ஏகாதிபத்திய உலகில் மக்களை ஒன்றுதிரட்டுதலும் போராடுதலும் : அருந்ததி ராய்

(சான் ஃபிரான்சிஸ்கோவில் அருந்ததி ராய் 2004 ஆம் ஆண்டு “ஏகாதிபத்திய உலகில் மக்களை ஒன்றுதிரட்டுடலும் போராடுதலும்” என்ற தலைப்பில் உரையாற்றி யிருந்தார். காலப் பொருத்தங் கருதி அதிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் தருகிறோம் . “ஆதிக்கங்களை எதிர்த்து, தம் உரிமைகளுக்காக மக்கள் தம் அரசுடனோ அல்லது ஒரு மாற்று நாட்டு அரசுடனோ போராடிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் சந்திக்கும் முக்கியமான மூன்று சவால்கள் என்ன?” என்ற கேள்வியுடன் தொடங்கிய அவரது உரையின் சுருக்கம் துணைத் தலைப்புக்களுடன் தரப்பட்டுள்ளது.)

1. போராட்ட இயக்கங்களும் ஊடகங்களும் போராட்டக்காரர்களும், ஊடகங்களும் சந்தித்துக் கொள்வது ஒரு சிக்கலான இடம். ஒரே இடத்தில் காலத்தைச் செலவிட செய்தித்தாகம் கொண்ட ஊடகங்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதை அரசு கற்றிருக்கிறது. வியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ் செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள். சோவியத் தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து மீளப்பெற்ற போது இதுதான் நடந்தது. இப்போது சி.ஐ.ஏயின் ஹமீத் கர்ஸாயை அமர்த்தி மீண்டுமொரு முறை ஆப்கானிஸ்தானைப் போரில் தள்ளியிருக்கிறது. இதே மாதிரித்தான் இன்னொரு சி.ஐ.ஏ. ஆளான இயத் அல்லாவியை ஈராக்கிலே நிறுத்தியுள்ளது. இப்போது ஊடகங்கள் இங்கிருந்தும் கிட்டத்தட்டக் கிளம்பிவிடும். அரசுகள் ‘பொறுத்திருந்து பார்க்கும்” உத்தி மூலம் போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதில் தேர்ச்சியடைந்து வருகின்றன. அதே நேரத்தில் போராட்ட இயக்கங்கள் கண்ணைக் கவரும் விதத்திலும், சுலபமாய்க் கொள்ளப் படும் விதத்திலும் புதுப்புதுப் பிரச்சினைகளை உற்பத்தி செய்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு சுய மரியாதையான மக்களின் இயக்கமும், ஒவ்வொரு பிரச்சினையும் தனக்கென ஒரு விளம்பர பலூனை வானிலே பறக்க விட்டிருக்கிறது. இதே காரணத்தினால்தான் ஊட்டச் சத்துக் குறைவுப் பிரச்சினையை விடப் பட்டினிச் சாவு பிரச்சினை விளம்பரம் அதிகக் கவனத்தைப் பெறுகிறது.

தொலைக்காட்சிக்கு உகந்த வகையில், உடைந்து சீரழிக்கும் காட்சி தெரியும் வரை அணைகள் பெருஞ் செய்தி ஆவதில்லை. ஆனால் அப்போது செயலுக்குக் காலங் கடந்து விட்டிருக்கும். மேலேறும் தண்ணீருக்குள் நின்று தன் வீடும் உடைமைகளும் மூழ்குவதைப் பார்த்துநின்று போராடுவது பழைய உத்தி. தொலைக்காட்சிகளுக்கு அது சலித்து விட்டது. எனவே அணைகளால் இடம் பெயர்க்கப் பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் புது மாயங்களைக் காட்டிப் போராட வேண்டியுள்ளது. அல்லது போராட்டத்தைக் கைவிட வேண்டியுள்ளது.

வண்ணமயமான ஆர்ப்பாட்டங்களும், வாரக்கடைசி ஊர்வலங்களும் முககியமானவை தான், ஆனால் போர்களை நிறுத்துவதற்கு அவை வலிமையற்றவை. போர்வீரர்கள் சண்டை இடுவதையும், ஆயுதங்களைக் கப்பலகளிலும், விமானங்களிலும் ஏற்றுவதையும், ஆதிக்கங்கள் உலகெங்கும் திறந்திருக்கும் பொருளாதாரக் கதவுகளையும் , நாம் புறக்கணிக்கும் போதே போர்கள் நிற்கும். குடிகளின் கீழ்ப்படியாமை மூலம் நாம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினால், முதலில் இந்த ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்.

