என்னை இடதுசாரி என்று, இடது சாரிக் கட்சிகள் ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் அடைவேன்:அமர்த் தியா சென்.

இந்திய இடதுசாரிகள் தன்னை ஒரு நண்பனாகப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவின் நோபல் விருது பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த் தியா சென் வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இடதுசாரிகளின் நிலைபாட்டை அமர்த்தியா சென் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் தன்னை இடதுசாரி பாதையிலிருந்து திருப்பிவிடவில்லை என்றும், இன்றும் தான் ஒரு இடதுசாரி மனிதர் என்றும் அவர் கூறினார்.

நான் ஒரு இடதுசாரி என்றும், தன்னை இடதுசாரி என்று இடது சாரிக் கட்சிகள் ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் அடைவேன் என்றும் அமர்த்தியா சென் கூறினார். அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய இடதுசாரிகளின் கோபத்தை விமர்சனம் செய்தது பற்றி குறிப்பிட்ட சென், நாட்டில் அதைவிட ஆத்திரமூட்டக் கூடிய முக்கியமான வறுமை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உள்ளன என்றுதான் குறிப்பிட்டேன் என்றார்.

லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளி அரங்கில் நிரம்பி வழிந்த கூட்டத்தாரிடையே அமர்த் தியா சென் தன்னுடைய புதிய நூல் “நீதி பற்றிய கருத்து” பற்றி உரையாற்றினார். ஒப்பிடக் கூடிய நீதித் தத்துவம் பற்றி தான் புதிய விளக்கங்களை அளிக்கவில்லை. ஆடம்ஸ்மித், மேரி வோல்ஸ்டோன் கிராப்ட் மற் றும் காரல் மார்க்ஸ் ஆகியோர் பல் வேறு கோணங்களில் தங்களது சிந் தனைகளைச் செலுத்தினர். நீதியால் நிரப்பப்பட்ட சமுதாயத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக கண்ணுக்குத் தெரியும் அப்பட்டமான அநீதிகளை அகற்றவே அவர்கள் பாடுபட்டார்கள் என்று கூறிய சென், அவர்கள் அளித்த உந்துதலால் உருவானதே தமது நூல் என்று குறிப் பிட்டார்.

நீதி என்பது, தனிப்பட்ட மனிதர்கள் நிகழ்வுகளை, சிக்கல்களை அணுகும் கோணத்திற்கேற்ப மாறுபடுகிறது. முழுமையான நீதி என்பது கிடையாது. நீதி, நிலவும் சூழலோடு தொடர்புடையது. எனவே, பெண்ணடிமைத்தனம், வறுமை மற்றும் ஊட்டச் சத்தின்மை போன்ற கண்ணுக்குப் புலப்படக் கூடிய அநீதியின் வடிவங்களை அகற்றுவதில் கவனம் அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய தத்துவம் ‘நீதி’ என்றும், ‘நியாயம்’ என்றும் இரு வடிவங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. ‘நீதி’ என்பது நீதிகளின் தத்துவ அடித்தளத்தைக் குறிக்கிறது. ‘நியாயம்’ என்பது நீதியை நடைமுறைப் படுத்துவதாகும். தன்னுடைய நூல் ‘நியாயம்’ பற்றி பேசுகிறது என்று அவர் குறிப் பிட்டார்.