எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும்: ஜமாலன்

இதன்பொருள், இதற்கு முன்பு இந்த அடையாளம் இல்லை என்றோ சாதிய ஒடுக்குமுறைகள் இல்லை என்றோ அல்லது இந்த அடையாளத்தை மறுக்கிறோம் என்பதோ அல்ல. வரலாறு தெரிந்த காலங்களில் இருந்தே இந்திய சமூகம் வர்ணம் மற்றும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. அது சமூகத்தின் வாழ்தளத்தில் செலுத்திவந்த ஆதிக்கத்தை பிரித்தானிய அரசானது அரசியல் தளத்திற்கு நகர்த்தியது. இந்தியர்களை எப்படி ஆள்வது என்பதை, இந்த சாதிய முறையே ஆங்கிலேயருக்கு கற்று தந்துள்ளது என்றால் மிகையாகாது. பிரித்தானியர்கள் செய்தது இந்த கணக்கெடுப்பின் மூலம் சாதி என்பதை சமூக வாழ்தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கு மாற்றியதுதான். வேறுவகையில் சொன்னால் பிரித்தானியர்கள் இன்றைய சாதிய அரசியலுக்கான ஊற்றுக் கண்களை விதைத்தார்கள். சாதியை அரசியல்படுத்திய இக்கணக்கெடுப்பில் பார்ப்பனீயர்கள் ஆங்கிலேய இனவாத தூய்மையுடன் அடையாளப் படுத்தப்பட்டு தங்களது உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்(KH). பார்ப்பனீயர்கள் தங்கள் செல்வாக்கை, மறு உறுதி செய்துகொள்ள இது வழிவகை செய்தது. இதற்கு ஆங்கிலேயக் கல்வி ஒரு காரணமாக அமைந்தது. முஸ்லிம்களும் சத்ரியர்களும் செல்வாக்கிழந்தனர். அதற்கு சிப்பாய் கலகமும், அதன்பிறகான இந்த கணக்கெடுப்பும் ஒரு காரணமாகியது. இதனை பிவர்லி தெளிவாக தனது கருத்தாக முன்வைப்பதை சுட்டிக்காட்டகிறார் கெவின் (KH). பிரித்தானிய அதிகாரிகளுக்கு கணக்கெடுப்புத் தகவல்களை வடிகட்டவும் முறைப்படுத்தவும் உதவியவர்கள் பார்ப்பனீயர்களே. அவர்களது பண்பாடு மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் இந்த தகவல்களை காலனிய அரசுடன் சோ்ந்து கட்டமைத்தனர். அவர்களது அதிகாரத்தை மறுஉருவாக்கம் செய்து உறுதிபடுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இது பயன்பட்டது. பெளத்தத்தால் வீழ்த்தப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை புஷ்யமித்ர சுங்கன் தனது வாள்கொண்டு மீட்டதைப்போல, காலனிய அரசிடம் தங்களது ஆங்கில கல்வியைக்கொண்டு அதிகாரத்தை மீட்டனர்.

