எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- பழ.நெடுமாறன் கோரிக்கை

இது தொடர்பாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை கடற் பகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்க எல்லைக்குள் புகுந்துவிட்டால் அவர்களை வங்க தேசக் கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சிங்கள மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதேயில்லை.1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆண்டு காலமாக சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறா

ர்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. இராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியது. இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி நட்டஈட்டினை சிங்கள அரசிடம் பெற்றுத்தர இதுவரை எந்த முயற்சியும் இந்திய அரசு செய்ததில்லை.வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இராசபக்சேயின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்.” என்று நெடுமாறன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

One thought on “எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- பழ.நெடுமாறன் கோரிக்கை”

Comments are closed.