ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…

eelamurasuபிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச் செய்தி உண்மையானால் புலம் பெயர் நாடுகள் வரை நீளும் இலங்கை அரசின் கிரிமினல் கரங்களுக்கு எதிராக இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாவதாக ஐரோப்பிய நாடுகளில் சட்ட நடவடிக்கை. ஈழமுரசு ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான ஊடகம் அல்ல. ஈழமுரசு போன்ற ஊடகங்கள் தாக்கப்படுவதற்கு எதிரான வலுவான சட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வழிமுறைகளும் உண்டு. நாடுகடந்த இலங்கை அரசின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இயலாத சமூகம், வேறு எதுகுறித்தும் பேசுவதற்கு அருகதையற்றதாகிவிடுகிறது.

இலங்கை அரசைத் தண்டிக்கப்போகிறோம் என ஐந்து வருடங்களாக மக்களை நம்பக்கோரும் ஒவ்வொரு பிரமுகரும் ஒவ்வொரு அமைப்பும் ஈழ முரசின் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இரண்டாவதாக இலங்கை அரசின் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிராக புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்கள் அனைத்தும் இலங்கை அரசிற்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். மீண்டும் ஈழமுரசு பாதுகாப்பு அச்சுறுத்தலின்றி வெளிவரும் வகையில் ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இதற்கான பிரச்சாரங்கள் அனைத்து மட்டத்திலும் ஊடகம் என்ற வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புலம்பெயர் நாடுகளின் முன்னை நாள் புலியெதிர்ப்பாளர்களும், புலிகளின் பிரமுகர்களும் இலங்கை அரசிசுடன் வர்த்தகம், பணமுதலீடு, ஒப்பந்தங்கள் என்ற அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையில் இச்சம்பவம் கவனத்திற்குரியதாகின்றது. இலங்கை அரசுடன் வர்த்தகத்திலும், பணக்கொள்ளையிலும் ஈடுபட்ட லைக்கா நிறுவனம் தமிழ் நாட்டின் சினிமா மேடையில் தமிழ் உணர்வு என்று கொக்கரிக்கும் கொடிய நிகழ்வுகளைக் காண்கிறோம்.

லைக்காவிற்கு எதிராக தொடர்ச்சியாகப் எழுதிய ஈழமுரசு இந்த வர்த்தக முரண்பாட்டினுள் சிக்கிவில்லை என்ற நம்பிக்கையில் மக்கள் மத்தில் போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

சிறீ டெலோ என்ற இலங்கை அரச பினாமி அமைப்பினால் பருதி என்ற முன்னை நாள் விடுதலைபுலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதை இனியொரு வெளியிட்டிருந்தது தெரிந்ததே. வியாபாரச் சகதிகளுக்கு அப்பால் இலங்கை அரசின் தலையீட்டையும் இங்கு மறுக்கமுடியாது.

பிரான்சை தளமாகக்கொண்டியங்கும் ஈழமுரசு ஊடக ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான முழுமையான குரலாக ஒலித்ததா என்ற கேள்விகளுக்கு அப்பால் இச்செயல் கண்டிக்கப்பட வேண்டும்.
விமர்சனம், சுய-விமர்சனம், வெளிப்படைத் தன்மை, மக்கள் பற்று போன்ற அடிப்படை ஊடக விழுமியங்களை ஈழமுரசு கடைப்பிடிக்கவில்லை என்பதெல்லம் அதன் மீதான விமர்சனங்களே தவிர மிரட்டல்கள் அல்ல.

இணைய ஊடகங்களாகட்டும் அச்சு ஊடகஙகாட்டும் மக்கள் சார்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதன் அவசியத்தை ஈழமுரசு மீதான தாக்குதல் தெரிவிகிறது. சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பால் உரிமைக்கான போராட்டத்தின் ஆரம்பப்புள்ளிகள் இவையே.
ஆக, சட்ட நடவடிக்கையும், போராட்டங்களும் காலம் தாழ்த்தாமல் ஆரம்பிக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமான அவசரத் தேவை.

ஈழமுரசு மீட்சி பெறும் வரை சட்ட நடவடிக்கையும் போராட்டஙக்ளும் நடத்தப்பட வேண்டும் என புலம்பெயர் நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் அழைப்புவிடுகிறோம்.

