இந்திய அரச பயங்கரவாதம் – நாம் யார் பக்கம்? : சபா நாவலன்

இந்தியா சீனா போன்ற புதிய ஆசிய வல்லரசுகள் இலங்கை அரசுடன் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலையின் இரத்ததம் உறைந்து போய்விட முன்னமே இந்தியாவெங்கும் தனது எழைக் குடிமக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற அதே போர்த்தந்திரோபாயங்களும், பிரச்சார முறமைகளும் உள்வாங்கப்பட்டு இந்தியப் புறச்சூழலுக்கு உகந்தவாறு பிரயோகிக்கப்படுகிறது. மனித அவலங்களுக்கு மத்தியில் அப்பாவி மக்கள் மந்தைகள் போல விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆந்திரா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா போன்ற மாநிலங்களெல்லாம் ஏழை மக்களில் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன. மேற்குவங்கத்தில் நூற்றுக் கணக்கானோர் அனாதைப் பிணங்களாகக் கொல்லப்பட, இன்று ஏனைய மாநிலங்களில் இராணுவமும், துணைப்படைகளும் அன்னிய தேசம் ஒன்றுடன் போர் நடைபெறுவதைப் போல குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பிஞ்சுக் குழந்தைகள், முதியவர்கள் என்று பாகுபாடின்றி இரவோடிரவாகத் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பதை ஐக்கிய நாடுகளோ, மனித உரிமை கண்காணிப்பகமோ, சர்வதேச மன்னிப்புச் சபையோ கண்டுகொண்டதில்லை. இரண்டு லட்சம் விவசாயிகள் வறுமையைத் தாங்கிக் கொள்ளாது மௌனமாய் மரணித்துப் போன “அகிம்சை” தேசத்தின் அப்பாவிகளின் அழிவுகளிலிருந்து தான் இவர்களின் ஜனநாயகம் பிறக்கும் என எதிர்பார்க்கிறார்கள் போலும்.

90 களில் பின்னர் உலகமயமாதலுக்கு இசைவாக்கமுடைய தாராளவாதக் கொள்கை அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங்கினால் வரைவாக்கம் செய்யப்பட்டது. உலக மயமாதலின் அடிப்படைக் கூறுகள் என்பனவே மலிவான உழைப்பும், பரந்த சந்தையும் என்பது தான். மலிவான உழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக ஆசிய நாடுகளை நோக்கி பெரும் வியாபார நிறுவனங்கள் நகர்ந்து செல்ல, ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் உற்பத்தி அருகிப்போய், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

நவீன உற்பத்திச் செயற்பாட்டினை தமதாக்கியுள்ள பெரும் நிறுவனங்கள் இன்று ஆசிய நாடுகளில் தாம் பெற்றுக்கொள்கின்ற மலிந்த உழைப்பை பேணிக்கொள்ள அத்தனை நடவைடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராகிவிட்டன.

மேற்கு நாடுகளில் வசதி குறைந்தோருக்கும், வேலையற்றோருக்கும் மாதாந்த மானியத் தொகை வழங்கப்படுகிறது.

மேலை நாடுகளில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட போதெல்லாம், அதனோடு கூடவே உருவான ஏழை மக்களினதும், வசதியற்றோரதும், தொழிலாளர்களதும் போராட்டங்களைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர்களுக்கு இம்மாதாந்தத் தொகை வழங்கப்பட்டது. இதனால் மகளின் வாழ்க்கைத் தரமும், வேலைக்கான ஊதியமும் உயர்வடைந்தது என்பது ஒருபுறமிருக்க அம்மானியங்களின் அரசியல் பின்புலம் என்பதே உலகமயமாதல் உருவாகக் காரணமாக அமைந்தது. மானியங்களை வழங்குவதற்காக, , மூன்றாமுலக நாடுகளில் சுரண்டிய பணம் தவிர, வியாபார நிறுவனங்களிற்கும் வரி விதிக்க வேண்டிய நிலைக்கு இந்நாடுகளில் அரசுகள் தள்ளப்பட்டன. இதனால் இந்நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்க, இவையெல்லாம் இந்தியா போன்ற நாடுகளுக்கு தம்மை மாற்றிக்கொண்டன.