இயல்பு என்று அரசுகள் அழைப்பதை (உண்மையில் கொடூரம், அநீதி, ஒத்துக்கொள்ளப் படமுடியாதன) விசாரணை செய்ய நாம் நம் அனுபவத்திலிருந்தும், கற்பனையிலிருந்தும் புதிய உத்திகளை உண்டாக்க வேண்டும். உணவு, தண்ணீர், வதிவிடம், சுயமரியாதை போன்ற சாதாரணத் தேவைகளைக் கூட ஒரு தொலைதூரக் கனவாக்கி விட்ட திட்டங்களதும் செயற்பாடுகளதும் நிலைமையை நாம் தோலுரிக்க வேண்டும். போர் என்றாற் பிழையான, நீதியற்ற அமைதியின் விளைவே என்று உணர்தலே உண்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். போராட்ட இயக்கங்களைப் பொறுத்த வரை, அவற்றின் மக்கள் திரளுக்கு இணையாக வேறெந்தப் பலமும் கிடையாது. பலமான இந்தக் கூட்டத்துக்கு (அரசுகளிடம்) எந்த மாற்றுங் கிடையாது. நிறுவனங்களின் உலகமயமாக்கலினால், முடிவு செய்வோருக்கும் முடிவுகளாற் பாதிக்கப் படுவோருக்குமான தூரம் பெருகிவிட்டது. World Social Forum போன்ற மன்றங்களால் இத் தொலைவு குறைக்கப் பட்டிருக்கிறது.

பல நாட்டு மன்றங்களுக்கிடையேயான தொடர்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டு முக்கியமானதும் பாதுகாப்பானதுமாகும். உதாரணமாக, இந்தியாவின் முதல் தனியார் அணையான மகேஷ்வர் அணை கட்டப்பட்ட போது நர்மதா பச்சாவோ அண்டோலன் (NBA) , பிற மக்கள் இயக்கங்களுடன் (குறிப்பாக ஜேர்மனி, சுவிற்ஸர்லாந்து) இணைந்து செயலாற்றி அத் திட்டத்திலிருந்து பன்னாட்டு வங்கிகளையும் பிற நிறுவனங்களையும் விலகிக் கொள்ளச் செய்தது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமல் இருந்திருந்தால் இது சாத்தியமாகியிராது. இந்த உள்ளூர் இயக்கங்களின் போராட்டமே வெளியுலகில் இருக்கும் ஆதரவாளர்களால் உலகளவில் பெரிய போராட்டமாக எதிரொலித்து அந்த அணைத்திட்ட முதலீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்தது. குறிப்பிட்ட திட்டங்களையும் குறிப்பிட்ட நிறுவனங்களையுங் குறிவைத்த இத்தகைய கூட்டு முயற்சிகள் எண்ணிலடங்கா. இன்னொரு உலகைப் படைக்க உதவ, முதலில் நாம் ஆரம்பிக்க வேண்டிய நிறுவனங்கள் யாரெல்லாம் சதாம் உசேனுடன் சேர்ந்து யாரெல்லாம் வியாபாரம் செய்தார்களோ அவர்களும், இப்போதைய ஈராக்கிய சீரழிவால் யாரெல்லாம் லாபம் அடைகிறார்களோ அவர்களுமே.

2. NGO-ஆக்கல் போராட்ட இயக்கங்கள் எதிர்கொள்ளும் இன்னொரு நஞ்சு, எதிர்ப்பியக்கங்களை NGO (அரசு சாரா நிறுவனங்கள்) ஆக்குதல். நான் இப்போது சொல்லப் போவதை NGOக்களின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகச் சுலபமாகத் திரித்து விடலாம். அது தவறு. மதிப்புமிக்க பணிகளைச் செய்யும் NGOக்கள் இருக்கிறார்கள், ஆனால் போலித்தனமான NGOக்கள், இருண்ட நீர்ப்பரப்புகளிலிருந்து (திட்டங்களுக்கான பணம், வரி ஏய்ப்புகள்) உறிஞ்சுவதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. பிகார் போன்ற மாநிலங்களில் இந் நிதிகள் வரதட்சிணை மாதிரிக் கொடுக்கப்படுகின்றன. இந்த NGO கொள்கையைச் சற்றே பரந்த அரசியல் நோக்கில் காணவேண்டும். இந்தியாவில் NGOக்களுக்கான நிதியுதவி 1980, 1990களிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. இது இந்தியா தாராளமயமாக்கலுக்குத் (neoliberalism ) தன் கதவுகளைத் திறந்துவிட்ட போது நிகழ்ந்தது. இந்த நேரத்தில், இந்தியா, புதிய மாற்றங்களுக்குத் தன்னைச் சரிசெய்து கொள்ளும் வகையில், கிராமப்புற முன்னேற்றம், விவசாயம், சக்தி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டது. வழக்கமாக அரசு செய்யவேண்டிய, ஆனாற் புறக்கணித்துள்ள, இத் துறைகளில் வேலை செய்ய NGOக்கள் முன்வந்தனர். அரசுக்கும் இவர்கட்கும் வித்தியாசம் என்னவென்றால், NGOக்களிடம் மொத்தத் தேவைக்கான பணத்தில் ஒரு சிறு அளவே இருந்தது. பெருவாரியான பணம் கொழிக்கும் NGOக்களுக்குப் பணம் கொடுப்பது உதவி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களாகும். இந் நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால் மேற்கத்திய அரசுகள், உலக வங்கி, ஐ.நா மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள். இவர்கள் எல்லாரும் ஒன்று போலத்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும், இவர்கள் எல்லோருமே நெகிழ்வாகப் பிணைக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகத்தின பகுதிகளே.

