கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு: டக்ளஸ் தேவானந்தா

Friday, July 18, 2008

கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவர் ஈ.பி.டி.பி.யின் செங்கல்லடி அலுவலக வளாகத்துக்குள் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது திட்டமிட்ட குற்றச்சாட்டு என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி மட்டக்களப்பு ஆண்டான் குளத்தைச் சேர்ந்த வர்த்தகரான தேவதாஸ் சுரேஷ்குமார் (35) என்பவர் வெள்ளைவான் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தார். இவர் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு செங்கல்லடி ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஈ.பி.டி.பி.யிலிருந்து விலகிச்சென்றவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்தச் சடலத்தை மீட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், தமது அமைப்பு மீது திட்டமிட்டே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதாக பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சடலம் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் காணியை தமது அமைப்பு தற்பொழுது பயன்படுத்துவதில்லையெனக் கூறியிருந்தார்.

தமது உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதுடன், சடலத்தைப் பொலிஸார் அண்மையில் மீட்டிருந்ததாகவும், இந்த நிலையில் தமது அலுவலக வளாகத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது வேண்டுமென்றே தமது கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு எனவும் டக்ளஸ் தேவானந்தா பி.பி.சி.க்கு  தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாகப் பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்கவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியிருந்தார்.