ஈழத் தமிழ் அகதி நந்தினி தாக்கல் செய்த மனித உரிமை மனு: நீதிமன்றம் தலையீடு

nanthiniதமிழகத்தில் ஒருலட்சம் அகதிகளுக்கு மேல் தங்கியிருப்ப்தால் ஐ.நா விசாரணைக் குழுவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என வை.கோ கோரிக்கை விடுத்துள்ளார். இக் கோரிக்கையின் ஊடாக தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் இருக்கிறார்கள் என்பதை வை.கோபாலசாமி தெரிந்து வைத்திருக்கிறார் என்று கருதலாம். அவர்கள் முகாம்களில் சர்வதேசச் சட்டங்களிற்கு மாறாக மிருகங்கள் போல் நடத்தப்படுவது மட்டும் வை.கோ இற்குத் தெரியாமல் போனது வியப்பிற்குரியது.

ஈரோடு அராச்சலூர் அகதி முகாமில் வசிக்கும் நந்தினி என்ற ஈழத் தமிழ் அகதி 197.5 வெட்டுப்புள்ளியை பெற்ற பின்னர் மருத்துவக் கற்கைக்காக விண்ணப்பித்த போதும், அகதி என்ற காரணத்தினால் அவரை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்க முடியாது என்றனர். தமிழினவாதிகள் தமிழீழம் பிடித்துக்கொடுப்பதில் பிஸி ஆகிவிட்டதால் நந்தினி தானே ஒரு வழக்குத் தாக்கல் செய்தார். எம்பிபிஎஸ் கற்கைக்காக விண்ணப்பித்த போதும், அகதி என்ற காரணத்தினால் தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக குறித்த அகதி மாணவி தமது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அகதிகளுக்கு மனித உரிமைகள் காக்கப்படுகின்றது என்பதை எவ்வாறு கூறமுடியும் என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுவரைக்கும் அகதிகளின் குழந்தைகள் தொடர்பாகவோ அகதிகள் தொடர்பாகவோ தமிழக அரசிடம் எந்த விதிமுறைகளும் இருந்ததில்லை. ஒடுக்குவதற்கு மட்டும் கியூ பிரிவிற்கும் காவல்துறைக்கும் அனுமதி வழங்குவது மட்டுமே அரசின் கொள்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கான சலுகைகள் தொடர்பான நிலைப்பாடுகளை, தமிழக அரசாங்கம் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடவேண்டும் என்று சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி எஸ்.கே கௌல் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.