ஊடகவியலாளர் திலீசாவின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற வெள்ளை வேன்:ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் தொடர்!

thilisa10 ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தின் செயலாளரான இருதின பத்திரிகையின் ஊடகவியலாளர் திலீசா  அபேசுந்தர வசித்துவரும் பொரல்ல டேர்பன்டைன் வீடமைப்புத் தொகுதி அமைந்திருக்குமிடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11.30 அளவில் வெள்ளை வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டிற்குள் நுழையும் வாசல் கதவைத் திறக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

திலீசா  அபேசுதந்தரவின் பெயரைக் கூறி அழைத்துள்ள இந்த நபர்களில் ஒருவர் நுழைவு வாசலைத் தாக்கி அதனைத் திறக்கமுயன்றுள்ளார். இதன்போது வீட்டுக் கதவைத் திறந்து நீங்கள் யார் எனக் கேட்ட பின்னர், அவ்வாறான பெயரில் யாரும் இல்லையெனக் கூறி திலீசா  கதவை மூடியுள்ளார்.

ஊடக அடக்குமுறை, பத்திரிகை சபையை மீண்டும் செயற்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக கொழும்பு ஜயவர்தன கேந்திர நிலையத்தில் ஊடக அமைப்புக்களின் செயற்பாட்டில் நேற்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஊடக அடக்குமுறை, பத்திரிகை சபையை அமைப்பது ஆகிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஊடக அமைப்புக்களுக்கு எழுத்துமூலமான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திலீசா  அபேசுதந்திரவின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்கள் வெள்ளை வேனில் சென்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவமானது அவரைக் கடத்திச் செல்ல அல்லது அவர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான எச்சரிக்கையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 
ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவும், ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தபோதே கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டார். இந்த நிலையில், நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் திலீசாவின் வீட்டிற்குச் சென்று இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் தொடராகவே அமைந்தள்ளது.