“புலிகளின் பின்” – எதிர்ப்பியக்கங்களின் நவீன வன்முறை வடிவங்கள் : சபா நாவலன்

புதிய ஒழுங்கு விதியென்பது தவிர்க்க முடியாத ஆசியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியிருக்கிறது. மேற்கில் முதலாளித்துவம் வளர்சியடைந்த போது அதனோடு கூடவே முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களும் உருவாகியிருந்தது. இவ்வகையான ஜனநாயகம், குறித்த எல்லைக்குள்ளான சுதந்திரத்தையும் கூடவே வழங்கியிருந்தது. .மேற்கின் மூலதனம் ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, உருவாகும் ஆசியப் பொருளாதாரம், ஆசியாவின் இயல்பான மூலதன வளர்ச்சியல்ல. மூழ்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவக் கட்டமைபை மறுபடி ஒழுங்கமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட இன்னொரு உலக சமரசம் தான் இது.
புதிய உலக சமரசம் தனது எதிரிகளைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சில உலக முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் உருவாகப்படுகின்ற தொழில் நுட்ப சாதனங்களூடான அடக்குமுறை வடிவங்களெல்லாம் அதே ஆதிக்க சக்திகளிற்கு எதிரான பாவனைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்வு கூறுகிறது அமரிக்க பாதுகாப்புத் திணைக்கள அறிக்கை.
தனது வியாபாரத்தையும் மூலதனப் பரம்பலையும் மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்ட இப்புதிய வல்லரசுகளின் “ஆசிய ஜனநாயகம்” முதலாளித்துவும் உருவாக்கிய ஜனநாயக விழுமியங்களுகு எந்த வகையிலும் தொடர்பற்ற திட்டவட்டமான அடக்குமுறை வடிவங்களைக் கொண்டது.
இவர்களின் உள்ளக அரசியல் ஒழுங்கமைப்பானது, வியாபாரத்திற்காக எதை வேண்டுமானாலும் நிறைவேற்றவல்லது.
ஒரு குறித்த மேல் தட்டு மத்தியதர வர்க்கத்தை மட்டுமே செயலூக்கமுள்ள மக்கள் பகுதியாகக் கருதும் இந்த அமைப்பு முறையானது சமூகத்தின் கீழ்த்தட்டிலுள்ள மக்கள் பிரிவுகளை இவ்வர்க்கத்தை உருவாக்கி நிலை நிறுத்தும் கருவிகளாகவே கருதுகிறது.ஏனைய மக்கள் பகுதிகளெல்லாம் செயலூக்கமற்றவையாகயும் அழிவிற்கு உட்படுத்தப்படத் தக்கனவாயுமான சிந்தனை முறை கட்டமைக்கப்படுகின்றது.
இந்திய விவசாயிகள் அழித்தொழிக்கப்படது போல, வன்னிப் படுகொலைகக் கோரங்கள் போல, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் மக்கள் துவம்சம் செய்யப்படுவது போல, மேற்கு வங்கத்தில் கொல்லப்படுவது போல “பிரச்சனைக்குரிய” மக்கள் கூட்டங்கள் உலக அதிகார நிறுவனங்களின் அங்கீகாரத்துடனேயே அழிக்கப்படுகின்றன.
இன்று இலங்கையின் போர் நடந்து அழிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியாவால் முன்மொழியப்படும் பசுமைப் புரட்சியின் இந்திய முகம் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இந்தியாவில் நடந்த பசுமைப் புரட்சியின் கதாநாயகன் பேராசிரியர் சுவாமிநாதனே ஒத்துக்கொள்வது போல,உலக ஒழுங்கமைப்பின் ஆசிய உற்பத்தி கூறாக அமைந்த இவர் ஏற்படுத்திய பசுமைப்புரட்சியானது, ஆயிரக்கணக்கான விவசாயிகளை மரணத்தின் விழிம்புக்குள் இழுத்து வந்திருக்கிறது. நூற்று எண்பதாயிரம் விவசாயிகள் பசுமைப் புரட்சியின் நவீன மயப்படுத்தலுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆசியப்பொருளாதாரம் மேற்கொண்ட முதலாவது மனிதப்படுகொலை இதுதான்.
