ஐரோப்பாவில் யூரோ : ஆசியாவிலும் புதிய நாணயம்?

தெற்காசிய பிராந்தியத்தில் பொதுவான நாணயத்தை புழக்கத்தில் விடுவது தொடர்பான பேச்சுவார்த்தை பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) மாநாட்டில் ஆரம்பிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருந்தார்.

தற்போது பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) முக்கிய குழுவான நிலையியல் குழுவின் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. சார்க் உறுப்பு நாடுகளின் நாணயம் பொதுவாக பலவீனமான நிலையிலேயே உள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகமாக இருப்பதும் வருவாய் இடைவெளி அதிகரிப்புக்கு மத்திய வங்கிகள் இடமளிப்பதும் நாணய நெருக்கடியை பிராந்தியத்தில் கிரமமாக ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தான் தற்போது நாணய நெருக்கடி நிலையில் உள்ளது. கடந்த வருடம் இலங்கை மோசமான முறையில் நாணய நெருக்கடியில் சிக்குண்டது. மாலைதீவு தனது நாணயத்தை சிறந்த முறையில் வைத்துள்ளது. பிராந்தியத்தில் அதிகளவுக்கு செல்வந்த நாடாக மாலைதீவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் யூரோ எனப்படும் நாணம் புழக்கத்தில் உள்ளது போல், தெற்காசிய பிராந்தியத்தில் பொதுவான நாணயத்தை புழக்கத்தில் விடுவது தொடர்பாக சார்க் உச்சி மாநாட்டில் ஆராயப்படும் என நம்பப்படுகிறது.

இதேவேளை பங்களாதேஷ் விமான சேவையான பெஸ்ட் ஏயார் கொழும்பு – டாக்காவிற்கான முதலாவது விமான சேவையை ஆரம்பித்துள்ளது. பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இவ்விமான சேவையின் முதலாவது விமானம் தரையிறங்கியுள்ளது