கருத்தரங்கும் ‘2010 தமிழ் மலர்’ வெளியீடும்:செம்மொழி மாநாட்டுக்கு மறுபுறம்

 கோவையில் ஜூன் இறுதி வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் கலாச்சார மரபுகளுக்கு ஒப்ப, திரைப்படத்தின் காட்சிகள் போல பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

 ஜனரஞ்சக திரைப்பட இயக்குனரான கௌதம் மேனன் காட்சிப்படுத்திக் கொடுக்க, செம்மொழி மாநாட்டுப் பாடல் ரஹ்மானின் இசையமைப்பில் வெளியாகி இருக்கிறது.

 திரைப்பட, திராவிட முன்னேற்றக் கவிஞர்களின் பங்குபற்றுதலில் விழா களைகட்டியிருக்கிறது. நிகழ்ச்சி நிரல் கூட வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் விழா மலரும் வெளியிடப் பெறுகிறது.

 இந்தச் செம்மொழி விழாவில் தமிழ் கலாச்சார வாழ்வைக் கடந்த முப்பதாண்டு காலம் பாதித்து வந்திருக்கிற சிறுபத்திரிக்கை இயக்கப் படைப்பாளிகளோ சிந்தனையார்களோ பங்கு பெற்றவில்லை. தத்தமது அளவில் தமது மாறுபாட்டை தமிழ் இலக்கியப் பத்திரிக்கைகளில் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

 இத்தகையதொரு சூழலில் தமது ஆத்ம வேதனையையும் மறுப்பையும் படைப்பு வெளியில் ஆக்கபூர்வமாக முன்வைக்கும் ஒரு வெளிப்பாடாக உலகெங்குமுள்ள தமிழ் படைப்பாளிகளினதும், ஆய்வாளர்களினதும் எழுத்துக்களைக் கொண்ட 400 பக்கத்துக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட தொகுப்பு மலர் ஒன்றினை கோவை ஞானி செம்மொழி மாநாடு நடைபெறும் அதே கோவை நசகரில் வெளியிடுகிறார். மலரது விலை 250 ரூபாய்கள். கருத்தரங்க மண்டபத்தில் மலர் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்திருக்கிறார்கள்.

 அதனையொட்டி 13.06.2010 ஞாயிறு அன்று கோவையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கும் நடைபெறுகிறது. தமிழ்நேயம் சஞ்சிகை இந்த நிகழ்ச்சியை ஒன்றிணைந்து நடத்துகின்றது.

 தமிழ் ஆய்வாளர்களும்; விமர்சகர்களுமான கோவை ஞானி, பூரணச்சந்திரன், சிறுகதைப் படைப்பாளிகளான இராஜேந்திர சோழன், பா.செயப்பிரகாசம், தமிழ்க் கல்வியாளர்களான ம.ரா.போ.குருசாமி, கண. குருஞ்சி மற்றும் அருள்திரு பிலிப் சுதாகர், மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரயர் ப.மருதநாயகம் போன்றவர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கு கொண்டு உரையாற்றுகிறார்கள்.

 அனைவரையும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டளர்கள் அழைக்கிறார்கள்.

8 thoughts on “கருத்தரங்கும் ‘2010 தமிழ் மலர்’ வெளியீடும்:செம்மொழி மாநாட்டுக்கு மறுபுறம்”

 1. தமிழ் நண்பர்களுக்கு,

  செம்மொழி மாநாடு விளம்பரத்தை பார்த்த பிறகுதான் புரிந்தது நமது தமிழ் மொழியில் மாதங்களுக்கு தமிழில் பெயரில்லை என்று, ஆங்கில மாதத்தின் பெயரான ஜூன் என்பதை சூன் என்று இரவல் பெற்று சொல்ல வேண்டியிருகிறது, எனவே மாநாடு முடிந்தவுடனேயே நமது செம்மொழியாம் தமிழ் மொழியில் மாதங்களுக்கு பெயர் சூட்ட வேண்டும்.