இவர்களது பணி என்னவென்றால் தாரளமயமாக்கலை மேற்பார்வை செய்வதும் இத் துறைகளில் அரசுகளின் செலவைக் குறைக்கச் சொல்வதுமாகும். ஏன் இந் நிறுவனங்கள் NGO க்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்? வெறுமனே பழங்காலத்திய சமயச் சங்கங்கள் மாதிரியா? குற்ற மனப்பான்மையா? இது அதற்கும் கொஞ்சம் மேல். NGO க்கள் அரசின் பின்வாங்குதலால் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்புவது போன்ற ஒரு தோற்றத்தினை ஏற்படுத்துகின்றன. அதற்காகவே இவை வேலை செய்கின்றன, ஆனால் பொருளாதாரரீதியாக ஒரு தேவையற்ற, மூடத்தனமான வகையில். இவற்றின் பங்களிப்பெல்லாம் அரசின் மேல் மக்களுக்கிருக்கும் கோபத்தைத் தணிப்பதும், மக்களுக்கு நியாயமான உரிமைகளாகக் கிடைக்க வேண்டியதை இலவசமாகவும், கொடையாகவும் கொடுக்கிறதும்தான். இவர்கள் மக்களின் மனதை நிலைமாற்றுகிறார்கள்.இவர்கள் மக்களை ஒரு சார்ந்து நிற்கும் பலிக்கடாக்களாக்கி, அவர்களது அரசியல் எதிர்ப்பை மழுங்கடிக்கிறார்கள். NGOக்கள் அரசுக்கும் மக்களுக்குமிடையேயான ஒரு தாங்கியாக, தடுப்பாக இருக்கிறார்கள். பேரரசுகளுக்கும் குடிகளுக்குமிடையே இவர்கள்தான் நடுவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதுவர்கள். நெடுநோக்கில், இந்த NGO க்கள் தங்களுக்குப் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்களேயன்றி, தாங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அம் மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. இவர்களைத் தான் தாவரவியலாளர்கள் ‘காட்டி” (indicator)என்கிறார்கள்.

தாராளமயமாக்கலினால் விளைந்த சீரழிவுகளை விட NGO க்களினால் விளையும் சீரழிவு அதிகமானதாக இருக்கும் போலத் தோன்றுகிறது. இந்த NGO விவகாரத்தைச் சுரீரென்று சொல்வதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், ஈராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்தவுடன், பின்னாலேயே NGO க்களை அனுப்பி அந்தச் சீரழிவுகளைச் சுத்தம் செய்யச் சொன்னது. இந்த NGO க்களுக்குப் பணம் சரியானபடி கிடைக்கவும், இவை அந்தந்த நாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படவும், இவை மேம்போக்கான ஒரு அரசியல் அல்லது வரலாற்றுக் காரணத்தைக் வடிவமைத்துக் கொள்கின்றன. எப்படியாயினும், ஒரு சங்கடமான வரலாற்று அல்லது அரசியல் காரணம், ஏழை நாடுகளிலிருந்து வரும் அரசியலல்லாத (அப்படியென்றால் மிகவும் அரசியலானது என அர்த்தம்) துயரச் செய்திகள் இவையெல்லாம் அந்த (இருளடைந்த) நாடுகளிலிருக்கும் (இருளடைந்த) மக்களைப் பாதிக்கப்பட்டோராய்க் காட்டுகின்றன.

இன்னொரு ஊட்டச்சத்து குறைந்த இந்தியன், இன்னொரு பசிமிக்க எத்தியோப்பியன், இன்னொரு ஆஃப்கானிய அகதி முகாம், இன்னொரு சிதைக்கப்பட்ட சூடானியன்…. இவர்கட்கெல்லாம் ஒரு வெள்ளைக்காரனின் உதவி அவசியப்படுகிறது. இவ் வகையில் ( NGOக்கள் ) தம்மை அறியாமலேயே மாறாத நிறவெறியையும், மேற்கத்திய நாகரீகத்தின் கருணையையும் (கடுமையான அன்பு) மீளுறுதி செய்கிறார்கள். அவர்கள்தான் இந் நவீனவுலகின் மதச்சார்பற்ற சமயச் சங்கத்தார்கள். முடிவிற், சிறிய அளவில், ஆனாற் கொஞ்சம் கொஞ்சமாக, NGOக்களுக்குக் கிடைக்கும் பொருளானது, ஏழை நாட்டுப் பொருளாதாரத்தில் நிகழும் நிழலான அரசியற் கொடுக்கல் வாங்கலைப் போலவே ஆகிவிடும். இது இன்னதைச் செய் என்று கட்டளையிட ஆரம்பிக்கும், மோதலைப் பேச்சுவார்த்தையாக்கும், எதிர்ப்பை அரசியலற்றதாக்கிவிடும், உள்ளூர்க் குடிகளின் தன்னம்பிக்கை மிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் குறுக்கிடும். NGOக்களிடம் பணமிருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு, ஒரு போராட்டக்காரனுக்கு வேலை கொடுக்க முடியும், இதன் மூலம் அவர்களை அந்த நேரத்துக்கு ஏதோ நல்லது செய்வதாக (பொருளீட்டுவதாக) நினைக்க வைக்க முடியும். உண்மையான அரசியல் எதிர்ப்புகள் இந்தக் குறுக்குப் பாதைகளையெல்லாம் காட்டாது.

அரசியலை NGO-ஆக்கம் செய்வது போராட்டங்களை ஒரு நற்பாங்கான, அறிவார்ந்த, சம்பாத்தியத்துடனான, 9 மணியிலிருந்து 5 மணி வரைக்குமான ஒரு வேலையாக மாற்றுகின்ற ஆபத்தாகிறது. அத்தனையையும் ஒரு சில நாணயங்களை மட்டும் விட்டெறிந்து செயற்படுத்த முடிகிறது. நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில் உண்மையான எதிர்ப்புக்கு உண்மையான விளைவுகளிருக்கும், ஆனால் சம்பளமிருக்காது.

3. அடக்கு முறைகள் மக்களின் உரிமைப் போராட்டங்கள் சந்திக்கும் மூன்றாவது சவாலைப் பற்றி இப்போது பார்ப்போம். அடக்குமுறை அரசாங்கங்கட்கும் போராட்டக் குழுக்கட்கும் ஏற்படும் நேரடி மோதல்கள். இவை மக்கள் சக்திக்கும் பேரரசின் சக்திக்குமிடையேயான மோதல்கள். குடிமக்களின் எதிர்ப்புகள் ஒருவேளை (பேரரசுக்கு) ஆபத்தாகலாம் என்ற ஒரு சிறு அறிகுறி தென்பட்டாலும் போதும், அந்தப் போராட்டத்தின் மீதான அடக்குமுறை இரக்கமற்றதாய் இருக்கும். சியாட்டில், மியாமி, கோதென்பர்க், ஜெனீவா ஆகிய இடங்களில் நடந்த ஊர்வலங்களிலெல்லாம் இத்தகைய ஒடுக்குமுறையை நாம் கண்டோம். அமெரிக்காவில் நீங்கள் வைத்திருக்கும் அமெரிக்க நாட்டுப்பற்றாளர் சட்டமானது உலக நாடுகளுக்கெல்லாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான ஒரு முன்னோடியாக இருக்கிறது.

சுதந்திரத்தைக் காக்கின்ற பெயரிலே சுதந்திரம் ஒடுக்கப் படுகிறது. நாம் ஒரு முறை சுதந்திரத்தை ஒப்புவித்துவிட்டால் அதை மீளப் பெறுவதற்கு ஒரு புரட்சி செய்ய வேண்டி இருக்கும். சில அரசாங்கங்களுக்குச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் பெரும் அனுபவங்கள் இருப்பினும் அவ் அரசுகள் நறுமணத்துடனேயே திகழும். இந்த ஆட்டத்திலே பழங் கையான இந்தியா இவ் வழிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் அது எக்கச்சக்கமான சட்டங்களை உண்டாக்கியுள்ளது. அவற்றின் மூலம் எந்தவொரு ஆளையும் பயங்கரவாதி, கிளர்ச்சிக்காரர், போராளி என்று அழைத்துக்கொள்ள முடியும். இப்போது எங்களிடம் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், சிறப்புப் பகுதிகள் பாதுகாப்புச் சட்டம், குழுப்போராளிகள் சட்டம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைப் பகுதிகள் சட்டம் (இது ஏற்கெனவே காலாவதியான சட்டமாக இருந்தாலும் இதன் கீழ் மக்கள் இன்னும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள்), மேலும் தற்போது வந்திருக்கும் பொடா சட்டம், ஆகியவை இருக்கின்றன. இவை மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களுக்கான பல்திற உயிர்க் கொல்லி மருந்துகளைப் போன்றவை. இதற்கு அப்பாலும் சில முறைகள் இருக்கின்றன. அவை நீதிமன்றங்களிலிருந்து தீர்ப்பாகக் கிடைக்கும். அவையாவன, பேச்சுச் சுதந்திரத்தை, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை, வாழ்க்கையைப் பிழைப்பை நடத்தும் உரிமையை நறுக்குதலாகும். நீதிமன்றங்கள் எங்கள் வாழ்வை குறுமேலாண்மை செய்து வருகின்றன, அத்தகைய நீதிமன்றங்களை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம். திரும்பவும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகட்கு வருவோம்.

போன பத்தாண்டுகளில் மட்டும் காவற் துறையினராலும், பாதுகாப்புப் படையினராலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில். ஆந்திர மாநிலத்தில் (இம் மாநிலம் இந்தியாவில் உலகமயமாக்கலின் கவர்ச்சிக் கன்னி) ஒவ்வோராண்டும் ‘திடீர்த் தாக்குதல்களில்” சராசரியாக 200 ‘தீவிரவாதிகள்” கொல்லப் படுகிறார்கள். பம்பாய்க் காவற் துறை ‘துப்பாக்கிச் சூட்டில்” எத்தனை ‘குழுப் போராளிகளைக்” கொன்றோம் என்று பெருமை பேசுகிறது. கிட்டத்தட்ட போர்ச்சூழல் நிலவும் காஷ்மீரில் 1989ம் வருடத்திலிருந்து 80,000 பேர் கொல்லப் பட்டிருப்பதாகக் கணக்கு. ஆயிரக் கணக்கில் சும்மா ‘காணாமற் போய்விட்டார்கள்” என்பது மற்றொரு கணக்கு. வட கிழக்குப் பகுதியிலும் சூழ்நிலை இப்படித்தான். அண்மையக் காலங்களில் இந்தியக் காவற் துறை ஆயுதமேந்தாத பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இம் மக்களில் பெரும்பாலானோர் தலித்துகளும், பழங்குடியினருமாவர்.

காவலர்களுக்குப் பிடித்தமான முறை என்னவென்றால் முதலில் அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது. இந்தியாவில் மட்டுந்தான் இப்படியென்றில்லை, உலகெங்கும் இது நடப்பதைக் காண்கின்றோம். தாராளமய காலத்தில் ஏழ்மை என்பது ஒரு குற்றம். ஏழ்மையை எதிர்த்துப் போராடுவது பயங்கரவாதம் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தியாவில் பொடா, சமயங்களில் Production of Terrorism Act என்றுதான் அழைக்கப்படுகிறது. அந்தச் சட்டமானது எல்லாப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களையும் போலவே ஒரு அல் கெய்தா செயலாளியிலிருந்து ஒரு சிடுமூஞ்சி பஸ் கண்டக்டர் வரை அனைவரையும் பிடித்துப் போடுவதற்கான சட்டம். பொடாவின் மேதைமை என்னவென்றால் இதை அரசாங்கம் விரும்பியபடி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2002ல் குஜராத்தில் மாநில அரசின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட திட்டங்களை அடுத்து (இத் திட்டத்தின் வாயிலாக இந்து வெறியர்களால் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், 150,000 பேர் இல்லங்களைத் துறந்ததும் நிகழ்ந்தது) 287 பேர் பொடாவின் மூலம் கைது செய்யப்பட்டார்கள். இதில் 286 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சீக்கியர். பொடாவில் காவல் நிலையத்தில் கறக்கப்படும் வாக்குமூலங்கள் சாட்சியங்களாகக் கொள்ளப்படும். இதன் விளைவாக விசாரணையைச் சித்திரவதை இடப் பெயர்ச்சி செய்தது.

