கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி!: ஐ.நா.அறிக்கை.

warsr5போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை கண்டறியப்பட்டாக வேண்டும்.
அதனை கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி. அவ்வாறு செய்தால் சில காலத்தின் பின்னர் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளியன்று இங்கு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் லியன் பாஸ் கோவின் விஜயம் தொடர்பாக ஐ.நா. நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த விவகாரத்தில் இலங்கை உண்மையைக் கண்டறிவதற்கும், பொறுப்புக் கூறுவதற்கும் தேசிய ரீதியான செயற்பாட்டில் ஈடுபடுவதே விரும்பத்தக்கது, பொருத்தமானது  என்று நாம் கருதுகின்றோம்.

  உண்மையைக் கண்டறியும் செயற்பாடு மனப்பூர்வமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் சுயேச்சையானதாகவும் அமைய வேண்டும்.
  கடந்த காலத்தை மூடி மறைப்பது மிகவும் கடினம் என்று லியன் பாஸ்கோ கூறியதாக ஐ.நாவின் நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பொறுப்புக் கூறும் செயன் முறை  பொறிமுறை  ஒன்றை அமைக்குமாறு அரசியல் விவகார பிரதிச் செயலாளர் பாஸ்கோ   இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய  பேச்சு வார்த்தையின் போது கேட்டிருக்கிறார் என்றும் நேற்றைய ஐ.நா அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
  
இலங்கைத் தீவின் எதிர்காலத்திற்கு தேசிய நல்லிணக்கம் மிகமிக முக்கியமானது; இன்றியமையாதது.
 
 உலகின் பல நாடுகளிலும் நிலவிய பிரச்சனைகளுக்கு, முரண்பாடுகளுக்குப் பின்னரான காலங்களைச் சீராக்குவதில் ஐ.நா தன்னை பொறுப்புணர்ச்சியுடன் ஈடுபடுத்திச் செயற்பட்டுள்ளது. பகைமையைக் கைவிட்டு முன்னோக்கிச் சென்று அமைதியைக் கட்டியெழுப் புவதற்குப் பொறுப்புக்கூறும் வழிமுறை மிக அவசியம் என்பதனை அனுபவத்தில், அணுகுமுறையில் அது கண்டறிந்துள்ளது.
இதனை எந்த நாடும் புறம் ஒதுக்குவதோ புறக்கணிப்பதோ நல்ல எதிர்காலத்தைக் காண்பதற்குத் தடையாகவே இருக்கும் என்பது உணர்ந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். என்றும் அந்த அறிக்கை விவரிக்கின்றது.