ஒப்பாரும் , மிக்காருமற்ற நடிகை திருமதி மனோரமா: T .சௌந்தர்

manoramaதமிழ் சினிமாவின் மிகத்திறமை வாய்ந்த நடிகையாகத் திகழ்ந்தவர் மனோரமா அவர்கள்.

இறந்த ஒருவர் பற்றி ஒப்புக்கு சொல்லும் கருத்தல்ல இது. நிதானமாக அவர் நடித்த கதாபாத்திரங்களை அலசும் யாரும் வந்தடையும் முடிவு இதுவாகத்தானிருக்கும்.

தனது பால்யவயதில் குடும்பத்தின் வறுமையால் “பாய்ஸ் ” நாடகக் கம்பனியில் சேர்ந்து , பல இன்னல்களுக்கு மத்தியில் சினிமாவில் நுழைந்து பல கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மனோரமா.

நடிப்பில் மிகவும் கடினமாதாகக் கருதப்படும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து , தன்னை சிறந்த நகைச்சுவை நடிகையாக வளர்த்து பிரபலமடைந்த அவர் சிறந்த குணசித்திர நடிகையாகவும் நல்ல பாடகியாகவும் பரிணமித்தார்.அதுமட்டுமல்ல தமிழகத்தின் எல்லா வட்டார வழக்குகளையும் மிக இயல்பாக பேசி நடிக்கும் பேராற்றலையும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

சினிமாவில் அவர் ஏற்று நடித்த குணசித்திர பாத்திரங்களில் நாம் மனோரமாவை காண முடியாதவாறு அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறியிருப்பார்.எத்தனையோ எண்ணற்ற பாத்திரங்களை ஏற்று நடித்து நம் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சினிமா மட்டுமல்ல தன்னை வளர்த்த நாடக அரங்குகளிலும் அவர் முனைப்புடன் செயல்பட்டார்.அதுமட்டுமல்ல தொலைக்காட்சி நாடங்களிலும் நடித்து பெரும் புகழ் ஈட்டினார்.

கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் தூரதர்சன் தொலைக்காட்சியில் வெளியான ” என் வீடு ,என் கணவன் ,என் குழந்தை ” என்ற நாடகம் அவரின் ஒப்பற்ற நடிப்புக்கு மகுடம் சூட்டியது.அந்த நாடகத்தைபார்த்த எண்ணற்ற ரசிகர்கள் மனோரமாவின் நடிப்பையே பாராட்டி தனக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் ,அதை பார்த்த வெளிநாட்டு ரசிகர்கள் பலரும் அந்த தொலைகாட்சி நாடகத்தின் பிரதி கேட்டு தன்னிடம் தொடர்பு கொண்டதாகவும் அதை இயக்கிய கோமல் சுவாமிநாதன் 1990 களில் வியந்து எழுதியிருந்தார்.

சுபமங்களா இதழில் கோமல் , தான் இயக்கிய அந்த நாடகம் பற்றியும் அதில் அன்னபூரணி என்ற கதா பாத்திரத்தில் நடித்த மனோரமா பற்றியும் வியந்து பாராடி எழுதியமை என் நினைவுக்கு வருகிறது.

அதுமட்டுமல்ல மனோரமாவின் தொழில் பக்தி , நேரம் தவறாமை , நடிப்பில் அவருக்கு இருந்த தாகம்
போன்றவற்றையும் பலரும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்கள்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் பல ஜாம்பவான்களுடன் இணைந்து தனி ஒளி காட்டிய நடிப்பை யாரால் மறக்க முடியும்.

நடிப்பு மட்டுமல்ல தனித்தன்மை மிகுந்த பாடகியாகவும் விளங்கினார் மனோரமா.அவர் பாடிய “தெரியாதோ நோக்கு தெரியாதோ” [ சூரியகாந்தி 1973] , ” பார்த்தாலே தெரியாதோ நோக்கு அடியே சரசு ” [ ஸ்ரீ ராகவேந்திரா 1985] போன்ற மகத்தான வெற்றிப்பாடல்களை யாரால் மறக்க முடியும்!?

பிறவிக்கலைஞரானஅவரது இழப்பு நல்ல ரசிகர்களுக்கு மாபெரும் இழப்பு!