ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியம்: இந்திய உயர் மட்டக்குழு

தான் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவினால் அழுத்தம் கொடுக்க முடியும். இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று இலங்கை வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு வந்திருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ விஜய்சிங் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தனர்.

இவர்களில் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் சனிக்கிழமை தமிழ்க் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினர். இதன் போதே, தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் “புளொட்’ அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா. சம்பந்தன் எம்.பி. ஆகியோரைச் சந்தித்து இந்திய உயர் மட்டக் குழுவினர் பேச்சவார்த்தை நடத்தியிருந்தனர்.

இச் சந்திப்பில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சசின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரி குருமூர்த்தி மற்றும் தூதுவர் அலோக் பிரசாத், பிரதித் தூதுவர் என். மாணிக்கம் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

“புளொட்’ அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுடனான சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்மட்டக் குழுவினர், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒற்றறுமைப்பட வேண்டியது அவசியம். தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நின்று செயற்பட்டால் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவினால் அழுத்தத்தைக் கொடுக்க முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளனர். இலங்கையில் வாழும் தமிழ்ச் சமூகம் சகல வழிகளிலும் பின்தள்ளப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா தான் தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவுள்ளது. எனவே, உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க இந்தியா உதவவேண்டும் என்று இச் சந்திப்பில் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மற்றும் யுத்தத்தின் தற்போதைய நிலை குறித்தும் தமிழ்க் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இந்திய உயர்மட்டக் குழுவினர் கேட்டறிந்துள்ளனர்.