உண்ணாவிரதமிருந்த பெளத்த துறவிகளைக் கடத்திய இலங்கை அரசபடைகள்!

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி பிக்குகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸார் பலவந்தமாக கலைத்தனர்.
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்கக் கோரி கடந்த மூன்று நாட்களாக பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை முதல் கோட்டைப் பகுதியில் சுமார் 200 ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிக்குகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களைப் பலவந்தமாக பொலிஸார் அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் ஊடகவியலாளர்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர்.

இந்நிலையில் பிற்பகல் வேளையில் அங்கு வந்த பொலிஸார், பிக்குகள் அமைத்திருந்த கூடாரத்தை அகற்றியதுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பிக்குகளைப் பலவந்தமாகப் பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.