ஐந்து தமிழ் டாக்டர்களின் செய்தியாளர் மகாநாடு!!!

 

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் தவறான பிரசாரங்களைச் செய்ததாகவும் இலங்கை இராணுவத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் 5 தமிழ் டாக்டர்களும் நேற்று முன்தினம் கொழும்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு குடிமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், பாதிப்புகள் குறித்து ஊடகங்களுக்குத் தவறான தகவல்களை விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரில் வெளியிட்டதாக கூறியிருக்கிறார்கள். கடந்த வாரம் சென்னை இந்து பத்திரிகைக்கு பேட்டியொன்றை அளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரகசியப் பொலிஸாரின் காவலில் இருக்கும் இந்த டாக்டர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், “செய்தியாளர் மகாநாடொன்றை ஏற்பாடு செய்து டாக்டர்கள் கூறவேண்டியிருப்பதைக் கூற அனுமதியுங்கள் என்று அதிகாரிகளைக் கேட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான ஒரு சில தினங்களில் செய்தியாளர்கள் முன்னிலையில் டாக்டர்கள் தோன்றி கூறவேண்டியிருந்ததைக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.வன்னியில் பணியாற்றிய 5 டாக்டர்களில் சத்தியமூர்த்தி, வரதராஜன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் அரசாங்க டாக்டர்கள் என்றும் சிவபாலனும் சண்முகராஜாவும் விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்த டாக்டர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்திருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தாங்கள் பணியாற்றியதால் அவர்களின் நெருக்குதல் காரணமாக குடி மக்களின் மரணங்கள் தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விபரங்களை வெளியிட்டதாகவும் அந்த விபரங்கள் விடுதலைப் புலிகளால் தங்கள் மீது திணிக்கப்பட்டதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள். செய்தியாளர்களினால் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு டாக்டர்களின் பொதுவான பதில் “விடுதலைப் புலிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டியிருந்தது’ என்பதேயாகும். முல்லைத்தீவுக் கரையோரப் பகுதியில் இறுதிக் கட்டப் போரின் போது சர்வதேச ஊடகங்களின் ஒரு பிரிவினரால் மிகுதியாகவும் மேற்கோள் காட்டப்பட்ட டாக்டர் வரதராஜன் மே 18 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட போரில் ஏப்ரில் 15 க்கும் மே 15 க்கும் இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் 350 க்கும் 400 க்கும் இடைப்பட்ட குடிமக்களே கொல்லப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

டாக்டர் வரதராஜனின் கூற்றின்படி ஜனவரிக்கு ஏப்ரில் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இன்னொரு 350 தொடக்கம் 400 வரையான குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெருமளவு அழுத்தங்களின் கீழ் எந்தநேரத்திலும் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென்ற சூழ்நிலையிலேயே தாங்கள் பணியாற்றியதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் தாங்கள் முல்லைத்தீவில் பணியாற்றியிருக்காவிட்டால் குடிமக்களின் இழப்புகள் தற்போது கூறப்பட்டிருக்கும் எண்ணிக்கையைவிடப் பலமடங்காக இருந்திருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. ஒட்டுமொத்தத்திலே முல்லைத்தீவுக் கரையோரப்பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு போரில் பலியான குடிமக்களின் எண்ணிக்கை தொடர்பில் தாங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய விபரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததைவிட மிகமிகக் குறைவான குடிமக்களே பலியாகினர் என்பதே அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மகாநாட்டில் இந்த 5 டாக்டர்களும் தெரிவித்த தகவல்களின் சாராம்சமாகும்.

சர்வதேச ஊடகங்களில் குடிமக்கள் இழப்புகள் குறித்து வெளியான புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றே அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்திருக்கிறது. அந்தச்சர்வதேச ஊடகங்களினால் மேற்கோள்காட்டப்பட்ட தமிழ் டாக்டர்கள் தற்போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்குப் பொருத்தமான கருத்தையே உலகிற்குக் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எந்தவொரு நெருக்குதலின் கீழும் தாங்கள் தற்போது இல்லையென்றும் தங்களால் உண்மையைச் சொல்லக்கூடியதாக இருக்கிறது என்றும் செய்தியாளர் மகாநாட்டில் பிரகடனம் செய்திருக்கும் டாக்டர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் விபரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை என்ன கூறப்போகிறது? போரின் இறுதிக்கட்டத்தை பெரும் இரத்தக்களரி என்று வர்ணித்த ஐ.நா. 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடிமக்கள் பலியானதாக கூறியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. போரில் முதலில் பலியாவது உண்மை என்று ஒரு பிரபல்யமான கூற்று இருக்கிறது. இதற்கு எந்தப் போரும் விதிவிலக்கில்லை. வன்னியில் பலியான உண்மையை அரசாங்கம் 5 டாக்டர்கள் மூலமாக கொழும்பில் உயிர்த்தெழவைத்திருக்கிறது….?

(Tamil Editorial -Thinakkural)

One thought on “ஐந்து தமிழ் டாக்டர்களின் செய்தியாளர் மகாநாடு!!!”

 1. அந்த மருத்துவர்களை என்ன பாடு படுத்தினார்களோ?
  அந்த இனவெறிக் கும்பலிடம் அகப்பட்டவர்கள் படும் வதைகள் வெளியுலகத்திற்கு வந்தே ஆகும்.
  அப்போது அந்த வெறி நாய்களின் கடித்துக் குதறல்கள் வெளியே வரும்.
  உலக் அமைப்புக்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காத இந்த மிருகங்களுக்கு நல்ல பாடம்
  கட்டாயம் எதிர் காலத்தில் கிடைக்கும்.
  தங்களிடம் கைதிகளாக இருந்த சிங்களவர்களைக் காப்பாற்றி கடைசிவரை காத்து ஒப்படைத்தவர்கள் போராளிகள்,மனித நேயம் படைத்தவர்கள்.
  மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பண்யம் வைத்து உயிர் காத்தார்கள்,அவர்களைக் கொடுமைப் படுத்தும் இந்த ஓநாய்கள் மிருகங்கள்.

Comments are closed.