70 களில் ஐரோப்பிய அமரிக்க முதலாளித்துவம் ஏகத்துவ முதலாளித்துவமாக வளர்ச்சியடைந்த போது, அங்கெல்லாம் பாதிபுக்குள்ளான மத்தியதர வர்க்கத்து சிறு உற்பத்தியாளர்களுக்கு சமூக உதவித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாதிபிற்கு உள்ளானவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள், போராடிப்பெற்றுக்கொண்ட உரிமைகளே இவை என்பது ஒரு புறத்திலிருக்க மறுபுறத்தில் வழங்க்கப்பட்ட சிறு உரிமைகள் அவர்களின் நாளாந்த வாழ்விற்குப் போதுமானதாக அமைய போராட்டங்கள் வளர்ச்சியடையாமல் தடுக்கப்பட்டன.
ஆனால் புதிய ஒழுங்கமைப்பின் பிரதான கூறான ஆசியப்பொருளாதாரமானது இவ்வாறான போராட்டங்களைக் கூட அமைப்பு மயப்படுத்த வகையில் சந்திக்கவில்லை.
180 ஆயிரம் மனித உயிர்களை தற்கொலைச் சாவிற்கு நிர்பந்தித்துவிட்டு அபிவிருத்தி பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது இந்தியா. ஆக, பரிணாமப் படிநிலைகளினூடாக உருவாகாத, திடீர் மாற்றங்களூடாக அதிர்ச்சி ஏற்படுத்தும் ஆசிய துருவ வல்லரசுகளின் வெளிப்படையான திட்டமிட்ட மனிதப் படுகொலைகளின் இன்னொரு பகுதிதான் வன்னியில் நிறைவேற்றப்பட்ட அவலம்.
இந்திய-இலங்கை கூட்டு நடவடிக்கையான இனவழிப்பின் இறுதி மூன்று கொடிய இரவிற்குள் இருபதாயிரம் பொதுமக்கள் சாட்சியின்றிக் கொன்றொழிக்கப்பட்டனர். இருபதாயிரம் இல்லை எழாயிரம் மனித உயிர்கள் மட்டும்தான் என்று பெருமைப்படுக்கொள்கிறது இலங்கை அரசு.
இது மனிதப்படுகொலைகளின் முடிபல்ல. ஆரம்பம் மட்டும் தான். இனவழிப்பிற்கெதிரான, சமூக வன்முறைக்கெதிரான, சமூக அனீதிக்கெதிரான, அரச பயங்கரவதத்திற்கெதிரான எதிர்ப்பரசியலை முறியடிக்க நடத்தப்பட்ட ஒத்திகைகளே இவைகள்.
சமூக உதவித் திட்டங்களூடாகவும், அரசியல் வர்க்க சமரசங்களின் வழியாகவும் முதல் கட்டத் தீர்வை முன் வைப்பது என்ற மேற்கத்திய ஜனநாயக முறைமையை முற்றாக நிராகரிக்கும் ஆசிய ஏகபோகம் சீன சர்வாதிகாரத்தை தனது மாதிரியாக முன் வைக்கிறது. இவ்வகையாக வளர்ச்சிய்டையும் ஆசிய ஜனநாயக முறைமை என்பது புதிய உலக ஒழுங்கு விதியின் ஆசிய அரசியல் வடிவமாக மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
90 களின் ஆரம்பத்தில் உலக மயமாதலை தனது கட்டுப்பாட்டுக்குள் பேணும் நோக்கோடு அமரிக்க அணியானது ஆசிய அரசுகளுக்கெதிரான எதிர்ப்பரசியலை தனது எல்லைக்குள் கொண்டுவர முயற்சித்ததன் உருவாக்கமே தன்னார்வ அமைப்புக்களும் அடையாள அரசியலுமாகும்.
எதிர்ப்பரசியலிற்கான நெகிழ்வுத் தன்மையை ஆசிய ஜனநாயகம் கொண்டிருக்கும் வரையில் மேற்கின் ஆதிக்கம் எதிர்ப்பு அமைப்புகளூடாக ஆசிய அரசுக்களை கட்டுப்படுத்தும் என்பதை இந்தியா போன்ற உருவாகும் ஆசிய வல்லரசுகள் கண்டுகொள்ள நாளெடுக்கவில்லை.
ஆக, எதிர்ப்பரசியலுக்கான ஜனநாயகம் வழங்கப்படுமானால், அவ்வரசியல் மேற்கின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படும் என்பதை உணரவாரம்பித்தன் மறு விளைவே அதற்கான ஜனநாகத்திற்கான மறுப்பாகும். இந்த ஜனநாயகத்தைக் கோரும் சக்திகளெல்லாம் புதிய வல்லரசுகளால் உள்வாங்கப்பட்டோ அல்லது அழித்தொழிக்கப்பட்டோ நிர்மூலமாக்கப்படுகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற மனிதப்படுகொலையினதும் அதன் தொடர்ச்சியான அடிப்படை உரிமை மறுபினதும் அரசியற் பின்புலம் இவ்வாறு தான் அர்த்த்ப்படுத்தப்ப்டலாம்.
இதனூடாக இரண்டு பிரதான நோக்கங்களை இந்தியா போன்ற ஆசிய வல்லரசுகள் நிறைவேற்றுக் கொள்கின்றன.

