ஊடகவியலாளர்களை மிரட்டிய ஊடகத்துறை அமைச்சர்

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைளை செயற்படுத்த ஆலோசனைக்குழு – ஹெகலிய ஊடகவியலார்களிடம் தெரிவிப்பு
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு என விமர்சிக்கப்பட்டது. ஆனால் அக்குழுவின் சிபார்சுகளின் ஆலாசனைகள் அமுல்படுத்தப் பட்டுவருகின்றன. அக்குழுவின் இடைக்கால சிபார்சுகளை அமுல்படுத்த ஆலோசனைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெலிய ரம்புக்வெல ஊடகவியலார்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்து குறுகிய காலத்தில் செப்டம்பர் 13 ஆம் திகதி இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது. இப்போது அக்குழுவின் இடைக்கால சிபார்சுகளை அமுல்படுத்த ஆலோசனைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகவரப்புகளுக்கிடையிலான ஆலாசனைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உட்பட 7 அமைச்சர்களின் செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் சட்டமா அதிபர் தலைவராகவும் இருப்பார்.
ஹெகலியவிடம் ஊடகவியலாளர் ஒருவர் ‘ நல்லிணக்க ஆணைக்குழு முன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சாட்சியமளிக்கையில் 600 பொலிஸார் கொல்லப்பட்டதற்கு கருணாவே காரணம் எனத் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேட்டதற்கு ஹெகலிய, ‘இறுதி அறிக்கை கிடைத்ததும் இது குறித்து ஆராயப்படும். அப்போது நீங்கள் இருப்பீர்களா என்பது சந்தேகமாகவுள்ளது” எனப் பதிலளித்துள்ளார். ஊடகவியலாளர், ‘ஏன் என்னைக் கடத்தப்போகிறீர்களா?” எனக் கேட்டதற்கு ‘ நீங்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை” எனவும் பதிலளித்துள்ளார்.