இந்தியாவிற் தான் உலகிலேயே அதிகமான சித்திரவதையும் சிறைச் சாவுகளும் நிகழ்கின்றன என்று தெற்காசிய மனித உரிமைப் பதிவு மையம் சொல்கிறது. அரசாங்க ஆவணங்கள் 2002ல் மட்டும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தோரில் 1307 மரணங்களைப் பதிவு செய்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் பொடா தீர்ப்பாயத்தில் நானொரு உறுப்பினராக இருந்தேன். எங்களது அருமையான மக்களாட்சியில் என்ன நடக்கிறதென்பதை அந்த இரண்டு நாட்களில் கிடைத்த கிளுகிளுப்பூட்டும் வாக்கு மூலங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அதில் எல்லாமே அடக்கம். அதாவது, சிறுநீரைக் குடிக்கச் சொல்வது, ஆடை களைவது, தாழ்மையடையச் செய்வது, மின்னதிர்ச்சி கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, ஆசனவாய்க்குள் இரும்புக் கழிகளை விடுவது, அடித்து உதைத்துக் கொல்வது ஆகியவை அடங்கும். பொடா இல்லையென்றால் மொடா அல்லது அது மாதிரி ஏதாவது ஒன்று இருக்கும். வன்முறையற்ற முறையிற் காட்டப்படும் எதிர்ப்புகளுக்கான வாசல் மூடப்பட்டு, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தீவிரவாதியென அழைக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் யாராவது நாட்டின் பெரும் பகுதியில் ஆயுதந் தாங்கிய போராளிகளின் இருப்பையும், நிலைமை அந்தந்த மாநிலங்களின் (காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதி, சத்திஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம்) கையை விட்டுப் போனதையும் குறித்து ஆச்சரியப்படுவார்களா?

காஷ்மீரில் எந்தவொரு நிமிடத்திலும் 3000 முதல் 4000 போராளிகள் இயங்குவதாக இந்திய ராணுவம் கணக்கிடுகிறது. இவர்களை அடக்க இந்திய அரசு 500,000 படைவீரர்களை அனுப்புகிறது. தெளிவாக இது எதைச் சொல்கிறதென்றால், தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே இந்தப் படை செல்லவில்லை. அங்கிருக்கும் தாழ்வுபடுத்தப்பட்ட மக்களை, இந்தியப் படையை ஒரு அந்நியப் படையாக நினைக்கும் மகிழ்ச்சியற்ற மக்களையும் சேர்த்து ஒடுக்கவே செல்கிறது. ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டமானது அதிகாரிகளுக்கு மட்டுமின்றி குறைந்த அதிகாரம் கொண்ட ராணுவத்தினருக்கும், பொது விதிகளை மீறுவோரை, தாக்கவும் கொல்லவும் அதிகாரம் கொடுக்கிறது. 1958ல் மணிப்பூரின் சில மாவட்டங்களில் மட்டுமே இருந்த அந்தச் சட்டம் இப்போது மாநில முழுமைக்கும், காஷ்மீருக்கும் செல்லுபடியாகும். சித்திரவதை, காணாமற் போதல், நீதிமன்றக் காவலில் சாதல், வன்புணர்ச்சி, கடைசியில் தீர்த்துக்கட்டுதல் ஆகியவை குறித்த பதிவுகள் உங்கள் குடலைப் புரட்டவைக்கப் போதுமானவை. இந்தியாவின் இதயமான ஆந்திரப் பிரதேசத்தில், வாரங்கலில் 28 ஜூலை 2004ம் தேதி, பல்லாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் (ஆந்திரக் காவல்துறையின் குறியான) மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போராட்டக் குழு ஒரு கூட்டத்தை நடத்தியது. இக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பொடாவின் கீழ் இந்த மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான். இவர்கள் அனைவரும் குவாண்டனாமோ சிறையினை ஒத்ததொரு இந்தியச் சிறையிலே அடைக்கப்படுவார்களா? மொத்த வடகிழக்கும், காஷ்மீரும் நொதிக்கின்றன. அரசாங்கம் இத்தனை லட்சம் மக்களை என்ன செய்யப் போகிறது? எதிர்ப்புகளுக்கான உத்திகளை வடிவமைத்துக் கொள்ளுவதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் இன்றைய உலகில் நடைபெறவில்லை. எதிர்ப்புகளைக் எப்படிக் காட்டுவது என்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது மக்களின் கையில் மட்டுமில்லை. இது அரசாங்கத்தின் கையிலும் இருக்கிறது. எக்கச்சக்கமான ராணுவ பலத்துடன் அமெரிக்கா, ஈராக்கை ஊடுருவி ஆக்கிரமித்து வைத்திருக்கும்போது, அதற்கான எதிர்ப்பை ஒரு முறையான ராணுவத்திடமிருந்தா எதிர்பார்க்க முடியும்? அப்படியே முறையான ராணுவ எதிர்ப்பாகவே இருந்தாலும் அதுவும் தீவிரவாதம் என்றே அழைக்கப்படும். விந்தை என்னவென்றால், அமெரிக்காவின் ஆயுதங்களும், நிகரில்லா வான்படை மற்றும் சுடுதிறன் ஆகியவையும், பயங்கரவாதத்தை நிர்ப்பந்திக்கின்றன. செல்வமும் வலிமையுமில்லா மக்கள், தம் உத்திகளாலும் திருட்டுத்தனத்தாலும் நிரவுகிறார்கள்.

