உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா

ganthiரத்தினபுரி இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகர். மலையகத்தின் மலைகள் ஒருங்கி உறையும் அழகான பிரதேசம். இலங்கையில் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணாம் பிரதான் இடம் வகிக்கிறது. இரத்தினபுரியில் கடந்த வாரம் ஒரு போலிஸ் அதிகாரி அப்பாவிப் பெண் ஒருவரைத் பட்டப்பகலில் நடுத்தெருவில் எந்தக் கூச்சமும் இன்றி வயர்களால் தாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பலரது உறங்கிக்கிடந்த உள்ளுணர்வைத் தட்டியெழுப்பியுள்ளது.
ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குள்ளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்விற்குள்ளும் முடக்கப்பட்டிருந்த மக்களின் சிந்தனை சிறிய அளவிலாவது மாறியுள்ளது என்பதை இச் சம்பவம் தொடர்பான எதிர்வினைகள் உணர்த்துகின்றன.

ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்வாலும் அடைத்து வைக்கப்பட்ட சமூகம் இன்று தன்னை திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் உதாரணங்களாகின்றன. இன்று வரை புலிகளைக் காரணம்காட்டி ஆயுதப்படைகளின் அதிகாரத்தை வளர்த்துக்கொண்ட பேரினவாத அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எதிராக அதே அதிகாரத்தை இன்று கட்டவிழ்த்து விடுகின்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்க தெருவில் விழுந்துகிடந்த பெண்ணை போலிஸ் அதிகாரி தாக்கியதை சிலர் தொலைபேசிக் கமராவில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தனர்.
34 வயதுடைய காந்தி என்ற ஏழைப் பெண்ணைத் தன்னுடன் பாலுறவு வைத்துக்கொள்ளுமாறு போலிஸ் அதிகாரி கேட்டுள்ளார். மூன்று தடவைகள் போலிஸ் சார்ஜன்ஸ் பாலுறவிற்காக வற்புறுத்தியிருக்கிறார். அதனை அப்பெண் நிராகரித்துள்ளார். அதன் காரணமாகவே அப்பெண் தெருத்தெருவாக போலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

காந்தி இரண்டு குழந்தைகளின் தாய். கணவர் இரண்டு குழந்தைகளுடன் காந்தியை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். வறுமை கொடுமையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட காந்தி, இப்போது வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகின்றார்.

ராஜபக்ச அரசின் பொலிஸ் அதிகாரத்தின் மிரட்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட காந்தி தனது வாழ்க்கையை உடகங்களில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அனாதரவாக விடப்பட்ட தனது குழந்தைகளைக் காப்பாற்ற தனக்கு வேறு வழிகள் தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.
உடலுறவு கொள்வதற்கு மறுத்த காந்தியிடம் கங்கா என்ற பெண்ணை வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதற்கு ஒழுங்கு செய்த போலிஸ் அதிகாரி, இரண்டு பெண்களுக்கும் வாய்த் தர்க்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

சார்ஜண்ட் உடன் சென்ற இரத்தினபுரி போலிஸ் படை காந்தியை துரத்திச் சென்று தெருவில் தள்ளி விழுத்திய நிலையில் சார்ஜண்ட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

காந்தியின் கணவர் ஊடகங்களுக்குக் கூறுகையில், தாம் இருவரும் நகரப்பகுதிக்குச் சென்றதாகவும் தான் சற்று முன்னதாக வீடு திரும்பியதாகவும் அதன் பின்னரே தாக்குதல் நடந்தாகவும் கூறினார்.

ganthi1ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் தான் விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், குடும்ப வறுமையே தன்னைப் இத்தொழிலுக்குத் தள்ளியதாகவும் சார்ஜண்டுக்கு வற்புறுத்திய ஒவ்வொரு தடவையும் புரியவைக்க முனைந்ததாகக் கூறினார்.

ஒக்ரோபர் முதலாம் திகதி காந்தி தனது நியாங்களைக் கூறுவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. அங்கு தனது பக்க நியாயங்களைக் காந்தி கூறினார். போலிஸ் திணைகளம் மீது மூன்று கோடி ரூபாய்கள் நட்டைஈடு கோரி காந்தி வழக்குத் தொடுத்துள்ளார். இதன் பின்னர் காந்தியின் தாயாரைக் கைது செய்த போலிஸ் அவரைச் சிறைப்படுத்தினர்.

ஒரு விபச்சாரியைத் தாக்கியது சரியானதே எனவும் போலிஸ் அதிகாரிக்கு எதிராகப் பேசுபவர்கள் விபச்சாரத்தை ஊக்கப்படுத்துபவர்கள் எனவும் இரத்தினபுரி எங்கும் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களின் மனோ நிலைக்கு காந்தி முன்னுதாரணம். அவர்கள் வெறும் தொழிலாகவே அதனைக் கருதுகின்றனர். தமது குடும்ப வறுமையின் காரணமாகவும் சூழநிலையின் கைதிகளாகவுமே இத் தொழிலில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இலங்கை பாசிச அரச படைகளல் ஒடுக்கப்படும் சிங்கள மக்களுக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலை உணர்த்தப்பட்டால் மட்டுமே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் பெரும்பான்மையின் ஆதரவுடனான போராட்டமாக பரிணாமம் பெறும்.