தமிழ்ச் சூழல் மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காது!-நிகழ்வில் கேட்டவை! : மா.பா.சி

mavai1

கவிஞர் மாவை வரோதயன் அஞ்சலிக் கூட்டமும் , நினைவு நூல் வெளியிடும் நிகழ்வில் கேட்டவை!: மா.பா.சி

 இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவைக்குத் தன் பாரிய பங்களிப்புகளை வழங்கி – அதன் வெற்றிகரமான நகர்வுக்கு உதவுகரமாக இருந்த பன்முக இலக்கிய ஆளுமையாளர், கவிஞர், கதைஞர் மாவை வரோதயன், அஞ்சலிக் கூட்டமும் நினைவு நூல் வெளியீடும் – 11.10.2009ஆம் திகதி 575 /15, காலி வீதியில் அமைந்துள்ள பேரவையின் தலைமைப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்குப் பேராசிரியர் சி.சிவசேகரம் தலைமை வகித்தார்.
 
அமரர் மாவை வரோதயனுக்கு இரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. மதி கதைஞர் வட்ட நிறுவகர் வேல் அமுதன்  மாவை வரோதயனின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டினார்.
 
வரவேற்புரை சட்டத்தரணி சோ.தேவராஜா (தேசிய கலை இலக்கியப் பேரவை)
 
ஒரு வருடமாக நோயுற்றிருந்து மாவை வரோதயன் 29.08.2009இல் காலமானார். அவர் உலகத்தைப் பார்த்த விதம் வித்தியாசமானது. காத்திரமான கருத்துக்களை முன்வைத்து பெரும் பெரும் பிரமுகர்களோடேயே விவாதம் செய்தார். அவர் இன்னமும் எம்மோடு வாழ்வதாகவே உணர்கிறோம். ஏனெனில் அவரது படைப்புக்கள் நம் மத்தியில் பெறுமதியுடையனவாகவே இருந்து வருகின்றன என்றும் கூறினார்.
 
தலைமையுரை பேராசிரியர் சி.சிவசேகரம்
 
தன்னை என்றுமே விளம்பரப்படுத்தாதவர் மாவை வரோதயன் தன்னையொரு பெரும் படைப்பாளியாகக் காட்டிக் கொள்ளாதவர். எவருக்குமே சிரமத்தைக் கொடுக்க அவர் எண்ணியதில்லை. அவரை எனக்குத் தேவராஜாவே அறிமுகப்படுத்தினார். தேசியகலை இலக்கியப் பேரவையின் தூணாக இருந்தார். தனது வீட்டு அலுவலைப் போல் பேரவையின் பணிகளைக் கருதினார். பேரவை நிகழ்வுகள் சகலவற்றிலும் பங்கு கொண்டவர். கதிரை அடுக்குவதைக் கூடத் தயங்காது செய்தார். தன் எழுத்துக்களை வெளியிடுவதில் தீவிரம் காட்டவில்லை. பேரவையின் பணத்தை வீணாக்கக் கூடாதென்ற நோக்கோடு உயர் தர தாள்களில் 100அச்சடிக்கப்படாது என்று கூறி சாதரண தாள்களில் தனது நூலை வெளியிட்டார். சகோதரப் படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடுவதில் அகவெளிக் காட்டிய ஊக்கத்தைத் தன் தொகுப்புக்கு அவர் வெளிக்காட்டவில்லை. சிக்கனத்தை விரும்புபவர். இதை அவர் தனது மேற்பார்வையில் வெளியிட்ட நூல்களின் மூலமாகக் காணலாம். இதற்காக அவர் பலரது ஏளனத்துக்கும் ஆளானார். கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் குறைத்து சொன்னால் மாவை தாங்க மாட்டார். அவர் தன்னை ஏகலைவனாகவும் சில்லையூரான் துரோகணராகவும் சொல்வார்.  தன்னால் மதிக்கப்பட்ட கவிஞர் முருகையன் காலமாகிய போது மாவை நோயாளியாக இருந்தும் அஞ்சலிக் குறிப்பு எழுதினார். அவர் நோயாளியாகிய பின்னர் எங்கள் தொடர்புகள் குறைந்தன.
 
