கடும் காற்றினால் இடைத்தங்கல் முகாம்களில் 2000 குடில்கள் சேதமடைந்தன .

camp கடும் காற்றினால் வவுனியாவிலுள்ள சுமார் இரண்டாயிரம் தற்காலிக குடில்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. போரின் பின்னர் வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடில்கல்கள் சக்திவாய்ந்தவையல்ல எனவும், இதனால் எதிர்வரும் நாட்களில் பருவப் பெயர்ச்சி காலநிலையின் போது இதனைவிட மோசமான நிலை முகாம்களில் ஏற்படும் எனவும் தொண்டு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

எவ்வாறாயினும், தற்போது வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக நாட்டின் வேறு சில நகரங்களிலும் நேற்றுமுன்தினம் வீடுகள் சேதமடைந்திருந்தன. இந்த நிலையில், இவ்வாறான சீரற்ற காலநிலைக்கு முகாம் குடில்கள்  எந்தவிதத்தில் தாக்குப்பிடிக்கக் கூடியவையல்ல எனத்தெரியவருகிறது.

சேதமடைந்த சுமார் 2000 குடில்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்வதில் தற்போது தொண்டு நிறுவனங்கள் அவசரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது