ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? : சபா நாவலன்

pongutamilதேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. 50 ஆயிரம் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, முகாம்களில் நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும்.

தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தாக்கத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது, சட்டங்கள் விதிகளிலிருந்ததா; லெனின் அல்லது ஸ்டாலினிருந்தா அல்லது புலிகளிலிருந்தா என்றால் இதற்கெல்லாம் விடை கிடைப்பதாக இல்லை.

தோழர் மருதையன் கூறுவது போல ஸ்டாலினிலிருந்தே மார்க்சியத்திற்கு எதிரான தாக்குதல்களை அதன் எதிரிகள் ஆரம்பிக்கிறார்கள். , ஸ்டாலினைப் புறக்கணித்தாலும், லெனின் கூறுவது நினைவிற்கு வருகிறது.

ஆக, சமூகம் அல்லது வரலாற்றின் குறித்த ஒரு பகுதி தொடர்பான பொருள்முதல் வாத ஆய்வென்பது, நாம் வாழுகின்ற உலகம்யமாதல் சூழல் குறித்த பொருள்முதல் வாதப் நோக்கு என்பதே இங்கு ஆரம்பமாக அமைய முடியும். இதிலிருந்து தான் தேசம், தேசியம் குறித்த விஞ்ஞான பூர்வமான நிலைப்பாடுகளை முன்வைக்கலாம். ஒரு சமூகத்தின் வரலாறு குறித்த ஆய்வு என்பது தமிழரசன் போன்றவர்கள் கூறுவது போல மேற்கோள்களிலிருந்தும், நூற்றாண்டுகளுக்கு முன்பதாக முன்வைக்கப்பட்ட முடிபுகளிலிருந்தும், ஏகாதிபத்தியப் பத்திரிகைகள் தரும் திரிபடைந்த தகவல்களிலிருந்தும் ஆரம்பிக்கக் கூட இயலாதவொன்று.

ஒரு புறத்தில் இந்தியா மற்றும் சீனாவை மையமாகக் கொண்டு முன்னெழும் ஆசியப் பொருளாதாரமும், மறுபுறத்தில் இதனோடு தவிர்க்கவியலாது போட்டி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள அமரிக்க ஏகாதிபத்திய அணியும், உருவாகும் புதிய பொருளாதார அமைப்புடன் போட்டி போடமுடியாத வலுவிழந்த, அப்பாவிகளைக் கொன்றொழிப்பதை மட்டுமே புதிய உலக ஒழுங்கின் முன்நிபந்தனைகளில் ஒன்றாகக் வரித்துக்கொண்டுள்ள புதிய சமூகச் சூழல், ஸ்டாலினும் ட்ரொஸ்கியும் சண்டைபோட்டுக் கொண்ட காலகட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆக, இன்றைய சமூக ஒழுங்கை எவ்வாறு பொருள்முதல் வாத அடிப்படையில் அறிந்து கொள்வது என்பதே இங்கு பிரதானமானது. இதிலிருந்தே சமூகத்தின் புதிய மாறுதல்களையும் அதனை மாற்றுதலுக்கான வழிமுறையையும் அறிந்து கொள்ள இயலும்.

முதன் முதலில் தேசிய இனங்கள் தொடர்பாகவும் சுய நிர்ணய உரிமை குறித்தும் பொருள்முதல் வாதத்தை ஆதரமாக முன்வைத்து ஆய்வுகளை முன்வைத்தவர் லெனின். லெனினைத் தொடர்ந்து ஸ்டாலினும் அதன் பின்னதாக ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ஏர்ன்ட்ஸ்ட் கொல்னர் போன்றோரும் தர்க்கரீதியான ஆய்வுகளை முன்வைத்தனர்.

“தீர்க்கமான பொருளாதாரக் காரணிகளே தேசிய இனங்களின் உருவாக்கத்தை நோக்கி இட்டுச்செல்கின்றன” என்று லெனினின் கூற்றை பொதுவாக எந்த முதலாளித்துவ ஆய்வாளர்களும் கூட மறுத்ததில்லை.
“நவீன உறவுகளுக்கு மிக முக்கியமான சாதனம் மொழி, மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இங்கே தான் தேசிய இனங்களின் பொருளாதார eelam1அடித்தளம் இருக்கின்றது. நவீன முதலாளித்துவத்திற்கு ஏற்றவகையில் உண்மையிலேயே சுதந்திரமான விரிவான வணிகத்திற்கு, மக்கள் விரிவாகச் சுதந்திரமாகப் பல வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்கட்டிற்கும், ஒவ்வொரு சிறிய பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கியமாத் தேவையாகும் சூழ்னிலை மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும் தான்.” என்று மொழியின் அதாவது ஒரு தேசத்தின் சந்தையை நோக்கிய மொழியின் அதாவது பொதுவான மொழியின் அவசியத்தை குறித்துக் காட்டுகிறார் லெனின்.

“நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவம் வெற்றிகொள்ளும் காலம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட அரச ரீதியில் ஐக்கியப்பட்ட நிலப்பிரபுக்கள் அதற்கு வேண்டும்”. என்று ஒரு மொழி தொடர்பான கருத்தை வலியுறுத்துகிறார் லெனின்.

இன்னொரு மார்க்சியரான கவுத்ஸ்கி கூறுகிறார், “முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த நிலைமகளைலிருந்து வேறுபட்ட இன்றுள்ள நிலைமகளுக்கு மிகவும் பொருத்தமான வடிவம் தேசிய அரசுதான்”. “தேசிய அரசுகளிலிருந்து பல தேசிய இனங்களைக் கொண்ட பல்தேசிய அரசுகள் வளர்ச்சி குன்றிய பிந்தங்கிய நிலையிலிருக்கும் நடுகளில் காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இதைத் தான் லெனின் “கவுத்ஸ்கியின் வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான முடிபு” என்கிறார்.

ஒரு அரசை நோக்கி மத்தியத்துவப் படுத்தப்பட்டவல்ல பொருளாதார நிலைமைகளில் ஒரு மொழி பேசுகின்ற மக்கள் கூட்டமானது குறித்த பிரதேச வரம்பாகிய தேசம் என்ற எல்லைக்குள் தம்மை ஒழுங்கு படுத்திகொள்வதற்கான புறச் சூழ்நிலை காணப்படுவதாக தனது பொருள்முதல் வாத ஆய்வை முன்வைக்கிறார். தவிரவும், இவர்கல் மத்தியில் காணப்படக்கூடிய பண்பாட்டுக் கூறுகளின் பரிமாற்றங்களும், இடப்பெயர்வுகளும், இயல்பான குடியேற்றங்களும் பொதுவான அதுவும் சந்தைப் பொருளாதாரத்தை மையப்படுத்திய அதனை ஊக்கப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு குறைந்த பட்சக் கலாச்சார இணைவும் ஏற்படும் என்பதை உலகம் முழுவதும் உருவான தேசிய இனங்கள் எமக்கு தெளிவாக முன்னுதாரணங்களைத் தருகின்றன.

தேசியமும் தேசியவாதமும் குறித்து பொதுவாக ஐந்து வேறுபட்ட கருத்துடையவர்களை சமகால அரசியலில் வரைமுறை செய்யலாம்.
1. தூய தேசிய வாதிகள்: தேசமும் தேசியமும் கால எல்லையற்ற நிகழ்ச்சிப் போக்கு. இது நவீனத்துவத்திற்குப் முன்னான எல்லையற்ற காலப்பகுதியிலிருந்தே காணப்படுகிறது. ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும் என்ற முழக்கம் இதிலிருந்துதான் உருவாகிறது.
2. தேசியவாதம் என்பது மிக நீண்ட காலப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிறது ஆனால் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வடிவத்தை கொண்டதாக அமைகிறது என்ற கருத்தியல். தேசிய வாதம் குறித்த கெல்னரின் கருத்தை மறுத்த ஹொப்ஸ்பவம் போன்றவர்கள் இவ்வாறான கருத்தை முன்வைத்தனர்.
3. பின்நவீனத்துவ வாதிகள் தேசம் தேசியம் என்பன நவீனத்துவத்தின் பின்னான உற்பத்திச் சாதனங்கள் உருவாக்கிய கற்பனையான கருத்துப் பிரதி என்கின்றனர்.
4. பொருள்முதல்வாதிகள் இது முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு உருவான வரலாற்றின் ஒரு குறித்த காலகட்டத்திற்குரிஉஅ மக்கள் கூட்டம் என்கின்றனர்.

