ஐ.நா. நிலைப்பாடுகள் இலங்கையிலும் சூடானிலும் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதேன்?

 

ஐ.நா: தமிழர்களுக்கான அகதி முகாம்கள் சிறைச்சாலை போன்ற இடங்களாக இருப்பதாக இலங்கையின் முகாம்களுக்கு நிதியுதவி வழங்குவோர் இப்போது குறிப்பிடுகின்ற அதேவேளை, இலங்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் “”அதற்கு நான் பொறுப்பில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், ஐ.நா.வின் சொந்த ஊழியர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது என்ன மாதிரியான விடயம் என்று நியூயோர்க்கிலுள்ள “”இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வியெழுப்பியுள்ளது.இது தொடர்பாக “இன்னர் சிற்றி பிரஸ்’ஸின் நிருபர் மத்யூ ரசல்லீ தமது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருப்பதாவது;

ஐ.நா.வின் முறைமைக்குள் இருக்கும் இரு பணியாளர்கள் அடையாளம் இல்லாத வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படவில்லை. கந்தசாமி சௌந்தரராஜன், என். சாள்ஸ் ரவீந்திரன் ஆகிய இருவரும் விடுவிக்கப்படவில்லை. ஜூலை 10 இல் இது தொடர்பாக ஐ.நா. ஊழியர் சங்கம் பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐ.நா.வின் சகல அலுவல்களையும் விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் ஐ.நா. அதிகாரிகளின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்றும் இலங்கையை கோருமாறு பான் கீ மூனிடம் ஐ.நா. ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“”இரண்டு தேசிய அலுவலர்களை தடுத்து வைத்திருக்கும் இலங்கையின் அண்மைய நடவடிக்கையானது ஐ.நா. அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கையாக தென்படுகிறது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இது சட்டவிரோதமானதாகும். காரணமின்றி அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஐ.நா. அலுவலர்கள் அவர்களிடம் செல்வதற்கு ஆரம்பத்தில் அனுமதி நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்று ஐ.நா. ஊழியர் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஐ.நா. ஊழியர் சங்க அதிகாரிகள் இலங்கையிலுள்ள ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் யு.என்.எச்.சி.ஆர். ஐச் சேர்ந்தவருமான அமின் அவாட்டினால் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்து விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. “”இலங்கையின் பாதுகாப்புத்துறை சேவைப் பிரிவுக்கு எந்தவொரு குற்றச் செயல்கள் தொடர்பாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக எந்தவொரு தயக்கமும் இன்றி விசாரணை மேற்கொள்வதற்கான உரிமையை ஐ.நா. ஏற்றுக்கொள்கிறது. ஐ.நா. அலுவலகர்கள் உட்பட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டோரை விசாரணை செய்வதற்கு உரிமை உள்ளது. இதற்கு முழுமையான ஒத்துழைப்பை ஐ.நா. வழங்கும்’ என்று கூறியிருந்தார்.

ஐ.நா. தெரிவிப்பவை எவ்வாறாக இருந்தாலும் உதாரணமாக சூடானில் ஐ.நா.வின் பணியாளர்களுக்கு சிறப்பு விடுகை உள்ளது. உண்மையில் சூடானில் ஐ.நா. முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன் சிறப்பு விடுகையானது தேசிய பணியாளர்கள் மட்டத்திற்கு நீடித்து காணப்படுகிறது.

“”நியூயோர்க்கில் ஐ.நா. பேச்சாளர் மேரி ஒகாபே கூறுகையில்; கார்ட்டோமிலுள்ள ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஐ.நா. சூடான் உடன்படிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, அங்குள்ள ஐ.நா. தூதுக்குழுவின் அந்தஸ்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இந்த மாதிரியான விடயங்களில் தேசிய சட்டங்கள் பிரயோகிக்கப்படும் போது அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று ஒகாபே கூறியுள்ளார். சட்ட நடவடிக்கைகள் தூதுக்குழுவின் உறுப்பினர்கள் சிறப்பு விடுகைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதே அந்த உடன்படிக்கையின் அர்த்தம் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கையிலும் சூடானிலும் ஐ.நா. நிலைப்பாடுகள் ஏன் வேறுபட்டவையாக உள்ளன என்று “இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வியெழுப்பியுள்ளது.