மாவையின் மரணத்துக்கு அவரது ஓயாத உழைப்பும் காரணம். தனிப்பட்ட முறையில் அவர் எவரையுமே பகைத்துக் கொண்டதில்லை. எவரையும் புன்படுத்துமாறு பேச மாட்டார். ஆனால் கருத்து என்று போது விவாதித்துநிற்பார். ஆரம்ப காலத்தில் மாவை இல்லாதிருந்திருந்தால் தாயகம் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்திருக்க முடியாது. பேரவை இயங்க பங்களிப்பு வழங்கினார். தாயகம் சஞ்சிகையில் இலகு நடையில் வலிகாமத்து மண்ணின் மைந்தர் பற்றிய தொடரை எழுதினார். வித்தியாசமாக இருந்தது. வரண்டு போயிருக்கும் எமது ஆக்க இலக்கிய நிலவரத்துக்கு இத்தொடர் வழிகாட்டியாக இருந்தது. இன்னமும் நெடுநாள் வாழ்ந்திருக்க வேண்டிய அருமையான மனிதர் மகவை இவ்வஞ்சலிக் கூட்டம் அவருக்கான ஒரு காணிக்கையே.
 
 “எங்களுடன் இன்னமும் வாழும் மாவை வரோதயன் ” என்ற நினைவு மலர் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை பிரபல கவிஞர் ஜின்னாஹ் ஷெரிப்புதீன் பெற்றார்.
 
அஞ்சலி உரைகள்
 
வி.எஸ்.இதயராசா:
 
மாவையோடு இரு வருடத் தொடர்பு எனக்குண்டு. குறுகிய காலமாக இருந்தாலும் அந்யோன்யமான நெருக்கமிருந்ததால் அவர் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத பிரிவு. கவிஞருமான மாவை படைப்பாளியாகவும் எழுத்தில் ஜீவித்தார். அவரது   “வேப்பமரம்”  தொகுப்பில் 12 சிறுகதைகள் காணப்படுகின்றன. கதைகள் மூலமாக ஏதோவொரு செய்தியை வாசகருக்குச் சொல்கிறார். கையாண்டுள்ள விடயங்கள் உண்மையானவையாகக் கருதமுடிகின்றது. கனத்த பதிவுகளை எழுத்துகளுக்கிடையில் காண முடிகின்றது. அவர் விபரித்துச் செல்லும் பாங்கு சுவையானது.
 
இத் தொகுப்பில் காணப்படும் கதைகள் யாழ்ப்பாணத்து மக்களது வாழ்க்கை முறையைக் கண்டிப்பதாகவும் இருக்கின்றது. நாசுக்காகத் தன் உணர்வுகளைக் கொட்டி இருக்கிறார். மிக நுட்பமாகச் சில கதைகளில் கொழும்பு வாழ்க்கையைச் சித்தரிக்கிறார். போலி நட்புகளைத் தத்ரூபமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் பாசத்தை உணர்வு பூர்வமாகச் சொல்கிறார். இன்று எல்லோரும் அறிந்த ஏஜென்சிகளின் பிரச்சினைகளை எமது தேசியப் பிரச்சினைகளோடு ஒப்பு நோக்கியிருக்கிறார். வேப்பமரம் தொகுதி அருமையான சிறுகதைகள்.
 
சி.கா.செந்திவேல் (பொறுப்பாசிரியர் புதியபூமி)
 
மாவைக்கு அஞ்சலிக் கூட்டம் நடந்திருக்க கூடாது. அவர் இறக்கும் போது 44 வயது மட்டுமே சராசரி வயதில் அவர் இறக்கவில்லை. இச் சமூகத்துக்குப் பாரிய சேவையை வழங்கக் கூடிய மனிதர் குறுகிய வயதில் காலமானது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகின்றது. பயங்கர நோய்க்குத் தன் வாழ்வைப் பலி கொடுத்தார். நல்லதொரு மனிதராக மனிதத்துவத்தை வெளிப்படுத்தும் வழியில் தன் எழுத்தைக் கையாண்டார். நல்லதொரு மக்கள் கவிஞராக வெளிவந்தார். எதைச் சமூகத்துக்குச் செய்ய முடியுமோ அதைச் செய்தார். எழுத்தாளராகச் செயற்பட்டது மாத்திரமன்றி தனது எழுத்துக்களுக்கு முன் மாதிரியாகவும் வாழ்ந்து காட்டினார். அது தான் அவரோடு எம்மை ஐக்கியமாக்கியது. வலிகாமத்து மண்ணின் மைந்தர் தொடர் அவர் மதித்த மனிதத்துவத்தின் உச்சத்தைக் காட்டியது. மண்ணின் மைந்தர்களாகிய விவசாயி, மேசன், சலூன் தொழிலாளி நாட்டு வைத்தியர் போன்ற சாதாரனர்களின் விழிமியங்களை வெளிப்படுத்திக் காட்டினார். அத்தொடர் மிகவும் பெறுமதியானது. புறக்கணிக்கப்பட்ட சாதாரண மக்களின் உண்மையான நிலைகளைத் தரசிக்கக் கூடியதாக இருந்தது.
 
