ஐ.நா. நிபுணர் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை வழக்கு

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா. பிரகடனத்தின் 6 ஆம் மற்றும் 33, 34 ஆம் உப பிரிவுகளுக்கு புறம்பான வகையில் செயலாளர் பான் கீ மூன் ஆலோசனைக் குழுவினை உருவாக்கியுள்ளதாக இலங்கை அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்குத் தொடர்வது குறித்து சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘

ஐ.நா.அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற ரீதியில், இலங்கை தொடர்பான நடவடிக்கைகளின்போது பாதுகாப்புச் சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் செயற்படக் கூடாது என சர்வதேச நீதிமன்ற நீதிபதி வான் ரேஸ்லின் கிகின்ஸ் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பான் கீ மூன், தமது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தொடரும் உலகின் முதலாவது நாடு இலங்கை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பான் கீ மூன் மீண்டும் ஐ.நா. செயலாளர் பதவியில் அமர்வதை தடுத்து நிறுத்துவதற்கு, அணி சேரா நாடுகளுடன் இணைந்து இலங்கை செயற்பட உள்ளதாக கூறப்படுகிறது.