ஈழ மண்ணில் ரத்தக்கறை பொங்கல் வேண்டாம் : திருமா

சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தால் ஈழ மண்ணில் படிந்த ரத்தக் கறை இன்னும் காயவில்லை. இதனால் நம் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வழக்கம்போல இந்த ஆண்டும் தை பிறந்து விட்டது. பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. தமிழகமெங்கும் தமிழ் மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களுக்கென்று இருக்கிற ஒரே பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் விழாதான். அதிலும் கடந்த ஆண்டிலிருந்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் தமிழர்கள் கொண்டாட வேண்டியது இயல்பானதுதான்.

ஆனால், நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் லட்சக்கணக்கானோர் சிங்கள ராணுவ வதை முகாம்களில் அடைபட்டு சொல்லாணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டில் இதே நாள்களில்தான் முல்லைத் தீவுப் பகுதிகளில் எமது ஈழத் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக்கொத்தாய்ப் படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு.

சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், போராளிகளும், வெள்ளைக் கொடியேந்தி வந்த தலைவர்களும் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

அந்த ரத்தக் கறை இன்னும் ஈழ மண்ணில் காயவில்லை. இந்தக் கொடுமைகளைக் கண்டித்து கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்கள் உண்ணாநிலை அறப்போரை மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தினோம்.

அத்தகைய துக்கமும் துயரமும் நம் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில், இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 6ம் தேதியன்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள ராணுவ முகாமில் திடீரெனக் காலமாகிவிட்டார்.

பல லட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சொந்த பந்தங்களை பலி கொடுத்து, துக்கத்தில் விழுந்து கிடக்கின்ற நிலையிலும், வேலுப்பிள்ளை அவர்களை இழந்து வாடும் நிலையிலும், நமது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவதை தமிழக மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள், அவர்தம் குடும்பத்தினர் கட்டாயம் புத்தாடை அணிவது, பொங்கலிடுவது, விழாக் கொண்டாட்டங்களை நடத்துவது போன்றவற்றை தவிர்த்துத் துக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

2 thoughts on “ஈழ மண்ணில் ரத்தக்கறை பொங்கல் வேண்டாம் : திருமா”

  1. திருமா,உன் நிஜ முகம் விரைவில் மக்கள் உண்ர்வார்கள்.
    ஒரு பக்கம் சோனியாவுடன் மேடையில் நடிப்பு,
    இன்னொரு புரம் இலஙகை மக்கள் மீது கரிசனமானநடிப்பு .சுப்பர்.
    ரா வின் கையாள் என்ற உன்மை விரைவில் உலகம் உன்னை அடயாளம் காட்டும்.

  2. முன்பு புலி சொல்லிக் கொண்டிருந்தது. இப்போது இவர்.

Comments are closed.