 
அவர் நேசித்த செம்மண் பிரதேசத்தில் இன்று சன நடமாட்டம் இல்லை. அவர்கள் துரத்தப்பட்டு 19 ஆண்டுகளாகி விட்டன. அவர்களில் மாவையின் குடும்பமும் அடங்கும். நாட்டின் பல பகுதிகளில் கல்வி கற்றார். அவரது தந்தையின் உத்தியோகமே மாவைக்கு நிலையை ஏற்படுத்தியது. இப்பெயர்ச்சிகளின் மூலமாகத் தன்னையொரு வாழ்வின் தேடலாக ஆக்கியது. தன் கவி எழுத்துக்கு முன் மாதிரியாகச் சில்லையூர் செல்வராசனை ஆக்கிக் கொண்டார். செல்வராசனின் சமூக நோக்கு வித்தியாசமானது. அது மாக்சிச உலக நோக்காகும். சமூக மாற்றத்தை நோக்கிச் சென்ற கவிஞர் மாவையும் அதையே உள்வாங்கிக் கொண்டார்.
 
matru எமது தமிழ்ச் சூழல் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்காது. இதன் மூலமாக மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பழைமைவாத எல்லைக் குள்ளேயே நிற்பது என்பதே ஜனநாயகமாகி விட்டது. அதனை மாவை துணிவுடன்  மீறலாக்கிக் கொண்டார். அதனால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளானர் தனது சுகாதார பரிசோதகர் வேலையை மாவை மக்கள் சேவையாக மதித்தார். தான் சேவையாற்றிய பின் தங்கிய பிரதேசங்களில் சுகாதார பரிசோதகர்களின் கண்களில் படாது வாழ்ந்து கொண்டிருந்த காச நோயாளிகளை தேடிப்பிடித்து சிகிச்சைக்கு உட்படுத்தி வாழ்வ கொடுத்தார். சீதனம் வாங்கித் திருமணம் செய்யாதற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார். இப்படித்தான் வாழ வேண்டுமென்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர். மாவை வாழ்ந்திருந்தால் அவரது சமூக அரசியல் இலக்கியப் பார்வைகள் மேலும் புதிய வளர்ச்சிகளை எட்டியிருக்கும். அதன் மூலம் புதிய தலைமுறையினரை உருவாக்கி இருப்பார். கலந்துபேசி விவாதித்து எழுதும் பண்பு கொண்டவர் மாவை. தனது எழுத்துக்களைப் பிரசுரிக்கும் முன்பு நண்பர்கள் தோழர்களுக்கு காண்பித்து கருத்துக்கேட்டு தேவையானவிடத்து திருத்தங்கள் செய்வதில் தன்முனைப்பின்றி நடந்து கொள்வது அவரிடம் காணப்பட்ட உயர் பண்பாகும். அதுவே அவரை மக்கள் எழுத்தாளராகப் படைப்பாளியாக வளர வைத்த அடிப்படையாகும். அதன் காரணமாகவே பெறுமதிமிக்க கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளராகவும் மாவை திகழ்ந்து வரமுடிந்தது. அவரது இழப்பு நம் எல்லோருக்கும் பேரிழப்பாகும்.
 
சபையோர் அஞ்சலி

பிரபல கவிஞர் ஜின்னா ஷெரிப்புத்தீன்
 
தவறுகளைக் கண்டால் கொதித்தெழும் துணிவு கொண்டவர் மாவை. நல்லதொரு மனிதராக வாழ்ந்து வழிகாட்டியாக வாழ்ந்தார். மேலும் வாழ்ந்திருப்பின் பலருக்கு முன்னோடியாக இருந்திருப்பார். சில்லையூர் செல்வராசனின் முதல் நூலைப் பதிவு செய்தவர். எனக்குத் தம்பி போன்றவர். எனக்கும் சில்லையூரே முன்னோடி. அவருக்கு அவர் மறைந்த போது அஞ்சலிக் கூட்டமொன்று நடந்தது. அவ்வேளை மிக உச்சமான கல்வியாளர்கள் வந்திருந்தனர். அக் கூட்டத்தில் கூறப்பட்ட ஒருவரின் கருத்தொன்றைப் பொறுக்க முடியாது சற்றுக்  கோபத்தோடு நான் மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பின்னர் மாவை வந்தான். வெளிவந்ததுக்கான காரணத்தைச் சொன்னேன். அது மாவைக்கும் உடன்பாடாக இருந்தது. அடுத்து தானே மேற்படி சில்லையூரான் பற்றிய அக் கருத்திற்கு மாறான கண்டனத்தை எழுதிப் பத்திரிகையில் வெளியிட்டார். அதன் பின் நானும் என் எழுத்தை எழுதினேன். வாழ்ந்த காலத்தில் மாவை மனிதனாக வாழ்ந்தான். அவன் இப்போது இறக்கவில்லை. நம்மத்தியில் வாழ்கிறான்.
 