இனியொரு…

4 thoughts on “ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…”

 1. ஜெயலலிதா   என்பது  தமிழ்நாட்டு  முதல் அமைச்சர்   அவர் தமிழர்களுக்கு சார்பாக நடந்தாலும்   அவர் செய்தது தவறு என நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது அதனை தமிழர்கள்  எமது இனத்திற்கு விழுந்த அடியாக கருதாமல் இருந்தால் அது தவறு  . ஆனால் சுப்பிர மணியன்    போன்றவர்களை தமிழர்கள் ஆதரித்தால் அது   வரலாற்றுத்தவறு என்பது போல்  தமிழினம் முள்ளிவாய்காலில் அழிகப்பட்டதும்   சில தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி தம்மை   அடையாளப்படுத்தி செயல்படுவதும்    எமது இனத்தின் விடுதலைக்கான பின்னடைவுகள்  .  

  அதனால்   காலத்தின் விதியானது தம்மைதாம்   சரியான பாதையில் நிரூபிக்க  தவறினால் அதற்காக  சமூகம் அக்கறைப்படும் போது அவதானமாகவே செயல்பட வேண்டும் .

  பேரும்பான்மை இனம் என சிங்கள தேசம் தம்மை  இனவாதத்தில் அடையாளப்படுத்தி அரசியலின் நோக்கத்தை அறியாத சிங்கள சமூகமும்    தமிழகத்தில் திராவிடகட்சிகளும் தமிழர்களை  ஏமாற்றி வளர்கப்பட்டதற்கு தமிழர்கள்தான் காரணம் .  இன்று சர்வதேசம்வரை தவறு காணும் தமிழர்கள் அடிப்படையில் தமிழினம் செய்த தவறுகள் அறியப்படாமல் குறகிய வட்டத்தில் தம்மை நகர்த்தி எமது விடுதலையை பெற்றுக்கொள்ள முடியாது.  நாம் எமக்கு எதிரியை வளர்த்து பலமாக்கி அவர்கள் எமது சமூகத்தை சுரண்டிவாழ்ந்தமைக்கு தமிழர்கள் முடிவைத் தேட வேண்டும். அப்போது ஊழல்கள் வளர்வதற்கு சந்தற்பம் அமையாது.  எதிரியின் முகத்திரை சுலபமாக கிழிகப்படும். 

 2. ஈழ முரசு – சிறீலங்கா அரசின் பத்திரிகையாக மாறப் போகிறதோ?
  கடந்த கால புலி தலைவர்கள் இப்படி கதறிவிட்டு அரசோடு சேர்ந்திருக்கிறார்கள். ஈழமுரசை எத்தனை பேர் படிக்கிறார்கள்?

 3. ஐரோப்பாவிலேயே மிரட்டல்களுக்குப் பயந்து மட்டும் மூடுகிறோம் என்றால் அது அப்பட்டமான பொய்.
  ஏதோ ஒரு கடந்த காலக் களவை ஒட்டி மிரட்டபடுவதாக அல்லது பின்தங்கிய தமிழ்ச்சமூகக் வாழ்வியல் குழறுபாடுகளாகவும் இருக்கலாம். ஒரு முன்னணிப் பத்திரிக்கையை ஐரோப்பியப் புலத்தில் அந்திரப்படுவதிலேயே வாழ்க்கையை பெருமளவு கழிக்கும் தமிழ்ச் சமூகந் தான் காப்பாற்ற வேண்டும் என்றால் சுய-தனிமைப்படலின் உச்சக்கட்டம். புலம்பெயர் நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் சக்திகள் என்பதில் தெளிவாக தமிழ்க் கோமாளிக்கூத்துகளுக்கு வெளியிலும் உள்ள சக்தி வாய்ந்த அமைப்புக்களின் உதவி நாடப்பட வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.
  ஆம் – ஐரோப்பிய நாடுகளில் பல வழிமுறைகள் இங்கு உதவவே உண்டு. ஆனால் தமிழ்த்தலைமைகள் என்று கொக்கரித்துத் திரியும், ஏன் பிழைப்பு நடத்தும் கும்மாளங்கள் தான் தீர்வினைக் காணவேண்டும் என்பது பிழையான கருத்து.

 4. // புலம்பெயர் நாடுகளின் முன்னை நாள் புலியெதிர்ப்பாளர்களும்,[…] இலங்கை அரசிசுடன் வர்த்தகம், பணமுதலீடு, ஒப்பந்தங்கள் என்ற அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையில் //

  “புலியெதிர்ப்பாளர்களும்” ஸ்ரீலங்கா அரச மாற்றம், ஸ்ரீலங்கா அரச எதிர்ப்பு என திரிபுற்று ஸ்ரீலங்கா அரச ஒத்துழைப்பு என்பதற்கு அப்பால் செயற்படும் சுதந்திரம் இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அச்சுதந்திரம் தமிழரின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக அல்லது மறைமுக மோசடியாகவே முடிவதுவுமே உண்மை.

Comments are closed.