கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு இலங்கையில் தடை!

 கபே அமைப்பின் உத்தியோகபுர்வ  இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக்கூடியஅனைத்துவழிகளுக்கும்இடையூறு  ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்சி  இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூடிய விரைவில் இந்த நிலைமையை சரி செய்து தகவல் அறியும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 
கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு நடந்துமுடிந்த பல தேர்தல்களின் போதும் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. முதன் முறையாகவே ஃபொரொக்சி இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடுவது தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட இணையத்தளமான கபே இணையத்தளத்திற்கு இயற்கையாக குறுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது திட்டமிட்டதும் மிகவும் நுட்பமான முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தடை என கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் மோசடிகள், முறைகேடுகள், வன்முறைகள், தேர்தல் சட்டங்களை மீறியமை, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் வாக்காளர்களைத் தெளிவுபடுத்துவதற்காக கபே அமைப்பு இந்த இணையத்தளத்தை ஆரம்பித்தது. இதனைப் பொருத்துக்கொள்ள முடியாத சிலர் இதற்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக நம்புவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த சீர்குலைப்பு நடவடிக்கையைத் தடுப்பதற்காக கபே அமைப்பு தனது உச்ச சக்தியைப் பயன்படுத்தி மீண்டும் இணையத்தளத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.