  அன்புடன்
  ம. லோகேஸ்வரன்
  சூன் மாதத்தில் வரைந்த மின்னஞ்சல்

 2. ஆமாம் .
  அப்படியே வள்ளூவராண்டு (கருணாநிதி திருத்திய) கலன்டர்ப் படியே எல்லா நாட்களையும் குறிப்பிடலாம்.
  பிறகென்ன, தமிழருக்குப் பொற்காலம் தான்!

 3. தை, மாசி,பங்குனி என்ரெல்லாம் தமிழிலேயே பெயர்கள் உண்டே ஆனால் அவதான் அரைகுறகளூக்கு புரிவதில்லையே??

 4. தமிழை கொச்சையாக பாடும் ரகுமான் யுவன் சாகர் ராஜாவின் இசையில் செம்மொழி பாடல் .ஓஒ லா ல்லா …நல்ல முனேற்றம் .

  1. தமிழே தெரியாதவ்ர்களை நாடுகடந்த அரசில் அங்கத்தவராக் தெரிவு செய்துள்ள் போது
   கொச்சைத்தமிழ் பெரிய விடயமல்ல். துரை

   1. ஓ அப்படியென்றால் இது கொச்சை தமிழ் வளர்க்கும் மாநாடு போல அப்படி என்றால் சரி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  2. எங்களில் யாருமே மூத்த தலைமுறையினராயின் “ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ டும்கானா” மாதிரியான பல பாடல்களை ரசிக்காதவர்களா?
   இளைய தலைமுறையினராயின் இன்று பாடப் படும் பாடல்களில் பெரும்பாலானவற்றைக் கேட்டால் காதைப் பொத்திக் கொள்பவர்களா?
   ரகுமானின் பேச்சுத் தமிழ் உச்சரிப்பு ஒன்றும் மோசமானதில்லை. சினிமாப் பாட்டு அப்படி ஒரு வணிகமாகி விட்டது.

   கண்டசாலாவுக்கு தமிழ் உச்சரிப்பில் சில பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப் பட்ட பாடகர் அவர்.
   ஜமுனாராணியின் சிங்கள உச்சரிப்பு சுத்தமானதல்ல. ஆனால் இன்றும் அவருடைய பாடல்கட்குச் சிங்களவரிடையே மரியாதை உண்டு.

   நாம் வெவ்வேறு பிரச்சனைகளைக் குழப்பிக் கொள்ளுகிறோம் என்று நினைக்கிறேன். சுத்தத் தமிழ் உச்சரிப்பை வலியுறுத்துவோரில் எத்தனை பேரால் மனச்சாட்சிக்குப் பகை இல்லாமல் தங்கள் உச்சரிப்பு செம்மையானது என்று சொல்ல இயலும்?

   இளையராஜாவோ யுவன் சங்கர் ராஜாவோ ரகுமானோ தமிழக முதல்வரைப் பகைக்க விரும்ப மாட்டார்கள். அது தொழிலுக்குக் கேடு. பயப்படத் தேவையில்லாத இலங்கைப் பேராசிரியர்களும் தமிழகப் பேரசிரியர்களும் ஒத்தூதும் போது சினிமா என்ற மாய உலகம் எங்கே?

 5. குழ்ந்தை கூப்பிடுவதும், மனைவி பேசுவதும் மனதை மயக்கும் தமிழ்.தமிழைப் பிள்ளத்தமிழ் இசைத்தமிழ் என்றல்லாம் அழைத்து இன்பம் கொள்ளலாம்.என் காதல் சொல்லநேரமில்லை என யுவன் பாடுவ்தும் மனதின் உள் சென்றூ ஒருவித இனப் உண்ர்வையே எற்படுத்துகிறது.நமீதா தமிழ், குஸ்பூ தமிழ் என் எத்தனை வகைப்பட்டாலும் தாய்மொழி எப்போதும் தேன் அமுதமே.

Comments are closed.