இதனூடாக இந்தியா போன்ற நாடுகளில் நவீன உற்பத்தி முறை அறிமுகபடுத்தப்பட்டது ஒரு புறமிருக்க வழமை போலவே வறுமையும், வேலையற்றோர் தொகையும், அதிகரிக்க ஆரம்பித்தது. இதன் எதிர் விழைவுதான் இரண்டு லட்சம் விவசாயிகள் மூட்டைப்பூச்சிகள் போல எந்த மனிதப் பெறுமானமுமற்று தற்கொலை செய்துகொண்டார்கள். அதுவும் குறுகிய இரண்டரை வருட எல்லைக்குள்ளாகவே இந்த அவலம் நடைபெற்றிருக்கிறது.

ஐரோப்பிய அமரிக்க நாடுகளைப் போல இந்தியாவும் வியாபார நிறுவனங்களுக்கு வரி விதித்து பாதிக்கப்படும் மக்களுக்கு மானியத் தொகை வழங்கினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இந்நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் நிலைகொள்ளாது வேறு நாடுகளை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.

ஆக, சமூகத்தின் விழிம்பு நிலையிலுள்ள, வறுமையின் எல்லைக்குள் உள்ள மக்களை இல்லாதொழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது மட்டும் தான் இந்திய பெரு முதலாளின், உலக முதலாளிகளுடனான வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரே வழி.

இந்த அழிப்பு நடவடிக்கை தான் இன்று இந்தியா எங்கும் மாவோயிஸ்டுக்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டும் அங்கவீனர்களாகியும், அவர்கள் சொந்தக் குடியிருப்புக்களை விட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். சமூகத்தின் மிகவும் அடிமட்டத்திலுள்ள மக்கள் மீது பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இலங்கையில் நிகழ்வதைப் போன்று நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதலின் அரசியற் பகைப்புலம் உலகமயமாதலின் நவதாராளவாதக் கொள்கைகளில் பொதிந்துள்ளது.

இதன் முதலாவது நோக்கமாக, உலகமய வளர்ச்சிப் போக்கில் அரசிற்குப் பாரமாக அமையவல்ல கீழ் நிலை மக்களை அழித்தொழிப்பது என்பது தவிர அதனுடன் தொடர்புடைய ஏனைய நோக்கங்களும் உள்ளன.

இந்த மக்கள் பிரிவினர் வாழுகின்ற பகுதிகளெல்லாம் வளம் கொழிக்கும் பகுதிகளாக அமைந்திருக்கின்றன. அங்குள்ள வழங்களையெல்லாம் ராட்சத வியாபார நிறுவனங்கள் சுரண்டிக்கொள்வதற்காவும், அன்னிய தேச வியாபாரிகளோடு பகிந்து கொள்வதற்காகவும் மக்களை மாவோயிஸ்டுக்களுக்கு எதிரான போர் என்ற கோஷத்தின் கீழ் வெளியேற்றுகின்றது இந்திய அரசு.

பரம்பரை பரம்பரையாக அ நிலங்களின் வழங்களோடு பிணைக்கப்பட்டு வாழ்ந்த மக்கள் கூட்டத்தை, அவ்வளங்களை ஒரு சில முதலாளிகளுக்கு விற்பனை செய்வதற்காக தெருவிற்கு விரட்டியடிக்கிறது இந்திய அரச பயங்கரவாதம்.

