிருந்து 1971 மே மாதம் வரை சேவை செய்தார். இதில் 1971 ஜனவரி தொடக்கம் அவ்வாண்டு மே மாதம் வரை அதிபராகக் கடமையாற்றினார். குடாநாட்டிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் சங்கக் கூட்டங்களுக்கு இவரைப் பேச்சாளராக அழைத்தனர். மாணவர் மன்றங்களில் விசேஷட சொற்பொழிவுகளுக்காக இவர் அழைக்கப்பட்டார். பிரபல்யமான பாடசாலைகளிலிருந்து வைபவங்களுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு உரைவழங்க வேண்டப்பட்டார். இது தொடர்பாகக் கல்லூரி மாணவர்கள் இவரைத்தேடி வருவது சர்வசாதாரண நிகழ்வாகும்.

யாழ்.இந்துக்கல்லூரியில் இவர் கடமையாற்றிய காலமே இவரின் பொற்காலம் எனலாம். சிறந்த அறிஞர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். யாழ். பல்கலைக்கழக வளாகம் ஆரம்பித்தபோது தலைவராகவும், பின்னர் பல்கலைக்கழகம் பல மாடிக் கட்டிடமாகப் பரிணமித்தபோது அதன் உபவேந்தராகவும் விளங்கிய பேராசிரியர் கைலாசபதியும், தற்போதைய உபவேந்தராக விளங்கும் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் இவரின் மாணவர்களேயாவர்.

1947 இல் இலவசக் கல்வி அறிமுகப்பட்ட காலம் தொட்டு 1976 ஜூன் 25 ஆம் திகதிவரை அதாவது கார்த்திகேசன் இளைப்பாறும் வரை அவர் கல்விக்காக ஆற்றிய பங்கு அபரிமிதமானது. வண்ணார்பண்ணையில் வாழ்ந்தபோது அவரின் வீடு காலையிலும், மாலையிலும் மாணவர்களின் வருகையால் நிறைந்திருக்கும். இவ்வாறு அவர் வீடு சென்றவர்களிற் பலர் பின்னர் கட்சி உறுப்பினர்களாகவும், அனுதாபிகளாகவும் மட்டுமன்றி, காத்தி அபிமானிகளாகவும் மாறியுள்ளனர்.

1960 களில் இயங்கிய வில்மட் பெரேரா தலைமையிலான தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியர் குழு மகஜர் ஒன்று சமர்ப்பித்தது. அந்த மகஜரின் உள்ளடக்கமும் பின்னர் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மகஜருக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனேயாவார்.

1960 தொடக்கம் 1971 வரையிலான காலத்தில் ஆசிரியர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். இதற்காக ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டியை பயன்படுத்தி 1960 களில் இலங்கை அரசாங்கம் நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசாங்க மயப்படுத்த உதவினார். 1968 இல் யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கல்லூரிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரியிலிருந்து, ஆசிரிய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக ஆர். பானுதேவனும் வேறு சில ஆசிரியர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோது, ஆசிரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளிலும் முன்னின்று உழைத்தார். மீண்டும் பானுதேவனுக்கு மேல் நீதிமன்றம் பாடசாலையில் வேலை வழங்குமாறு 1976 இல் உத்தரவு பிறப்பிக்கும்வரை தொழிற்சங்க கூட்டுக்கமிட்டிக்கும், பானுதேவனுக்கும் உறுதுணையாகவிருந்தார்.

