காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுமாறு செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தல்!

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலமை, சுதந்திரத்தன்மை, தொண்டுபுரிதல், ஒற்றுமை, பரந்த வியாபகம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூறிக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கடத்தி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் முகமாக ‘காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுங்கள்’ என அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை  மக்கள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது 1863ஆம் ஆண்டு ஹென்றி டியூனானட் என்பவரால் போர்க்களத்தில் காயமடையும் இராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் முகமாக உருவாக்கப்பட்டிருப்பினும், இவ்வமைப்பானது யுத்தம் நடைபெற்று வரும் பல நாடுகளில் பொதுமக்களுக்கு தொண்டு புரிந்ததனூடாக புலனாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தமைக்கான ஆதாரங்களும் பலவுண்டு.

அந்தவகையில், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திலும் பல தொண்டுப் பணிகளை ஆற்றிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்களைத் திரட்டியிருந்ததுடன், பதிவுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  குறித்த தொண்டு அமைப்பானது, முதலில் மேற்கொண்ட பதிவுகளை விடுத்து மீண்டும் ,  மீண்டும் எதற்காக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற கேள்வியும் மக்கள் மனதில் தொக்கி நிற்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய குறித்த அமைப்பானது,  நொந்துபோயுள்ள உறவுகளை நோக்கி கடத்தப்பட்டவர்களை நினைத்து மரங்களை நாட்டுங்கள் எனக் கூறுவது பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களது போராட்டத்தையும் கேலிக்குள்ளாக்கும் செயலாகும்.

தீர்வைப் பெற்றுத் தரும் என மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு தொண்டு அமைப்பு, பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் மீண்டும் விபரங்களைத் திரட்டி என்ன செய்யப்போகின்றது? குறித்த அமைப்பும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றதா என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில்  தோற்றுவித்துள்ளது.