 “தகவம் ” வசந்தி தயாபரன்:
 
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவார் உறவு கலவாமை வேண்டும்”  என வள்ளலார் பாடினார். புகழ் பதவிக்காக மனச்சாட்சியை விந்துவிட்டுச் சுயநலமாக பேச்சு வேறு செயல் வேறாக இருப்பதைக் கண்டு வரோதயன் கோபம் கொள்வார். அவரது கண்களில் ஆழத்தையும் ஆவேசத்தையும் தரிசிக்கிறேன். எப்போதும் மற்றயவரோடு உரையாடும் போது தலையைச் சரித்துப் புன்னகை புரிந்து பேசுவார். மனிதரைத் தரிசித்தவர். ஒழுக்கத்தை நேசித்தார். தனக்கு உதவுவார்கள் என்றதற்காக நேசிக்காது உண்மையான ஆத்ம சுத்தியோடு நேசித்தார். அது போலவே எழுதினார். பெரியோரின் நேர்மையைச் சிலாகிக்கும் தன்மை அவரிடம் இருந்தது. ஓசை இல்லாது மனிதத்தைத் தேடிச் சென்ற உன்னத மனிதர் வரோதயன் என்பது அவரது அடிநாதமாக விளங்கியது.
 
 “மகவம் “வேல் அமுதன்
 
மாவையின் பூர்வீகம் மாவிட்டபுரம், தகப்பன் சிவகடாட்சம் பிள்ளை, மாவிட்டபுரச் சூழலில் உருவாகினார். இசையையும் நடனத்தையும் கூடக் கற்றார். தமிழ்ப் பிரதேசங்கள் சகலவற்றோடும் உறவாடியவர் நன்றி மறவாதவர். என்னைத் தேடி வந்த அவரை என்னோடு அரவணைத்தேன்.  “மகவத்தில்”  இணைந்தார். ஒரு முறை வெலிசறைக்கு அவரைக் காணச் சென்றேன். அறைக்கு அழைத்துச் சென்றார். அவரது மேசைக்கு மேலே எனது படம் கட்டப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நானவருக்கு எதுவும் செய்யவில்லை. ஊரெழுவில் மகவத்தில் பெற்ற அநுபவ வெளிப்பாடாக இப்படம் இருந்தது. நிச்சயமாக நான் இதற்குத் தகுதியற்றவன். மகவம் சிறுகதைப் பட்டறையில் எழுத்தாளர் கோகிலமாமகேந்திரன் ஆற்றிய உரை மாவைக்குப் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.  “வேப்பமரம்” தொகுப்பின் முன்னுரையில் அதைப் பதிவு செய்திருக்கிறார். நன்றி மறவாத பெருமகன். தனக்கு உயிர் மீட்டுத் தந்தவர் தேசியகலை இலக்கியப் பேரவையினர் என தமிழகத்தில் சிகிச்சை முடிந்து வந்தபின் சொன்னார். இலக்கியம் இருக்கும் வரை மாவை வாழ்வார்.
 
இலக்கிய அபிமானி, கவிஞர் மா.குலமணி
 
சாதனையாளர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததில்லை. மரணம் முடிவல்ல எனச் சத்திய வேதம் சொல்கிறது. இவ்வளவு சீக்கிரமாக மாவையை இழப்பபோமென நினைக்கவில்லை. நோயாளியாக இருந்த போது சந்திக்கையில் உங்களைப் போன்றோர் பழைய நினைவுகளைத் தருகின்றனர் என்றார். இப்போ ஞாபகமாகி விட்டார்.
 
இலக்கியத் திறனாய்வாளர் செ.சக்திதரன்
 
எண்பதுகளின் தொடக்கத்தில் ஊரெழுவில் மாவையைச் சந்தித்தேன். நல்லதொரு வாசகன் துணிவுள்ளவர். சமூக நோக்குள்ள படைப்பாளி என்னை எழுத வேண்டாமென விமர்சித்துச் சொன்னார். பண்பாளர் மற்றவரது கஷ்டங்களை விளங்கிக் கொள்வார். வலிகாமம் மக்களது ஆளுமைகளை உணர்வுகளை ஆழமாகப் பார்த்து இலக்கியமாக்கினார். நோயாளியாக இருந்த போது அவரைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் அவரை நோயாளியாகப் பார்ப்பதற்கு முடியவில்லை. நல்லதொரு படைப்பாளி இன்றில்லை.
மற்றும் சிலர் அஞ்சலி உரையாற்றினார்.
 
மாவை வரோதயனின் நெஞ்சை விட்டகலாத சில கவிதைகளை சோ.தேவராஜா சபையோருக்காக வாசித்தார்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் சார்பில் ம.மிதுன் ராகுல் நன்றியுரை வழங்கினார்.