இவ்வாறாக, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை எண்ணி சிறு சிறு துண்டுகளாக பிரித்தறிய சாதி காலனிய அரசுக்கு உதவியது. அதற்காக பிரித்தானிய அரசு கணக்கெடுப்பதற்கான ஒரு தனி நிர்வாக அமைப்பை உருவாக்குகிறது. 1881-ஆம் ஆண்டுதான் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான கமிஸனராக டபிள்யு.சி. பவுடன் நியமிக்கப்படுகிறார். இந்தக் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் நாடெங்கிலும் பாலினம், தொழில் மற்றும் சாதி அடிப்படையில் எடுக்கப்படுகிறது (HIS மற்றும் அறிக்கை-1881). இந்தக் கணக்கெடுப்பில் மொழிவாரியான எண்ணிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்கிறது இந்திய கணக்கெடுப்புத்துறை (HIC). 1881-அறிக்கையின் மூன்றாவது வால்யும் மொழிவாரியான பிரதேசங்களின் சாதிகளின் பட்டியலை 89-பக்கங்ளில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1901-ல் பிரித்தானிய மானுடவியல் ஆய்வாளரான ஹெர்பர்ட் ஹோப் ரிஸ்லி கணக்கெடுப்பு தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டார். இக் கணக்கெடுப்பில் இந்தியர்கள் மொழி அடிப்படையில் ஏழு இனவகைகளாக பிரிக்கப்பட்டனர். மங்கோலியர்கள், திராவிடர்கள், இந்தோ – ஆரியார்கள், துருக்கிய – ஈரானியர்கள், மங்கோலிய-திராவிடர்கள், ஆரிய – திராவிடர்கள் மற்றும் சைத்தோ -திராவிடர்கள. இவர் மானுடவியல் அடிப்படையில் மனிதர்களை மூல இனங்களுடன் அடையாளப்படுத்தும் ஒரு பணியாக இந்த கணக்கெடுப்பை நடத்தினார். (1901-ன் அறிக்கை மற்றும் RCT). இக்கணக்கெடுப்பு மானுடவியல் அடிப்படையில் நடத்தப்பட்டதன் நோக்கம் காலனிய அரசிற்கான இராணுவ, போலிஸ் மற்றும் இலங்கை,மலேசியா மற்றும் பர்மா போன்ற நாடுகளுக்கு இந்திய உழைப்பாளிகளை அழைத்துச் செல்வது போன்ற பணிகளுக்காகதான். சாதிகளை இடத்திற்கு ஏற்ப வரையறுக்கும் பணியும் இதில் நடந்தது. ஒரே சாதியினரை கர்நாடகாவில் வொக்காலிக்கா என்றும் தமிழகத்தில் வேளாளர் என்றும் அட்டவணைப் படுத்தப்பட்டதைக் கூறலாம். இது இந்தியாவில் புழங்கிவந்த எண்ணற்ற சாதிகளை அதிகப்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பையும் கொண்டிருக்கிறது. ஆக, ரைஸ்லியின் இந்த சமூக ஆவணம் ஒரு அரசியல் ஆவணமாக மாறியது. இனவியல் வரையறை பல சாதி சங்கங்கள் உருவாக காரணமாகியது என்கிறார் டிர்க்ஸ். தமிழகத்தில் வன்னியர் சங்கம் தங்களை சத்திரியர்களாக குறிப்பிடுவதும் வருண முறையிலிருந்து வெளியேறி சாதிய முறைக்குள்ளும் இந்த வர்ணத்தேடல் இருப்பதை சொல்லலாம். இக்கணக்கெடுப்பில் வர்ணம் நீக்கப்பட்டு அவ்விடத்தில் சாதியமுறை கட்டமைக்கப்பட்டது என்றால் மிகையாகாது?

இப்பொழுது துவங்கிய வாசகத்திற்கு வருவோம். ஏன் “புள்ளிவிபரத்தை“ பொய் என்கிறோம். எடுக்கப்பட்ட தரவுகள் பொய்யாகலாமே ஒழிய புள்ளிவிபரம் எப்படி பொய்யாக முடியும்? என்கிற கேள்வி வரலாம். எடுக்கப்பட்ட தரவுகளில் எடுப்பவர், சொல்பவர் மற்றும் தொகுப்பவரின் புரிதல் வேறுபாடுகள் இருக்கிறது. அதையும்மீறி சரியான தரவுகள் எடுக்கப்பட்டதாகக் கொண்டாலும் அதனை ஒழுங்குப்படுத்தும் அறிவும்
ஆய்வுமுறையும் அதன் பின் இயங்கும் கருத்தியலும்தான் இங்கு பிரச்சனைப் படுத்தப்பட்டுள்ளது. அறிவும் ஆய்வுமுறையும் கருத்தியலும் அரசியல் தன்மை வாய்ந்தது எனும்போதே அது ஒரு புனையப்பட்ட அல்லது புனைவு வகைப்பட்டதாக ஆகிறது. புனைவு என்பது உண்மை அல்ல, உண்மை என்கிற ஒன்றை குறிநிலைப்படுத்திக் கொண்டிருப்பதே. இல்லாத ஒன்றை புனையமுடியாது. ஆக, இங்கு பொய் என்பது ஒரு புனைவு. புள்ளிவிபரம் என்கிற புனைவிற்குள் மெய் அல்லது நிஜம் என்கிற தரவுகள் உள்ளன. அந்த தரவுகள் ஒழுங்கமைப்படும் அல்லது வரிசைப்படுத்தப்படும் முறைதான் புனைவாக உள்ளது. எடுக்கப்பட்டத் தரவுகளில் எடுப்பாளரின் விருப்பு வெறுப்பும், பல இடங்களில் அவர்களே மனம்போன போக்கில் இட்டு நிரப்பிக்கொண்டதையும், தகவல் சேகரிப்பதற்கு அவர்கள ஆதாரமாக கொண்ட முறைகளும் அதில் உள்ள தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது கெவின் போன்ற ஆய்வாளர்களால் (KH). 1872, 1881, 1891 மற்றும் 1901 அறிக்கைகளில் இந்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு ஆவணமாகியுள்ளன.

