ஈழத் தமிழ் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள்- ஜெயலலிதா அறிக்கை.

இலங்கைத் தமிழர் தொடர்பாக அ. தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத்தமிழர்கள், இலங்கை ராணுவ முகாம்களில் முள் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேக முத்திரையுடன் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இன்று கூட மீதமுள்ள மற்றவர்களின் கதி என்ன வாயிற்று என்பது நிச்சய மற்ற நிலையில் தான் இருக்கிறது.முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப்பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.இந்தப் பெண்களில் பலர் உணவிற்காக ராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.பாக் ஜலசந்திக்கு அப்பால், மிக அருகில் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் இத்தகைய நெஞ்சை பிளக்கும் நிலைமை மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் நியாயமான கிளர்ச்சியை, கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றங்கள் நடைபெற்ற, இனப்படுகொலை நடைபெற்ற, வெட்கமே இல்லாமல் இன்னமும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாட்டை, எவ்வித சட்டத்தையும் மதிக்காத குற்றவாளி நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று இவைகள் கருதுகின்றன.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணியிலிருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று பார்த்தனர். இந்தக்குழு இலங்கை அதிபரை சந்தித்தது.இந்தக் குழு, இலங்கையில் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியுடன் இந்தியா வந்தடைந்தது.ஆனால் 3.7.2010 அன்று, இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அப்படியானால் பத்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பொய்யான தகவலைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.9.7.2010 அன்று கருணாநிதிக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியை பாரதப் பிரதமர் அளித்தார். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருணாநிதியின் ஆலோசனையையும் கேட்டார் பாரதப்பிரதமர்.
16.7.2010
அன்று பாரதப்பிரதமருக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கை நாட்டிற்குள் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என்பது அதிமுக்கியமானது, அவசரத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்தார் கருணாநிதி.இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் கடுமையான துன்பத்திற்கு இன்றும் கூட ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. உண்மை நிலையை கண்டறிவதற்காக மற்றுமொரு குழுவை அனுப்புமாறு பாரதப் பிரதமரை கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட குழுவின் மதிப்பீடு உண்மைக்குப் புறம்பானது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

One thought on “ஈழத் தமிழ் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள்- ஜெயலலிதா அறிக்கை.”

  1. அயர்லாந்து நாட்டு ஆட்டோபஸ் அ தி மு க வெற்றிபெறுமென்று ஆருடம் கூறியது. ஜெயலலிதாவை இப்படிப்பேச வைத்திருக்கிறது,

Comments are closed.