உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம்:விலாடிமிர் புடின் .

03.09.2008.

மாஸ்கோ: உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம் என ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உலக அளவில் பெரும் நிதி சந்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு சில தனிப்பட்டவர்களின் பொறுப்பற்ற போக்கே காரணம். அமெரிக்க தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற போக்கும், முடிவெடுக்க முடியாமல் திணறுவதுமே இதற்கு முக்கிய காரணம். பொருத்தமான முடிவுகளை அவர்களால் எடுக்க முடியவில்லை.

அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘தொற்று நோயின்’ பாதிப்பிலிருந்து ரஷ்யாவால் நீண்ட காலத்திற்கு தப்பிக்க முடியாது.

பொருளாதார ரீதியிலும், நிதிச் சந்தையிலும் இன்று நிலவி வரும் அனைத்துக் குழப்பங்களுக்கும் அமெரிக்காவே முழுக் காரணம், முழுப் பொறுப்பாகும்.

இருப்பினும் இந்த நெருக்கடி காரணமாக ரஷ்யாவின் தேசிய வளர்ச்சித் திட்டங்களை கைவிடப்படாது என்றார் புடின்.

ரஷ்யாவின் நிதி சிக்கலை சமாளிக்க, அந்நாட்டின் தலைமை நிதி மற்றும் பொருளாதார ஆலோசகராகவும் உள்ள புடின், 1.5 டிரில்லியன் ரூபிள் நிதியை விடுவித்துள்ளார். மேலும் 500 மில்லியன் ரூபிள்கள் வெளியிடப்படும் எனவும் அவர் ெதரிவித்துள்ளார்.