1. தனது அரசியற் பொருளாதார நலன்கள் மீது மேற்கின் தாக்குதல்களைத் தடுத்தல்.

2. புதிய சமூக ஒழுங்மைவு உருவாக்கவல்ல எதிர்ப்பரசியலை நிர்மூலமாக்கல்.
இவை இரண்டுமே ஒன்றோடொன்று பிணைந்வையெனினும், தமது அரசுகளுக்கெதிராக உருவாகும் போராட்டங்களை மேற்கு நாடுகள் கையாள்வதைத் தடுத்து அதனை எதிர்கொள்ள புதிய இராணுவ அரசியலை முன்வைக்கும் ஆசிய வல்லரசுகள் இலங்கையைத் தமது பரீட்சத்தக் களமாக மாற்றியிருக்கின்றன.
ஏப்பிரல் 2008 இல் தந்திரோபயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சமாதானம் என்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமானது என்றும், பயங்கரவாதத்தைக் கையாள்வதாகைருந்தாலும், உலகப் பொருளாதாரத்தின் உறுதித் தன்மையைப் பதுகாப்பதாக இருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபையை மறு சீரமைப்பதாக இருந்தாலும் இந்தியா தனது பங்களிப்பை வழங்க முடியுமென்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது என்று குறிப்பிட்ட சில நாட்களிலேயே இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நாங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் இதனைக் கையாளுகின்ற காலம் நெருங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புதிய துருவ வல்லரசுகளான இந்தியா சீனா போன்றன எதிர் நோக்கவிருக்கும் புதிய பிரச்சனைகளை வகைப்படுத்தும் அமரிக்க உளவுத்துறை கவுன்சிலனது, குறித்த சில பிரதான பிரச்சனைகளை முன்வைக்கிறது.
முதலாவதும் முக்கியமானதுமாக பயங்கரவாதம் முன்வைக்கப்படுகிறது.
பயங்கரவாதம் என்பது தேசிய எல்லைகளுக்கு அப்பால் செல்லுகின்ற வாய்ப்பை தெளிவுபடுத்துகின்ற இவ்வறிக்கையானது, அதன் மூலமாக தேசிய இனங்களின் தனித்துவத்திற்கான அரசியல், உருவாகும் வேலையில்லாத் திண்டாட்டம், இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்களின் மத ரீதியான அடையாள அரசியல் என்பவற்றைக் குறிப்பிடுகின்றது.
இவ்வறிக்கை, “பயச் சுற்று” என்ற கருத்தாக்கத்தின் கீழ் ஆராயப்பட்டிருக்கும் இவ்வாறான உலகின் புதிய ஒழுங்கமைபிற்கெதிராக,ஆசிய வல்லரசுகளின் பொருளாதார சக்திகெதிராக உருவாக வல்ல “பயங்கரவாத” எதிர்ப்பர்சியல் இவ்வல்லரசுகளின் பிரதான பிரச்சனையாக முன்வைக்கிறது.
இவ்வாறான வன்முறை சார்ந்த எதிர்ப்பரசியலை எதிர்கொள்ளவும் அதனை ஆரம்பத்திலிருந்தே நிர்மூலமாக்கவும் அமரிக்க அணி முன்வைத்த கருத்தாக்கங்கள் தான் அடையாள அரசியலும் அதன் வன்முறை நோக்கிய வளர்சியை கட்டுபடுத்தும் தன்னார்வ நிறுவன்ங்களுமாகும். இந்தத் தன்னார்வ நிறுவனங்கள் எங்கெல்லாம் எதிர்ப்பரசிய உருவாகிறதோ அதனை தனது பணபலத்திற்கு உட்படுத்தி தற்காலிக உதவிகள் மூலம் நிர்மூலமாக்குவதுடன் மட்டுமன்றி அதே எதிர்ப்பரசியலையும் குடிமைச் சமூகங்களையும் தனது கட்டுப்பாட்டுள் வைத்திருப்பதனூடாக தேசிய அரசுகளின் மீது ஆளுமை செலுத்தும் நிலைக்குச் வளர்ந்து விடுகின்றன.