கார்த்திகேசன் அவர்கள் யாழ். இந்துக்கல்லூரியில் உதவி ஆசிரியராக இருந்த காலத்தோடு 1971 ஜனவரி மாதம் அதிபராக நியமிக்கப்பட்டு மே மாதம் வரை அங்கு கடமையாற்றிய பின்பு கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர் அதிக நாள் கடமை புரியவில்லை. எவ்வாறாயிருப்பினும் யாழ். இந்துக்கல்லூரியிலும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் அதிபராகச் சேவை புரிந்த காலத்தே அங்குள்ள ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் அன்பிற்கும் மரியாதைக்கும் கட்டுண்டிருந்தார். 1972 ஜனவரி தொடக்கம் 1976 ஜூன் 25 வரை அவரது (பிறந்த நாள் ஜூன் 25) பண்டைத்தரிப்பு இந்துக் கல்லூரியிலே அதிபராகச் சேவை செய்த காலத்தே வட்டுக்கோட்டைப் பகுதியிலே பொதுமக்களின் அன்புக்குப் பாத்திரமானார். அப்பிரதேசத்திலேயே நடைபெற்ற சமூகப் பெருவிழாக்களில் பேச்சாளராகப் பங்கு பற்றியதோடல்லாமல், சமூக சேவையாளராகவும் மிளிர்ந்தார். கட்சி நடவடிக்கைகளும் இக்காலகட்டத்தில் மந்த நிலையிலேயே இருந்தன. கார்த்திகேசனின் சேவையை மக்கள் தொடர்ந்தும் பெறுவதற்காகவே அவர் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலிருந்து இளைப்பாறியபோது அவருக்கு பாடசாலை ஆசிரியர்கள் ஓர் தட்டச்சு இயந்திரத்தையும், துவிச்சக்கர வண்டியையும் அன்பளிப்புச் செய்ததுடன், கண்ணீர் மல்கிய பிரியாவிடையையும் வழங்கினர்.

1947 இலிருந்து 1963 வரை, யாழ். குடாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு அரசியல் தொழிற்சங்க, சமூக முன்னேற்ற நடவடிக்கைகளின் மூலம் பலம் வாழ்ந்த முதன்மையான இடதுசாரிக் கட்சியாக முன்னணிக்கு வந்தது. 1953 ஆகஸ்ட்டில் நடைபெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹர்த்தால் இடதுசாரிகளின் சக்தியையும், பலத்தையும் நாட்டில் துல்லியமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த ஹர்த்தாலின் பிரதிபலிப்பு 1956 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் வெளிக்காட்டியது. காலஞ்சென்ற பொன்னம்பலம் கந்தையா அவர்கள் 1956 இல் பருத்தித்துறைத் தொகுதிக்கு கட்சி சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு மட்டங்களில் கட்சியின் செயற்பாடுகளில் கார்த்திகேசன், வைத்திலிங்கம், பொன். கந்தையா, எம்.சி. சிவசுப்பிரமணியம், வீ.ஏ. கந்தசாமி, டாக்டர் க.வே. சீனிவாசகம், இராமசாமி ஐயர், சுபைர் இளங்கீரன் போன்றோர் ஈடுபட்டு வந்தனர். கட்சியின் தலைமையில், இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் அகில இலங்கை விவசாயிகள் சங்க சம்மேளனம், இலங்கை வாலிபர் சங்க சம்மேளனம், அகில இலங்கைச் சிறுபான்மைத்தமிழர் மகாசபை, பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற ஸ்தாபனங்கள் வெகுவீச்சுடன் இயங்கிவந்தன. இவற்றின் பின்னணியில் அச்சாணியாக விளங்கியவர் கார்த்திகேசனேயாவார்.

1960 களில் இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி (மாஸ்கோ சார்பு), கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் காலத்திற்குக் காலம், கருத்து வேறுபாடுகள் தோன்ற கட்சியின் பல முன்னோடி உறுப்பினர்கள், கார்த்திகேசன் உட்பட, வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்றனர். இந்நிகழ்வு கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு ஒரு பெரும்தாக்கமும் நஷ்டமுமாகும். இவற்றினால் கார்த்திகேசன் மிகவும் மனமுடைந்தேயிருந்தார். எவ்வாறிருப்பினும் அவர் இறக்கும் வரை பல்வேறு கட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தோருடன் தொடர்புகளை வைத்திருந்ததோடு அவர்களின் சுகதுக்கங்களில் கலந்துகொள்வதை பழக்கமும் வழக்கமுமாக கொண்டிருந்தார்.

கார்த்திகேசன் மறைந்து 31 ஆண்டுகள் கழிந்திருக்கும் இவ்வேளையில் மார்க்ஸிசவாதிகளான எமக்கு அவரது வாழ்க்கை ஓர் முன்னோடி உதாரணமாகும். மார்க்ஸிச தத்துவம் என்றும் அழியாதது. மனித குலமிருக்கும் வரை நிலைத்திருக்கும். கார்த்திகேசன் மார்க்ஸிசத்திற்கு அளித்த பங்கு என்றும் இலங்கையிலுள்ள தற்போதைய வருங்காலத்தைய மார்க்சிஸ்ட்டுகளால் நினைவுகூரப்படும்.