உடைந்து விழும் அமரிக்க்ப் பொருளாதாரம்!

“வீழ்ந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும்’ என, அமெரிக்க அதிபர் புஷ், “டிவி’யில் மக்களுக்கு விளக்கம் அளித்தார்.மிகப்பெரிய வல்லரசு நாடாக தன்னை உலகில் காட்டிக்கொண்ட அமெரிக்காவில் தற்போது பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து சர்வதேச நாடுகள் மிரண்டு போய் உள்ளன. அமெரிக்க நிதிச்சந்தைகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களை தூக்கி நிறுத்த கோடிக்கணக்கான டாலர்களை வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தொடர்ந்து மேலும் சில வங்கிகள், இழப்புகளை சந்திக்க வரிசைக்கட்டி நிற்கின்றன என்ற செய்தியின் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்தது

ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் அரசு பணத்தை கொட்டி, மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஷ் செயலுக்கு அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் பணத்தை எப்படி தாரைவார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில், அவசரக் கூட்டத்தை அதிபர் புஷ் கூட்டினார்.அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஒபாமாவையும், ஜான் மெக்கைனையும் போனில் தொடர்பு கொண்டு புஷ் பேசினார். தான் கூட்டியுள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து புஷ், “டிவி’யில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க நிதிச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் மந்தமான சூழ்நிலையை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும்இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க காங்கிரஸ் உடனடியாக தலையிடாவிட்டால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.சில நிறுவனங்கள், வங்கிகள் எடுத்த தவறான நடவடிக்கையால் இந்த இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க வேண்டி வந்துள்ளது.

70 ஆயிரம் கோடி டாலர்களை : அமெரிக்க பங்குச்சந்தை சரியான முறையில் செயல்படவில்லை.மேலும், நிதி நிறுவனங்கள், வங்கிகள் சரியாக செயல்படவில்லை என்றால், பல நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்படும். அதனால் பலரும் வேலையிழக்க நேரிடும். ஆகவே, 70 ஆயிரம் கோடி டாலர்களை பெடரல் வங்கி உடனடியாக வழங்குவதற்கு அனுமதியளிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.இவ்வாறு புஷ் பேசினார்.இதற்கு முன் அதிபர் புஷ், ஈராக் போரின் போது அமெரிக்காவின் நடவடிக்கை சரியா என்பது குறித்து கடந்தாண்டு செப்., 13ம் தேதி “டிவி’யில் உரையாற்றினார்.

இன்று பிற்பகல் கங்கிரஸ் புஷ் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. அமரிக்காவின் முக்கிய வங்கிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. அமரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவியுள்ள பொருளாதார நெருக்கடியானது, இந்நாடுகளின் இருப்பையே கேள்விக் குறியாக்கியுள்ள நிலையில், எதிர்காலம் போராட்டங்கள் நிறைந்ததாகவமையும் என எதிர்வு கூறப்படுகின்றது.