கண்காணிப்புக் குழுவின் கோவைகள் : நோர்வே ஆவணக்காப்பகத்தில்

ஓரிரு அதிகாரிகளுடன் மாத்திரம் நோர்வேயில் இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவுள்ள நிலையில்,

இலங்கையில் கண்காணிப்புக்குழு பணிபுரிந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட கோவைகள் மற்றும் தரவுகளை நோர்வே தேசிய ஆவணக்காப்பகத்தில் வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஆவணங்களிலுள்ள இரகசிய தகவல்களைப் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்படும் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கணக்குகள் உள்ளிட்ட அதிகாரபூர்வமானதும் உண்மையானதுமான தகவல்களை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கண்காணிப்புக் குழு, ஆய்வாளர்கள், மதிப்பீட்டாளர்கள்,

அரசியல்வாதிகள், உள்ளிட்ட சகலருக்கும் சிறந்த தகவல் மூலமாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தத் தகவல்கள் கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்திலும் பதிவுசெய்யப்படும் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைமையகத்தின் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும், இந்த அறிக்கைகள் 2008 நவம்பர் மாதத்தில் தயாராகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.