பாதிக்கப்படும் எந்தப் பிரிவினருக்க்ம் மானியம் வழங்கத் தயாரற்ற இந்திய அரசு, பெரும் பண மூலதனத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு மானியம் வழங்கி அவர்களை மகிழ்சிப்படுத்துகிறது. மக்கள் வெளியேற்றப்பட்ட இடங்களில், சிறபுப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. நந்தி கிராமில் மக்களின் பிணங்களின் மீது டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவ முற்பட்ட போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல இந்திய அரச பயங்கரவாதத்தோடு கைகோர்த்துக் கொண்டது.

இவை அனைத்திற்கும் எதிரான இயக்கதை முன்னெடுப்பவர்கள் மாவோயிஸ்டுகள் மட்டும்தான். அரச நிர்வாகங்க இயந்திரங்களே உள்நுளையாத இந்தப் பகுதிகளிலெல்லாம் முதற்தடவையாக மக்களைக் வெளியேற்றுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் இந்திய அரச படைகள் உள்நுளைந்திருக்கின்றன.

மாவோயிஸ்டுகள் குறித்த விமர்சனங்கள் பிறிதொரு ஒரு தளத்தில் ஆராயப்படவேண்டிய சிக்கலான அரசியல் விடயம். அவர்களின் அரசியல், பரந்துபட்ட மக்களை அவர்கள் அணிதிரட்டத் தவறியமை, பெருந்திரளான மாணவர்கள், மத்திய தர வர்க்கதின் நலிவடந்த பகுதிகள் ஆகிய ஏனைய வர்க்க அணிகளை அணிதிரட்டும் வலுவான அரசியல் திட்டமின்மை, புதிய ஒழுங்கு விதி சார்ந்த அரசியல் திட்டமின்மை போன்ற பல விமர்சனங்கள் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக இன்று மாவோயிஸ்டுக்கள் அழிக்கப்படும் மக்களின் ஒரே குரலாக அமைந்திருப்பது என்பது குறித்துக்காட்டப்பட வேண்டும்.

இலங்கையில் இந்திய அரச பயங்கரவாதம் நிகழ்த்திய இனப்படுகொலை இவற்றிற்கெல்லம் ஒரு பரிசோதனை கூடம்; உரைகல். இதனடிப்படையில் தான் இன்று மாவோயிஸ்டுக்கள் தாக்கப்படுகிறார்கள்.

மாவோயிஸ்டுகளுக்கும் மக்களுக்கும் எதிரான போராட்டம் இந்திய அரசின் நோக்கங்களின் அடிப்படையிலிருந்து வெல்லப்படுமாயின், இதன் அடுத்த நிகழ்வாக எந்த எதிர்ப்புமின்றி இந்திய அரசு அனைத்து எதிர்ப்பியக்கங்கள் மீதும் தனது தாக்குதலை ஆரம்பிக்கும். எதிர்ப்பரசியல் என்பதே சாத்தியமற்ற இலங்கை போன்ற, குறைந்த பட்ச ஜனநாயகமுமற்ற சூழலே இந்தியாவெங்கும் உருவாகும்.

ஊடகவியலாளர்கள் அழிக்கப்படுவார்கள், மனித உரிமை பேச முடியாது, மக்களியக்கங்கள் நிர்மூலமாக்கப்படும். எதிர்ப்பரசியலை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க கொடூரமாக அழித்தொழிக்கும் நவீன தந்திரோயத்தை இலங்கையிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்திய அரச பயங்கரவாதம் மக்கள் மீது தொடுத்துள்ள கோரமான தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுப்பது ஒவ்வொரு மக்கள் பற்றுள்ள மனிதனதும் சமூகக் கடமையாகும். இலங்கை அரச பயங்கர வாததிற்கு எதிரானதும் அதன் ஆதரவு சக்திகளுக்கு எதிரானதுமான சிந்தனை போக்கை ஏற்படுத்துவதிலும் அதனை ஒருங்கிணைபதிலும் இணைய இதழ்களும், சிறு பத்திரிகைகளும், அழுத்தக் குழுக்களும் கணிசமான வெற்றி கொண்டுள்ளன என்பது அரச ஆதரவாளர்கள் இணையங்கள் மீதும் புதிய கருத்தை உருவாக்க முனைபவர்கள் மீதும் தொடுக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களிலிருந்தே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இந்த வெற்றியின் பலத்திலிருந்து, இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளிற்கு எதிராக இடைவெளியின்றிக் குரல்கொடுத்துவந்த மாவோயிஸ்டுக்களி மீதான தாக்குதலுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் சமூகப்பற்றுள்ள சக்திகளும் குரல்கொடுக்க வேண்டும். தெற்காசியாவில் எதிர்ப்பியக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுதும் பரந்து கிடக்கும் ஜனனாயக, மனிதாபிமான சக்திகள் இந்திய அரச பயங்கரவாததிற்கு எதிராகக் குரல்கொடுக்கத் தவறினால் நாளைய சமூகம் மனிதப் பிணங்களின் மீதே வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப்படும்.