ஆக, எதிர்ப்பரசியல் உருவாவதற்கான ஜனநாயகத்தையே நிராகரித்தல் என்பதும் அவ்வாறான அரசியலை இரணுவ வன்முறையூடாக அழித்தொழிப்பதுமே திட்டவட்டமான தந்திரோபாயமாகக் கையாள ஆரம்பித்திருக்கும் இந்திய அரசானது, சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு ஆசிய வல்லரசு ஜனநாயகத்தின் இன்றைய வடிவத்தை புதிய உலக ஒழுங்கமைப்பின் அடையாளமாக முன்வைக்கிறது. ஆசிய வல்லரசுகளின் பொம்மை அரசாகத் தொழிற்படும் இலங்கை அரசானது, இந்த வல்லரசு ஜனநாயத்தை தனது சொந்த மக்கள் மீது பிரயோகித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அழித்தொழிக்கும் தந்திரோபயமானது உலக ஒழுங்கானது ஒரு உறுதியான வடிவத்தை எடுக்கும் வரையில், மேற்குலகின் ஆதிக்கம் ஆசியாவில் சாத்தியமற்றாதாகும் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். பெரும் பாலான பொருளியல் வல்லுனர்களின் கருத்துப்படி 2020 இல் ஆசியப் பொருளாதாரமும், உலக ஒழுங்கும் தனது புதிய வடிவத்தை முழுமையாகப் பெற்றிருக்கும் என்கிறார்கள்.
இதன் பின்னதான் இந்தியாவின் அடக்குமுறை வடிவம் எவ்வாறு அமையும் என்பது நிச்சயமற்றதாக இருந்தாலும் அது உருவாகும் எதிர்ப்பரசியலின் உறுதியையும், வியூகங்களையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும்.
“இந்தியாவும் சீனாவும் 2020 இல் வல்லரசுகளாக உருவெடுக்கும் என்பது மறுதலையான உறுதியான உண்மை என்றாலும் அவற்றின் சர்வதேச உறவு நிலை எவ்வாறு அமையும் என்பது உறுதியாகக் கூற முடியாது” என்கிறது அமரிக்க “தேசிய உளவு கவுன்சில்”.

“புதிய வல்லரசுகளின் சமூக ஒழுங்கு விதிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகளதும் எதிர்ப்பரசியலதும் தன்மை மாறுபடும்” என்று மேலும் கருத்து வெளியிடுகிறது தேசிய உளவு நிறுவனம்.

பெரும் பகுதியான சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் பகுதியும் படித்த தகைமை பெற்ற இன்னொரு புதிய சமூகமும் வேலையில்லாத் திண்டாட்டங்களாலும், தேசிய இனப்பிரச்சனை, இஸ்லாமிய மத வாதம் போன்ற அடையாள அரசியலின் தாக்கத்தாலும் புறக்கணிக்கபப்ட மக்கள் பிரிவினரே எதிர்ப்பரசியலின் பிரதான இயங்கு சக்திகளாக இந்த புதிய வல்லரசுகளின் அரசியலுக்கு எதிராக முன்னெழுவர் என எதிர்வுகூறும் அமரிக்க உளவு நிறுவனதின் அறிக்கை 2020 இல் இவ்வெதிர்ப்பு சக்திகள் தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச வலைப்பின்னலைக் கொண்ட அமைப்பாக உருவெடுக்கும் என்கிறது.
2020 இல் இந்தியா போன்ற துருவ வல்லரசுகளின் பிரதான பிரச்சனையாக அமையப்போகும் இவ்வெதிர்ப்பு அரசியலின் பண்பு என்பது முன்னைய வன்முறை சார் எதிர்ப்பரசியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமையும் எனக் குறிப்பிடுகிறது.
“பயங்கரவாதத்திற்கெதிரான தகவற் தொழிநுட்ப அடிப்படையைக்கொண்ட நடவடிக்கைகளானது பயங்கர வாதிகள் ஓர்ரிடத்தில் மத்தியத்துவப்படுத்தப்படுவதைத் தடுக்கும்2 என்று குறிப்பிடும் இவ்வறிக்கை இதுவே எதிர்ப்பரசியலின் பண்பையும் தீர்மானிக்கும்” என்கிறது.

