கருணா, டக்ளஸ் தவிர்ந்த தமிழ்க்கட்சி அலுவலக, தனிநபர் பாதுகாப்புக்கள் திடீரென இரத்து!

 SRILANKA/ தமிழ் கட்சிகள் பலவற்றிற்கும், இயக்கங்களுக்கும் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த காவற்துறைப் பாதுகாப்புக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 1987களின் பின்னர், கடந்த பல வருடங்களாகவே வடக்கு கிழக்கில் இயங்கிவந்த அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் என்பவற்றின் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவற்துறைப் பாதுகாப்பை அரசாங்கம் மீளப் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.

24 மணிநேர தொடர் பாதுகாப்பைப் பெற்றுவந்த இந்தக் கட்சி, இயக்க, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அலுவலகங்களுக்கான காவல்துறைப் பாதுகாப்பு நேற்று (05) அதிகாலை முதல் வழங்கப்படவில்லை. இந்தப் பாதுகாப்புக்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு காவல்துறைமா  அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

புளொட் என்ற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம்;, ஸ்ரீரெலோ, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கான காவற்துறைப்பாதுகாப்புக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுகு என்ற சிறீதரன், ஸ்ரீரெலோவின் தலைவர் உதயன் ஆகியோரது எம்.எஸ்.டீ என்ற அமைச்சரவைப் பாதுகாப்புக்கள் தொடர்வதாகத் தெரியவருகிறது.

 எனினும் சில வேளைகளில் தனக்கான தனிப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்படலாம் என பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுகு என்ற ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இவைத்தவிர ரி.எம்.வி.பி, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் அலுவலகப் பாதுகாப்புகளும் பிரமுகர்களின் பாதுகாப்புக்களும் தொடர்வதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், ஆகியோரது அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காவற்துறைப் பாதுகாப்பு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளமை நினைவுட்டத்தக்கது.