நம்பிக்கையிழந்தும், முரட்டுத்தனமாக ஒடுக்கப்பட்டும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் வன்முறையற்ற போராட்டங்களை மதிக்கவில்லையென்றால் அது வன்முறைக்கான உரிமையைத்தான் வழங்குவதாகும். வன்முறையற்ற வகையில் தெரிவிக்கப்படும் மாற்றுக் கருத்துக்களின்பேரில் மாற்றங்களைக் கொண்டு வராத எந்த அரசும் பயங்கரவாதத்தைக் கண்டிப்பது நம்புதற்குரியதன்று. ஆனால் இத்தகைய வன்முறையற்ற எதிர்ப்பியக்கங்கள் நசுக்கப்படுகின்றன. மக்களை ஒன்று திரட்டுதலோ அல்லது ஒரு நிறுவனமோ எதுவாயிருந்தாலும் சரி, அவை விலைக்கு வாங்கப்படுகின்றன, உடைக்கப்படுகின்றன அல்லது அலட்சியப்படுத்தப்படுகின்றன. இதே நேரத்தில் அரசுகளும் – ஊடகங்களும் – திரைப்படங்களும், நேரம், அவர்கள் மேல் குவியும் கவனம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயங்கரவாதத்துக்கெதிரான போரின் மீது கொண்ட மதிப்பு எல்லாவற்றையும் பகட்டாகச் செலவிடுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து வன்முறையைத் தெய்வீகமாக்கிவிடுகின்றன. இது நமக்குச் சொல்லும் சேதி நிலைகுலையச் செய்வதும் ஆபத்தானதும் ஆகும். இச்சேதி என்னவென்றால்: நீ பொதுமக்களின் துன்பத்தை வெளியே கொண்டு வர விரும்பினால் வன்முறையே வன்முறையற்ற வழியை விட ஆற்றல் மிக்கது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான பிளவு மேலும் வளரும் இவ்வேளையில், இருக்கின்ற வளங்களைக் கைப்பற்றுவதும் ஆளுவதுமே பெரும் மூலதனக்காரர்களுக்கு மிக முக்கியமானதாகிவிடுகிறது. இது அமைதி யின்மையைத்தான் வளர்க்கும்.

பேரரசின் மாற்றுப் பக்கத்திலே இருப்பவர்களுக்கு இந்தச் சிறுமைப்படுத்தப்படுதல் பொறுக்க முடியாததாயிருக்கிறது. அமெரிக்காவால் ஈராக்கில் கொல்லப்படும் ஒவ்வொரு குழந்தையும் நம் குழந்தை. அபுக்ரெய்பிலே சித்ரவதை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் நம் தோழர். அவர்களுடைய அலறல் நம்முடையது. அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டபோது நாமும் சிறுமையடைந்தோம். ஈராக்கிலே போராடும் அமெரிக்கச் சிப்பாய்கள் இருக்கிறார்களே, பெரும்பாலும் ஏழ்மையிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் வந்த தன்னார்வலர்கள். அவர்களும் ஈராக்கியர்களைப் போலவே இக்கொடு நிகழ்வுக்குப் பலியாடுகளே. இப் போர்வீரர்கள் தமக்கென்றில்லாத ஒரு வெற்றிக்காக சாகச் சொல்லப்படுகிறார்கள். பெருலாபக்காரார், வங்கியாளர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், தளபதிகள் போன்ற பெரியோர்கள் மேலிருந்தபடி கீழே நம்மைப் பார்த்துத் தலையை முடியாதென ஆட்டுகிறார்கள், ‘வேறு வழியில்லை” என்கிறார்கள். போர் நாயை அவிழ்த்து ஏவி விடுகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது, ஆப்கானிஸ்தானின் அழிவுகளிலிருந்தும், ஈராக், செச்னிய இடிபாடுகளிலிருந்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன, காஷ்மீர வீதிகளிலிருந்தும், கொலம்பியாவின் மலை, வெளிகளிலிருந்தும், ஆந்திரா, அஸ்ஸாம் காடுகளிலிருந்தும், சிலீரிடும் இந்தப் பதில்தான் வருகிறது, ‘பயங்கரவாதத்தைத் தவிர வேறு வழியில்லை”. பயங்கரவாதம், கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது ஆபத்தானதாக, அசிங்கமானதாக, மனிதத்தன்மையற்றதாhக தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல, எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. எனவே எதிர்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு வன்முறையைத் தேர்ந்தெடுப்பது தவிர்க்கவியலாததாகிறது. ஆனால் போர் உண்மையில் அப்படித்தான். சட்டபூர்வமான முறையில் வன்முறைகளை நிகழ்த்த அரசாங்கத்துக்கு மட்டுந்தான் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதைத் தீவிரவாதிகள் நம்புவதில்லை. மனித சமுதாயம் ஒரு பயங்கரமான இடத்துக்குப் பயணிக்கிறது. நிச்சயமாக பயங்கரவாதத்துக்கு மாற்று உண்டு. அதன் பெயர் நீதி. அணு ஆயுதங்களாலோ, பரந்த மேலாதிக்கத்தாலோ, டெய்சி கட்டர் குண்டுகளாலோ மோசடித்தனமான ஆட்சிக் குழுக்களினாலோ, நீதியை விலையாகக் கொடுத்து அமைதியை வாங்க முடியாது. ஒரு சிலரின் மேலாதிக்கத்துக்கும் பெரும்பான்மைக்குமான ஆசைக்கு, சுயமரியாதைக்கும் நீதிக்கும் ஏங்குவோரின் விஞ்சும் வலுவினால் பதிலடி கொடுக்கப்படும். அது அழகானதா அல்லது ரத்தம் தோய்ந்ததா, என்ன மாதிரியான போராட்டம் என்பதெல்லாம் நம்மைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

