கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசர இடைக்கால அறிக்கை !

கடந்த மே மாதம் ஜனாதிபதியினால், “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு” நியமிக்கப்பட்டு அதன் பணியினை ஆறு மாத காலப்பகுதியில் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆணைக்குழு கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இதுவரை 17 அமர்வுகளை நடாத்தியிருக்கிறது.

தமக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்கு முன்பாக கடந்த வாரம் ஆணைக்குழு ஜனாதிபதியைச் சந்தித்து இடைக்கால அறிக்கையொன்றைக் கையளித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்கேற்க இருக்கின்ற நிலையில் அங்கு தமது பக்க நியாயங்களை வலுப்படுத்த இந்த அறிக்கையைப் பயன்படுத்தலாம் என்ற வகையிலேயே இந்த இடைக்கால அறிக்கை பெறப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன் ஐ.நா சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருந்த வேளையிலேயே இலங்கை விவகாரம் தொடர்பாக நியமித்திருந்த நிபுணர் குழு பணிகளை ஆரம்பித்துவைத்திருந்தார்.

அதனை எதிர்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை பயன்படுத்தப்படாலம் என்று நம்பப்படுகிறது.

இதே வேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளிற்கு சர்வதேச ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா ஜனாதிபதியுடன் ஐ.நா சபைக் கூட்டத்தொடருக்குச் சென்ற பரிவாரங்களுடன் சென்றிருக்கிறார். அரசு பக்கம் சென்றதற்கான பயனை அவர் பெற்றிருக்கிறார்.

தகவல் : விஜய்