எச்சரிக்கை : லைக்கா எதிர்ப்பு-பொன்முட்டை போடும் வாத்து

LycaLebaraபுலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய அரசியல் என்பதே பெருந்தொகைப் பணத்தோடு தொடர்புடைய வியாபாரம். புலிகள் வன்னியில் செயற்பட்ட காலத்தில் சுருட்டிய பணத்தைப் பதுக்குவதற்காகவும் அதனைப் புனிதப்படுத்தவும் உயர்மட்டத் தலைமைகள் நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செயற்படுகின்றன.

வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் உட்பட இணையத் தளங்கள் வரை இத் தேசிய வியாபார வடடத்தின் உள்ளேயே செயற்படுகின்றன. இதற்கு அப்பால் மக்களைப்பற்றிச் சிந்திக்கும் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு வகையில் அழிப்பதற்கு இக் குள்ளநரிக் கூட்டங்கள் காத்திருக்கின்றன.
இவற்றின் இடையே தேசிய வியாபாரத்தைக் கையகப்படுத்த லைக்கா லெபாரா என்ற இரண்டு தமிழர்களின் போட்டி நிறுவனங்கள் உள் நுளைந்தன. இந்த இரண்டு நிறுவனங்களும் ஊடகங்களைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. இலங்கை அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருக்கும் இந்த இரு நிறுவனங்களதும் பண வெறி ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் வீரம்செறிந்த போராட்டத்தை சிறுகச் சிறுக அழித்துகொண்டிருக்கிறது.

இனியொரு இணையத்தில் லைக்கா நிறுவனத்தின் இலங்கை அரச தொடர்புகள் குறித்து பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஊடக வியாபாரிகள் லெபாராவைக் குளிர்ச்செய்து அவர்களின் எலும்புத்துண்டுகளைப் பெற்றுக்கொண்டு வாலாட்டுவதற்காக லைக்கா நிறுவனத்திற்கு எதிரான இனியொருவின் கட்டுரைகளையும் தகவல்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

லைக்காவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் இணைய ஊடகங்களில் லெபாராவின் விளம்பரம் அருவருப்பாகத் தொங்கிக்கொண்டிருக்கும் என்பதை அடித்துக்கூறலாம். அதே போல வானொலி தொலைகாட்சி ஆகியன இந்த நிறுவனங்களின் பண வழங்கலிலேயே வியாபாரத்தை நடத்துகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து தமிழ்க் கலைகளை அழிக்கும் நடவடிக்கைகளில் பேயர் போனவை.

லைக்காவிற்கு எதிரான இனியொருவின் தகவல்களை மீள்பிரசுரம் செய்யும் இணையங்களும் லைக்காவிற்கு எதிராகத் தொடைதட்டி கோவணத்துடன் சண்டித்தனம் காட்டும் ஊடகங்களும் பெரும்பாலும் லெபாராவின் பிச்சைக்காக சிரட்டையுடன் அலையும் கோளைத்தனமாவர்கள்.

இவர்கள் பல்தேசிய நிறுவனங்களுக்கும் ஏகபோக அரசுகளின் அழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல. மாறாக அவைகளின் அடிவருடிகளே! இவர்களின் நோக்கம் பிழைப்பு மட்டுமே.

ஈழத் தமிழ் சமூகத்தை மையமாகக்கொண்டு புலம்பெயர் நாடுகளில் வியாபாரம் செய்யும் பல்தேசிய நிறுவனங்களான லைக்காவும் லெபாராவும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுளைவதற்கு முன்பாகவே தமக்குள் மோதிக்கொண்டன.

லைக்காவிற்கு எதிராக இன்று உருவாகியிருக்கும் அலை என்பது தமிழ்த் தேசிய வியாபாரிகளுக்குப் பொன் முட்டை போடும் வாத்து.