10-ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மக்ககள் தொகை கணக்கெடுப்புகள் என்கிற மேற்சொன்ன “புனைவை“ அல்லது “பொய்யை“ கடைசியாக இந்திய அரசு எடுத்த 2001-கணக்கெடுப்பும் அம்பலப்படுத்தியுள்ளது. 2001-ல் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக எடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பில் (இதற்கு முந்தைய சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு 1931-ல் செய்யப்பட்டது) அன்றை குடியரசுத்தலைவராக இருந்த இந்தியாவின் முதல் குடிமகனான மேதகு கே. ஆர். நாரயணன் அவர்களின் சாதி குறிப்பிடப்படவில்லை (Indian Express- February 15, 2001- President picks huge hole in census, he can’t list his caste-Sankarshan Thakur). காரணம் அவரது சாதி, கணக்கெடுப்பு அட்டவணையிலேயே இல்லை. இதுபோன்ற எண்ணற்ற தலித் மற்றும் ஆதிவாசிகளின் சாதிகள் அட்டவணையிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மற்றொரு ஆட்சேபனையும் எழுப்பப்பட்டது. அக்கணக்கெடுப்பில் கிறித்தவர்களாக மதம்மாறிய தலித்துகளை மற்றும் ஆதிவாசிகளை கட்டயாமாக இந்து, சீக்கிய மற்றும் பெளத்த மதத்தை தேர்ந்து கொள்ளுமாறு செய்ய முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆக, 2001 கணக்கெடுப்பின் அடிப்படையில் வகுப்புவாத நோக்கு இருப்பது அம்பலமாகியது. கணக்கெடுப்பிற்கு செல்பவர்களின் அரசியல் தேர்வு என்பது இந்தவகை கணக்கெடுப்பை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. பல பகுதிகளில் அவர்கள் தங்களது விருப்பத்திற்கு உட்படாத சாதி மதங்கள் உள்ள ஊர்களில் வெறும் வெள்ளை பேப்பரில் கணக்கெடுப்பு நடத்தியும் அதற்கான முறையான கணக்கெடுப்புத் தாளில் குறிக்காததையும் சுட்டிக்காட்டியுள்ளனர் சில மத தலைவர்கள் (Asian times February 21, 2001.Indian census could produce ‘the most complicated lies’ By Sultan Shahin).

புள்ளியியலின் அடிப்படை அலகு எண்கள்தான். பொதுவாக எண்கள் என்பதை அப்படியே உண்மைகளாக ஏற்றுக்கொள்ளும் ஒரு மனநிலை மனிதர்களின் அடிப்படை மனநிலையாக உள்ளதால் புள்ளியியலை ஏற்றுக்கொள்வதும் மனித மனதின் அடிப்படையாக உள்ளது. இங்கு எழும் அடிப்படைக் கேள்வி எண்கள் என்றால் என்ன? அதை ஏன் நாம் உண்மையாக கருதுகிறோம். இதற்கு எண்கள் குறித்த தோற்றங்களுக்குள் நாம் பயணிக்க வேண்டும். இப்பயணம் தரும் முடிவு எதுவாக இருந்தாலும், இன்று மக்கள் மனஅமைப்பில் எண்கள் உண்மையானவை என்பதுதான் கட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு நீட்சியாகத்தான் எண்ணப்பட்ட உடல்கள் மீது எழுதப்பட்ட கதைகளையும் உண்மையாக நம்பும் மனநிலையில் வாழந்து கொண்டிருக்கிறோம். அதிகாரம் இந்த எண்ணுதல் வழியாக இந்திய உடல்களின் அரசியல் கட்டமைப்பை படிக்கிறது. காலனிய அரசானது இதனைக் கொண்டு இந்திய சமூக சாதிய உடல்களை இந்திய அரசியல் சாதிய உடல்களாக கட்டமைக்கப்பட்ட கதையே அறிமுக அளவில் இங்கு நாம் பேசியது.

-ஜமாலன் (jamalan.tamil@gmail.com)
24-03-2008

படங்கள்

1. பிரித்தானிய இந்தியா – ருத்யாத் கெப்ளிங் பயணப்பாதை

2. Lines of the 12/9. R.A.[Royal Artillery] Morar Gwalior – Photographed by Samuel Bourne (1883)

3. Poplar Avenue, Srinagar, Kashmir – Photographed by Photographed by Samuel Bourne (1883)

இக்கட்டுரை தீராநதியில் வரும் எனது ”நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்” என்ற தொடரில் வெளியாகும் இரண்டாவது கட்டுரையின் இறுதி பகுதி. தீராநதி ஜீன்-2008 இதழில் வெளிவந்துள்ளது. நன்றி: மொழியும் நிலமும்