எங்கள் நாட்டுக்குள் நுழைந்து எங்கள் நாட்டு அப்பாவிகளை தாக்கியழிப்பதை ஏற்கமுடியாது:பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பேர்வேஷ் கியானி

13.09.2008.

பாகிஸ்தானின் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த பகுதியிலேயே தீவிரவாதிகளும் பதுங்கியுள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தப்பி விடுகிறார்கள். அவ்வாறு தப்பியவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தை உளவுத் துறையினர் மூலம் கண்டறிந்து அவர்கள் பதுங்கி இருக்கும் வீடுகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இவ்வாறான தாக்குதல்களில் பல நேரங்களில் அப்பாவி மக்களும் பலியாகி விடுகிறார்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதில் 15 பேர் பலியானார்கள். இவர்களில் அதிகளவானோர் சிறுவர்களும் பெண்களுமாவர்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பேர்வேஷ் கியானி அமெரிக்காவை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த வெளிநாட்டு சக்திகள் அனுமதிக்கப்பட மாட்டாது. சமீப காலத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 15 அப்பாவிகள் பலியாகியுள்ளனர். எங்கள் நாட்டுக்குள் நுழைந்து எங்கள் நாட்டு அப்பாவிகளை தாக்கியழிப்பதை ஏற்கமுடியாது அதை கைவிடுங்கள்.

பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பந்த விதிமுறைகள் உரிமை அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஒப்பந்த விதிமுறைகள் தெளிவாக உள்ளன. ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது சம்பந்தப்பட்ட நாட்டின் பொறுப்பு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் அமெரிக்க போர்க்கப்பலில் அமெரிக்க இராணுவத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களே என்று நிருபர்கள் கேட்டபோது, இந்த பிரச்சினை பற்றி அப்போது அவர்களுக்கு எடுத்துக் கூறினேன் என்று கியானி தெரிவித்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அகமது முக்தாரும் இந்த பிரச்சினை பாகிஸ்தான் வந்திருக்கும் ஜேர்மனியின் விமானப்படைத் தளபதியிடம் எடுத்துக் கூறினார். இது போன்ற சம்பவங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்காளியாக இருப்பதை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும்படி அமெரிக்க இராணுவத்துக்கு ஜனாதிபதி புஷ் இரகசிய உத்தரவிட்டு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக அவர் பாகிஸ்தான் அரசின் அனுமதியைப் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.