ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவோம்: அமெரிக்கா

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முழுமையாக முயற்சிப்போம் என்று வாஷிங்டன் கூறியுள்ளது.

அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) கண்காணிப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு அணு தொழில்நுட்ப வணிகக் குழு (Nuclear Suppliers Group-NSG) ஒப்புதல் அளித்த பின்னரே இறுதி ஒப்புதலிற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தை அணுக முடியும் என்றும், ஆனால் அதற்கான கால அவகாசம் மிகவும் நெருக்கடியாக உள்ளதெனவும் அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் ஷான் மெக்கார்மெக் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷான் மெக்கார்மெக், “இந்தியா மேற்கொண்டுள்ள இந்த முக்கிய முடிவுகள் அதன் அணு சக்தி திட்டத்திலும், அமெரிக்காவுடனான அதன் உறவிலும், சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்” என்று கூறியுள்ளார்.

“இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் கூட்டத்தில் விவாதிப்போம், இந்தியாவிற்காக அணுத் தொழில்நுட்ப வணிகக் குழுவிலும் பேசுவோம்” என்று கூறிய ஷான் மெக்கார்மெக், “தங்களது தேச நலனை கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இந்திய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மக்கள் மீதும், இந்தியா மீதும் நாம் கொண்டுள்ள பெரும் மரியாதையை மட்டுமல்ல, இநதியாவோடு எதிர்கால நோக்கில் ஒரு நல்லுறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம்” என்று கூறியுள்ளார்.

இப்பிரச்சனையில் இந்தியாவில் ஏற்பட்டுவரும் அரசியல் நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷான் மெக்கார்மெக், அது முழுக்க முழுக்க இந்திய அரசியல் தொடர்பானது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்ளும் முடிவுகள் அனைத்தும் இந்திய அரசின் தனித்த, சுயமான முடிவுகளே என்று கூறியுள்ளார்.