6 thoughts on “இந்திய அரச பயங்கரவாதம் – நாம் யார் பக்கம்? : சபா நாவலன்”

 1. “மேற்கு நாடுகளில் வசதி குறைந்தோருக்கும், வேலையற்றோருக்கும் மாதாந்த மானியத் தொகை வழங்கப்படுகிறது.
  மேலை நாடுகளில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட போதெல்லாம், அதனோடு கூடவே உருவான ஏழை மக்களினதும், வசதியற்றோரதும், தொழிலாளர்களதும் போராட்டங்களைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர்களுக்கு இம்மாதாந்தத் தொகை வழங்கப்பட்டது. ”

  இதனுடன் இன்னொரு விடயத்தையும் சேர்த்துக் கொள்ளா வேண்டும்:
  மேற்கூறிய சமூகநலன் திட்டங்கள் முதலாளிகள் மனமுவந்து வழங்கியவையல்ல. அவை தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக, சீர்திருத்தவாதிகளின் மூலம் பல எதிர்ப்புக்களிடையே தான் இயலுமாயின. (தச்சர், றேகன் போன்ற தீவிர வலதுசாரிகள் அவற்றைக் குறைத்தனர் என்பதும் நினைவு கூரத்தக்கது.)

  1. இப்போது காமரன் வந்தும் அதில் கையை வைக்கிறார்.இதில் ஊனமுற்றோர் எதிர்காலம் கேள்விக்குறீயாகிறது.

 2. இன்றைய உலகில் வேறுபாடுகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டன. யார் எந்தப்பக்கம் என்பது வெளிச்சம் போட்ட மாதிரித் தெரிகின்றது. இலங்கை அடிவருடிகள், அமரிக்க அடிவருடிகள், இந்திய அடிவருடிகள் என உருவாகி இருக்கும் ஒரு கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும். சபா நாவலன் அந்தப் பணியைச் செய்வதை வரவேற்கிறோம்.

 3. ´´ஆக, சமூகத்தின் விழிம்பு நிலையிலுள்ள, வறுமையின் எல்லைக்குள் உள்ள மக்களை இல்லாதொழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.´´
  Are you serious? If they do that, the industrial reserve army will decrease, then price of labor will increase..then foreign capital will go away.. Do they want that`? or what do you mean?

  ““இலங்கையில் இந்திய அரச பயங்கரவாதம் நிகழ்த்திய இனப்படுகொலை““
  you mean , the genocide by srilankan state with the Help of China,India,Iran,Pakistan…etc ?

  1. Yes im serious. Number of industrial reserve army in “3rd world” countries such as India and so on, is 3 times higher than the “1st world”(ibid 2000 p65); also modernising the production forces will create an additional non productive, unemployed and economically inactive population which struggle to survive within the post-globalisation environment. The economically inactive population comprises all persons who could be dependant on the state social benefit system which depends, mostly, on the taxable companies. Taxing the companies will increase the production charges

Comments are closed.