எதிர்பரசியலின் ஐந்து வகையான நவீன வன்முறை வடிவங்கள் தொடர்பாக அமரிக்க தேசிய உளவுத்துறை குறிப்பிடுகிறது.
1. தகவற் தொழில் நுட்பம் என்பது எதிர்ப்பரசியலின் அடிப்படையாக அமையும்.
-எதிப்பியக்கங்களையும் அமைப்புக்களையும் சார்ந்தவர்கள் ஓரிடத்தில் கூடியிருப்பதும், அங்கிருந்து திட்டங்களை வகுத்துக் கொள்வதும் முற்றிலுமாகத் தேவையற்றதாகி விடுகிறது.
-பயிற்சிக்கருவிகள், பயிற்சித் திட்டங்கள் வழி முறைகள், தாக்குதல் இலக்குகள், ஆயுதப்பாவனை தொடர்பான விளக்கங்கள், பணம் திரட்டல் போன்ற பெரும்பாலான திட்டங்கள் இன்ரநெட் போன்ற தகவல் தொழிநுட்ப சாதனங்களூடாகவே இடம்பெறும்.
லண்டனில் நடைபெற்ற மாநாட்டின் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பான பெரும்பாலன திட்டங்களும் தொடர்புகளும் ரியுட்டர் எனப்படும் சமூக இணைய வலையினூடாகவே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கும் டைம்ஸ் சஞ்சிகை இதனூடாகவே ஒரு சில மணி நேரங்களிலேயே ஊர்வலத்திற்கான ஆட்பலத்தைத் திரட்டக்கூடிய நிலமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றது.
2. அரச தொழில் நுட்ப மையங்களின் மீதான “சைபர்” தாக்குதல்கள்
– சைபர் தாக்குதல் எனப்படுகின்ற கணனி அமைப்பிற்கெதிரான தாக்குதல்களில் அரச மையங்களின் கணனித் தொடரிகளின் மீதான வைரஸ் தாக்குதல் இலகுவில் கட்டுப்படுத் தமுடியாத்வொன்று,
– பொது மையங்களில் சேகரிக்கப்பட்டுள்ள, திட்டங்கள், பாதுகாப்புத் தகவல்கள் போன்றவற்றுள் உள்ளீடு நடத்துவதும் அவற்றை மாற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து கொள்வதும் தடுப்பதென்பது முழுவதுமாக சாத்தியமான் ஒன்றல்ல.
3. – சிறிவகை அணுவாயுதங்கள்.
சிறிய வகையான அணுவாயுதங்கள் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், “பயங்கரவாதிகள்” இவ்வாறான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தகவற் தொழில் நுட்ப வளர்ச்சியும் பரந்துபட்டிருக்கும் சூழலில் இவாறான ஆயுதங்கள் ஒரு புறத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கோடும் மறு புறத்தில் அரசுகள் மீதான அழுத்தங்களை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட வாய்ப்புகளுண்டு.
4. உயிரியல் ஆயுதங்கள்.
“உயிரியற் பயங்கரவாதம்” என்பது சிறிய குழுக்களால் மேற்கொள்ளப்படலாம் என்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் பரிசோதனைக் கூடங்களாக சமையலறை கூடப் ப்யன்படலாம் என மேலும் கூறும் இவ்வறிக்கை இவ்வாயுதங்களூடாக இவ்வாறான தாக்குதல்கள் எந்த அதிகார அமைப்புக்கள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே நடாத்தி முடிக்கப்படலாம் என்கிறது.
5. கதிரியக்க ஆயுதங்கள்.
பெருந் தொகையான மக்கள் அழிவை ஏற்படுத்தவல்ல இவ்வாயுதங்கள் பெரிய தேசிய அரசுகளையே ஆட்டம் காணும் நிலைக்கு நகர்த்தவல்லன. சிறு வகையான அணுவாயுதங்களும் இவ்வகையினுள் அடக்கப்படலாம்.
“அழிவரசியலை” அடிப்படையாகக் கொண்ட இவ்வகையான ஆயுதங்களின் பாவனை வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டதாக அமையலாம்.
1. திட்டமிட்டே மேற்கொள்ளப்படும் அழிவை ஏற்படுத்தும் தாக்குதல்கள்.
2. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலான பாவனை.
இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுக்கள் போன்ற மத அடிப்படை வாதக் குழுக்களின் இவ்வகையான திட்டமிட்ட, சாத்தியமான ஆயுதப்பாவனைகளை குறித்துக்காட்டும் இவ்வறிக்கையானது, சமூகத்தின் மீதுள்ள வெறுப்பினடிப்படையிலேயெ இக்குழுக்கள் இவ்வாயுதங்களை அழிக்கும் கருவியாகப் பயன் படுத்துகின்ற என்கிறது.
இன்னொரு வகையில் திட்டமிட்ட இனப்படுகொலைகளை நடத்தும் சிறீலங்கா அரசு போன்ற அரசுகளை மிரட்டுவதற்கும், ஜனநாயகத்திற்கான அரசியல் வெளியை ஏற்படுத்தவும் எதிர்ப்பு சக்திகள் தவிர்க்கவியலாத கையறு நிலைக்குத் தள்ளப்ட்ட சந்தர்ப்பங்களில் இவ்வகையான ஆயுதங்களின் பகுதியான பாவனைகளை நாடவும் வாய்ப்புண்டு.
குறிப்பாக அரச அதிகார மையங்களின் கணனி வலைப் பின்னல்கள் மீதான சைபர் தாக்குதல்களும், தகவற் தொழில் நுட்பத்தின் பாவனையும் வன் முறை எதிர்ப்பரசியலின் அடிப்படைத் தந்திரோபாயங்களாக வளர்ச்சியடைதல் என்பது தவிர்க்க முடியாததாகவே காணப்படுகிறது.

