லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் : குமாரி

உலகம் முழுவதும் வசிக்கும் பல்வேறு முக்கியஸ்தர்களுக்கு தற்பொழுது ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ”I have no comments on this email and just have forwarded to you for your reference:- Keeran”, என்று எழுதப்பட்டு உள்ளது. mkeeran@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் இருந்து இது பலருக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலனை குறிவைத்து தாக்கி பதினைந்து கேள்விகளை உள்ளடக்கியதாக அப்பாவி தமிழன் என்ற இனந்தெரியாத பெயரில் இந்த பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி நான் ஜெயபாலன் அவர்களை தொடர்புகொண்டு விசாரித்த பொழுது, ”கீரன் அனுப்பிக் கொண்டிருக்கும் இந்த மெயிலை பற்றி சில பத்திரிகையாளர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்டு இந்த மெயிலின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்தனர்.” என்று சொன்ன அவர் ”ஒவ்வொரு செய்தியை வெளியிடும் பொழுதும் ஊடகவியளாளர் தம்மைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களை அறிவித்துக் கொண்டிருப்பது நடைமுறைச் சாத்தியமல்ல. அப்படி உலகின் எந்த ஊடகவியலாளர்கள் செய்வதாகவும் எனக்கு தெரியாது.” என்று கூறினார்.

உங்கள் மீதான இக்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்ட பொழுது, ”நான் வீடு வாங்கினான். கார் வாங்கினான். கடை வாங்கினான். ஒரு கலியாணம் கட்டினான். மூன்று பிள்ளைகள் பெற்றனான். இதில ஒளிக்க ஒன்றுமில்ல. யாருக்கு என்ன பிரச்சினை. லண்டனுக்கு வந்த காலத்தில இருந்து இரவு பகலா தும்படிக்கிறன். கடந்த வருடம் வரை தோழர் வேலுவுடன் சேர்ந்துதான் தும்படிச்சனான்….” என்று மூச்சு விடாமல் தொடர்ந்த ஜெயபாலனை இடைமறித்து…….

நீங்கள் நிறுவனங்கள் தனிநபர்களிடம் இருந்தெல்லாம் காசு வாங்கிறிங்கள் என்று சொல்லப்படுகிறதே என்று கேட்டபொழுது, ”தும்படிக்கும் இடங்களில் வேலைக்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு விதத்தில் எனக்கொரு காசும் வருவதில்லை. இடைக்கிடை லொட்டரி போட்டு போட்டுப் பாக்கிறன். இன்னும் வாய்க்கவில்லை. விழுந்தால் தேசம் IP TV ஜ எதிர்பாருங்கள்” என்றார்.

நீங்கள் பொலிசுடன் புலியுடன் உளவுத்துறைகளுடன் எல்லாம் வேலை செய்கிறீர்களாம் என்று கேட்ட பொழுது, ”பத்திரிகையாளன் என்ற முறையில் எல்லா உளவுத் துறைகளுக்குள்ளும் ஊடுருவி தகவல் எடுக்க முயற்சிக்கிறேன். ஆனால் விடுகிறாங்கள் இல்லை. பொது மகனில் இருந்து பிரதமர் வரை சந்தித்து தொடர்புகளை வைத்து எல்லாற்ற வண்டவாளங்களையும் தேசம்நெற் என்ற தண்டவாளத்தில் ஏற்றுவதே என் தொழில்” என்றார்.

மேலும் சொல்கையில், ”பத்து வருசங்களுக்கு மேலாக ஜந்துக்கும் மேற்பட்ட ஊடகங்களில் நூற்றுக்கணக்கான செய்திகளை வெளியிட்டுள்ளேன். போதாக்குறைக்கு கீரன் நடத்திய நிருபம் முதற்கொண்டு வேறு பல பத்திரிகைகளுக்கும் இலவசமாக செய்தி வழங்கியுள்ளேன். நிருபம் மட்டும் செய்தியாளர் பெயர் போடுவதில்லை. மற்றைய எல்லா செய்திகளுடனும் பெயர் தொடர்பு முகவரி போன் நம்பர் போட்டுத்தான் வெளியிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட தமிழ் ஆக்கள் போனடிச்சு கிழி கிழி என்று கிழிச்சு காது செத்துப்போச்சு. சிலநேரம் செய்திக்கு கிழி விழாட்டி போட்ட செய்தி சரியோ என்று திரும்பிப்போய் பாக்கிற அளவுக்கு தமிழ் மக்கள் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை. எல்லா செய்திகளுக்கும் பின்னால் என்கென்றொரு தனிப்பட்ட காரணம் இருக்கென்று கதைப்பவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி தங்களை பற்றி மட்டும் சிந்திப்பவர்கள்.” என்றார்.

அப்படியானால் இந்த மொட்டை பிரச்சாரத்தை செய்பவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது, ”இந்த ஈ மெயில் விளையாட்டு யார் செய்வினம் என்று கண்டுபிடிக்கிறது ஒன்றும் ரொக்கட் சயன்ஸ் இல்ல. தோழர் என நான் நினைத்த பாலன் என்ற ச.பாலச்சந்திரன் தொகுத்ததை ஓய்வுபெற்ற ஊடகவியளாளர் கீரன் ஈ மெயில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் எனது கருத்து.

தேசம் நெற்றில் ஆய்வுக்கட்டுரை ஒன்று சில விசயங்களை அம்பலத்துக்கு கொண்டு வரவிருப்பது கேள்விப்பட்டு பதைபதைத்து விழுந்தடித்து நடக்கும் இந்த பிரச்சாரம் எனக்கு முதலனுபவமில்லை.

தேசம் நெற்றுக்கு எதிராக 74 பேர் கையொப்பம் இட்டு ஒரு அறிக்கை விட்டது உலகம் முழுக்க தெரியும். இதற்கு பதில் ஒன்றை தேசம் ஆசிரியர் குழு தயாரித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த அறிக்கையை விட தூண்டுதலாக இருந்தவர்கள் துடித்து பதைத்து பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காமல் அவதிப்படுவது ஏன்?” என்றார்.

இந்த ஈ மெயில் பிரச்சாரம் ஒரு ஊடகவியலாளருக்கு எதிரான பிரச்சாரம் என்ற வகையில் முக்கியமானது. இது ஊடகவியளாளர்கள் சுயாதீனமாக செயற்படுவதையும் தகவல் சேகரிப்பதையும் பாதிக்கும் நோக்குடையது. இதுபோன்ற ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான போக்கு முக்கியமாக இலங்கை மக்கள் மத்தியில் சர்வசாதாரனமானது

நன்றி : தேசம்நெற்