Published on: Nov 24, 2010 @ 22:55

தமிழ் வடிவம்: ஏகலைவா

8 thoughts on “ஏகாதிபத்திய உலகில் மக்களை ஒன்றுதிரட்டுதலும் போராடுதலும் : அருந்ததி ராய்”

 1. மக்கள் எழுச்சியை உண்டாக்குவோம்!

 2. educate, orgnise and revelution . step formula of thiru. ambad, but which books read, which organise and which revelution are select one of the corprategroup. but anytime we are fight this group. but now time we choice we are Stmulator or fighter.10year befrore leader writer s.tamilselvan creat rural life education development ARIVOLI orgnatation. thiru. madaswamy and various response people contact this program. vilage and trip people more benefits.” nutrion demand death” arunthathi rai words are very essentital to convey our rural aware.

 3. சிறப்பான இக் கட்டுரை முன்பு எங்கோ பிரசுரமானது என்பது போல நினைவு.
  அவ்வாறாயின் மூலத்தின் அடையாளத்க்தையும் தருவது தகும்.

 4. நேற்றூ அருந்தராயின் பேர்த் டே என்றூ ஒரு இணயத்தில் பார்த்தேன் இன்றூ அவரது கட்டுரை படிக்க கிடைக்கிறது.மகிழ்ச்சி.லண்டனில் சில புரட்சியாளர் கூடும் போது குடிபானம் பரிமாறப்படுகிறது பின்னர் போதையோடு கடந்து செல்வோர் தமது பணீகளீல் மூழ்கி விட மறூபடியும் எப்போது கூடுவார்கள் எனும் ஏக்கமே எற்படுகிறது.

 5. இக்கட்டுரையை “புதிய பூமி” இதழ் ஒன்றில் பார்த்ததாக நினைன்வு. எப்போது என்று நினைவில்லை. சிவா சொல்வது சரி, மூலத்தை பிரசுரிப்பது அவசியம்.

  தமிழ்மாறன் உங்கள் பேரறிவு குடிபானம் அருந்திவிட்டு போதையில் கடந்து செல்ல முடியாத சோகம் உங்களை வாட்டுவது பற்றியே பேசுகிறது. அருந்ததி ராய் மக்களை ஒன்றுதிரட்டுதலும் போராடுதலும் பற்றிப் பேசுகிறார். பெரிதாக ஒன்றும் இல்லை, நீங்கள் மீண்டும் கூடிப் பருகும் லண்டன் மாநகரங்கள் பற்றிய கனவிலேயே இருங்கள். உங்கள் பேரறிவுக்கு இங்கே சொல்லப்பட்டவை எம்மாதிரம்.

  1. Muhun
   எதைப் பற்றியும் வாயில் வந்ததை உளறிச் சாதனை படைப்போர் உள்ளனர்.
   பொதுவாக இவர் எல்லாரையும் முந்தி உளறி விடுவார். இம்முறை உருப்படியாகச் சில கருத்துக்கள் வரும் வரை காத்திருந்ததற்காக நீங்கள் அவருக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்.

 6. This article proves her as a sadist. Let her show an example of how a government should be or else show some sort of solution to the problems or lead some movement. Simply talking and writing like this and making people pessimistic on each and everything existing in this world is easier than doing some sort of constructive work. Destruction is easier than construction.

 7. pala adi adithavanai oruthadavai thirupi adithal avan thiviravathi yantral.. nanum oru thiviravathi than…

  by 10 yr old palastien..

Comments are closed.