அடக்கு முறையின் கோரமும் அதனோடான தகவற் தொழில் நுட்பத்தின் பாவனையும், ஆசியப் பொருளாதார வளர்ச்சிக்கான அரசியலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் மீதான தாக்குதல்களும் நவீன அழிவுக் கருவிகளின் பாவனையை அதிகரிக்கவே செய்யும்.
ஆக, வன்முறை சார்ந்த எதிர்ப்பரசியல் என்பது தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்வாக மாறிவரும் நிலையில் அதன் நவீன தந்திரோபாய முறைகளும் மாற்றத்துக்குள்ளாதல் என்பதும் தவிர்க்க முடியாததாகின்றது.

எதிரி  தனக்கெதிரான  ஆயுதங்fகளைத் தானே உருவாக்கிக் கொள்வது வரலாறு  முழுவதும் நடைபெறுகின்றது.   தனனை அழிக்கும்  உழைக்கும் மக்களைத் தானே உருவாக்கிக்கொள்ளும்  அதிகாரவர்க்கம்  தனது  உற்பத்தி சாதனங்களையும்  தன்னை அழிக்கும்  பயன்பாட்டிற்கு திறந்துவைத்திருக்கிறது  என்பதை  விக்கிலீக்ஸ் இணையத்தின்  வருகை எதிர்வுகூறுகின்றது.

3 thoughts on ““புலிகளின் பின்” – எதிர்ப்பியக்கங்களின் நவீன வன்முறை வடிவங்கள் : சபா நாவலன்”

  1. அருமையான விளக்கம். இதில் எந்த அளவிற்கு நுணுக்கமாக மற்றவர்கள் புரிந்து கொண்டு செயல்படுவர் என்பது தெரியவில்லை. குறிப்பாக இளைஞர்கள் சித்தாந்த ரீதியில் அகப்படாமல் தன்னிச்சையாக இப்பொழுதுள்ளப் பிரச்சினைகளை அலசி, அதற்கேற்றார் போல செயல்பட்டால் நல்லது. சமூகத்தில் ஏற்கெனவே பற்பல பிரழ்ச்சிகள் இருக்கும்போது [அதனை உருவாக்கும் போக்கை நான் சமூக தீவிரவாதம் என்பேன்], மின்னணு மாயவலையில் சிக்காமல் இருப்பது நல்லதே.

  2. இந்திய பிராந்திய வல்லரசின் கொடூரங்களை படம் போட்டுக் காட்டும் இந்தக் கட்டுரை இராணுவத் தந்திரோபாயங்களையும் பேசுகிறது. மிகச் சிறப்பான கட்டுரை.

  3. இரண்டு கிழமை வெய்யில் அடித்தாலோ,அல்லது சினோ கொட்டினாலோ உடனே உலக வெதெர் பற்றீக் கவலைப்படும் வெள்ள தன் அணூக் கழிவுகள எல்லாம் ஏழைநாடுகளீல் கொண்டுபோய்க் கொட்டும் போது மட்டும் எதைப்பற்றீயும் கவலைப்படுவதில்லை.

Comments are closed.