கருணாநிதி தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் : பெ.மணியரசன்.

தமிழக மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதை விமர்சனம் செய்து பேசிய சீமானை சிறையிலடைத்திருக்கும் நிலையில் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழக அரசு சிறைப்படுத்திய செயல் கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயல் மட்டுமில்லை, தமிழ் இன எதிர்ப்புச் செயலுமாகும். தமிழக அரசின் இந்த பாசிச – தமிழின எதிர்ப்புச் செயல்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே இரு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் வழக்கம்போல் அடித்துத் துன்புறுத்தினர். செல்லப்பன் என்ற மீனவரை அடித்தே கொன்றனர். மீன்கள், மீன் வலைகள், உணவுப்பொருட்கள் முதலிய அனைத்தையும் கடலில் வீசினர். ஒரு படகில் இருந்த மீனவர்களின் உடைகளைக் களைந்து கடலில் வீசிவிட்டு அவர்களை அம்மணமாக அனுப்பினர்.எல்லைதாண்டி வந்து சென்னைக்கு அருகே அடிக்கடி மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களைத் தமிழகக்காவல் துறை இப்படித் துன்புறுத்துவதில்லை. கண்ணியமாக கைது செய்து பின்னர் விடுதலை செய்கிறார்கள்.தமிழக மீனவரை இனப்படுகொலை செய்வதையும், சிங்களரின் இதர அட்டூழியங்களையும் கண்டித்துப் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன.மேற்கண்ட சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டித்து 10.07.2010 அன்று சென்னையில் நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்தால் தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு அவரைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசின் இச்செயல் கருத்துரிமையை மறுக்கும் பாசிசச் செயல்மட்டுமில்லை, தமிழர் எதிர்ப்புச் செயலுமாகும்.10.07.2010 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் துரை முருகன் சில சிறு சிறு அமைப்பினர்;, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் பேச்சுரிமை என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றி ஒடுக்குவோம் என்று கூறினார்.சீமானும், தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத் தமிழர் உரிமைகளுக்காகவும் கொடுக்கும் குரல் எந்த சட்டம் ஒழுங்குச் சீர்குலைவையும் ஏற்படுத்தவில்லை. இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழ், தமிழர் பெருமைகளைப் பேசிய ஓசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தமிழர் கடல் பகுதியில் தமிழக மீனவரைச் சிங்களர் அடித்துக் கொல்வதும் அதைக் கண்டித்தோரை கருணாநிதி சிறையில் அடைப்பதும் இட்லரின் பாசிச நாடகத்தைத்தான் நினைவுட்டுகிறது.1933-ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்சித்தலைவராக இருந்த இட்லர், அவ்வாண்டின் மே நாள் விழாவை லட்சக்கணக்கான உழைக்கும் மக்களைக் திரட்டி நடத்திவிட்டு, விடிவதற்குள் தொழிற்சங்கங்களைத் தடைசெய்ய ஆணையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தார்.செம்மொழி மாநாடு நடத்தியவுடன் தமிழ் இனஉரிமை அமைப்புகள் மீது அடக்குமுறை ஏவப் புதிய சட்டம் கொண்டு வருவோம் என்று உறுமுவதும் சீமானைச் சிறையிலடைத்ததும் இட்லரைத்தான் நினைவூட்டுகின்றன.தமிழ்நாட்டுக் காவல்துறையை சிங்கள இராணுவத்தின் புறக்காவல்; படையாகக் கருணாநிதி மாற்றி வருவதையே அவரது அணுகுமுறைகளும் அடக்குமுறைகளும் காட்டுகின்றன. இந்த முயற்சியில் அவர் தோல்வியைத்தான் தழுவுவார். மேலும் மேலும் அவர் தமிழ் மக்களிடம் தனிமைப்படுவார்.வரலாற்றின் படிப்பிணைகளை ஏற்று, கலைஞர் கருணாநிதி , தமது தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், தோழர் சீமானையும், அவருடன் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

3 thoughts on “கருணாநிதி தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் : பெ.மணியரசன்.”

  1. வணக்கம் மணீயரசன் அவர்களே, தமிழ் இன உணர்வாளர் சீமான் ஒரு பயங்கரவாதி போன்றூ பேசியதால் உள்ளே இருக்கிறார் விளங்கியும் விளங்காமலும் பேசும் நீங்கள் மேடையில் நிற்கிறீர்கள்.உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் கே.பி.போன்றோரை விட்டு விட்டு சிங்களவ்ர் என்பதால் கொல்லுவென் என்ப்து பொதுவுடமைச் சிததாத்தந்திற்கே விரோதமானது.தவறூ நம்மிடம் இருக்கும்போது நாம் அதத் திருத்த வேண்டாமா?

  2. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் கருணாநிதி மட்டும் உத்தமரோ !?

    1. கருணாநிதி உத்தமரோ இறவனோ அல்ல தமிழர் தமிழ்க் கவி,தமிழ் அறீஜர்.நம் உடலிலே ஓடும் உணர்வைப் போன்றவர்.

Comments are closed.