ஈழ ஆதர்வாளர்களை ஒடுக்க விரைவில் கருப்புச் சட்டம்- கருணாநிதி அரசு தகவல்.

விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக முன்வைப்பதற்காக சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை கடுமையாக எதிரொலித்தாலும் எதிர்கட்சிகளின் மெத்தனப் போக்கு காரணமாக முழுமையாக பிரதிபலிக்காத நிலையில் வரவிருக்கும் சட்டம்ன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிடும் நிலையில் கருணாநிதி தலைமையிலான மாநில அரசு அதை ஒடுக்குவதற்கு இப்போதே தயாராகி வருகிறது. ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழக மீனவர்களைக் கூட காப்பாற்ற திராணியற்ற கருணாநிதி கடிதம் எழுதியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனவர் பிரச்சனைகளையும் சரி, ஈழத் தமிழர் பிரச்சனைகளையும் சரி யாரும் பேசக் கூடாது என்கிறார். மீறிப் பேசுகிறவர்களை கடுமையாக ஒடுக்கவும் திட்டமிடுகிறார். இந்நிலையில் மாநில சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் நீதிமன்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது– ” தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள். அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன. ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும். இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். என்றார் துரைமுருகன்ஆக மொத்தம் இனி ஈழப் பிரச்சனை பற்றிப் பேசுகிறவர்களை ஒடுக்க கருப்புச் சட்டம் கருணாநிதி சிந்தனையில் தயாராகிக் கொண்டிருக்கிறது.