காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகை:கருப்பு தினம் அனுசரிக்கும் இடதுசாரிகள்.

04.09.2008.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசின் கையெழுத்தைப் பெறுவதற்காக அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் மெக்கார்மார்க் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளியன்று இந்தியா செல்லும் காண்டலீசா ரைஸ், பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிப்பார் என்று கூறினார்.

ரைஸின் இந்தியப் பயணத்தின் போது அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது என மெக்கார்மார்க் பதிலளித்தார்.

எனினும், ரைஸின் இந்திய பயணத்தில் அணு சக்தி ஒ‌த்துழை‌ப்பு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என டெல்லியில் உள்ள அரசு வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் வருவதை கண்டித்து இன்று கருப்பு தினமாக அனுசரிப்பதாக இடதுசாரிகள் ெதரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் இன்று டெல்லி வருகிறார். இதை எதிர்த்தும், அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் அக்டோபர் 4 சனிக்கிழமை நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் கறுப்பு தினம் கடைப்பிடிக்கின்றன. கறுப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றப்படுகிறது.

தமிழகத்தில் அக். 4ம்தேதி கறுப்பு தினத்தை முழுமையாக கடைப்பிடிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு மையங்களில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்புக்கொடி ஏந்தியும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தியாவின் நலனுக்கு முற்றிலும் எதிரான அமெரிக்காவுடனான உடன்பாட்டிற்கு எதிராக தமிழகத்தின் குரல் வீறுகொண்டு ஒலிக்கட்டும் என்றும் இந்த மகத்தான தேச பக்த போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.