1983 இலிருந்து 1995 காலப்ப்குதியில் லெனினின் இதே கருத்தை முன்வைத்த டாக்டர் கெல்னர் இன்றுவரைக்கும் தேசிய இனங்கள் குறித்தும் தேசங்கள் குறித்தும் கல்விசார் அமைப்புக்களில் அங்கீகரிக்கப்பட்டவராகத் திகழ்கின்றார்.
தேசமும் தேசியமும் தொடர்பன பொருள்முதல்வாத அடிப்படையிலான ஆய்வுகள் பின்வரும் புள்ளிகளை தெளிவாக்குகின்றன.
1. தேசத்தின் அல்லது தேசியதின் உருவாக்கம் முதலாளித்துவ உருவாக்கத்தோடு அல்லது சந்தைப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தோடு தோன்றிய வரலாற்றுக் கட்டமாகும்.
2. வரலாற்றின் இந்தக் குறித்த கட்டத்தில் தோன்றுகின்ற தனியான அரசு ஒன்றை உருவாக்கும் புறநிலைகளைப் பூர்த்திசெய்யவல்ல மக்கள் கூட்டம் தான் தேசிய இனம்.
3. முதலாளித்துவம் குறைநிலை வளர்ச்சியடைந்த நாடுகளில் பல தேசிய இனங்களைக் கொண்ட பல்தேசிய அரசுகள் காணப்படுகின்றன.
தேசிய இனங்களின் வரலாற்றுக்கட்டம் என்பது முதலாளித்துவ உருவாக்கத்துடனேயே முன்னெழுகிறது என்பதை பெரும்பாலான தொழில்சார் கல்வியாளர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் இன்று நாம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைகளுக்கும் அதன் அடிப்படையிலான உறவுகளைச் சார்ந்துமா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? மேற்கு நாடுகளில் ஏகாதிபத்தியப் பொருளாதாரம் புதிய உற்பத்தி சார் உறவுகளை உருவாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடான சமூகத்தின் சித்தாந்தப் பகுதிகளாக அமைகின்ற, மதம், சட்ட ஒழுங்குகள், கலாச்சாரப் பொதுமை போன்ற எல்லாக் கூறுகளிலுமே புதிய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வாத மாற்றங்களை உருவாக்கியுள்ளது.
முதலாளித்துவம் உருவாகிய காலகட்டத்தில் ஒருங்கிணைந்த இத்தாலிய நாட்டில் 12 வீதமான மக்களால் மட்டுமே பேசப்பட்ட தூகாசியன் மொழியே இத்தாலிய மொழியாகப் பரிணாமமடைந்தது. பிரதேசங்கள் சார்ந்த மொழிகளான பல ரோமானிய மொழிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின.
இத்தாலிய தேசம் உருவான காலப்பகுதியில் ஒரு குறித 70 ஆண்டுகளுக்குள்ளேயே இத்தாலிய மொழி பொதுமொழியாக பரிணாமமடைந்தது மட்டுமன்றி இத்தாலியில் வந்தேறு குடிகளான அல்பேனிய முஸ்லீம்கள், மக்ரேபிய அராபியர்கள், டூட்டானியர்கள் என்று பல சமூகக் குழுக்கள் இத்தாலியர்களாக அதன் தேசிய அரசுள் இணைந்த ஒரு மொழிபேசுகின்ற, குறித்த சமூகப்பொருளாதார எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்ட பொதுவான கலாச்சாரத்தைக்கொண்ட சந்தைப்பொருளாதார வரைமுறைக்குள் ஒருங்கிணைந்தனர்.
இவ்வாறே அரேபியர்கள், மக்ரேபின் இஸ்லாமியர்கள் போன்ற, இன்று எதிர் துருவங்களாக அமைந்திருக்கும் பண்பாட்டு மரபுகளைக் கொண்ட பல மக்கள் கூட்டங்களின் இணைவில் தான் பிரஞ்சு தேசன் கூட உருவானது.
benandersonஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்து அதன் இறுதியில் பூர்த்திய்டைந்த இத்தாலிய தேசிய உருவாக்கத்தில் பங்கு வகித்த அதே அல்பேனியர்கள் இன்று புலம்பெயர் நாடுகளில் இணையத் தளங்களூடாக தொலை தூர தேசியவாதத்தை வளர்க்கிறார்கள் என்கிறார் பெனடிக்ட் அண்டர்சன்.

முன்னைய அல்பானியர்கள் இணைந்து கொண்டதற்கும் இன்றையவர்கள் பிரிந்து செல்வதற்கும் காரணம் என்ன?
எட்டாம் நூற்றாண்டிலிருந்து பிரான்சின் எல்லைப்பகுதிகளில் குடியேறிய வட ஆபிரிக்கர்கள் பிரான்சில் முதலாளித்துவம் உருவான காலகட்டத்தில் பிரஞ்சுக்காரர்களாக மாறியதற்கும் கடந்த நூற்றாண்டில் பிரன்சில் குடியேறிய இதே வட ஆபிரிக்கர்கள் இன்று பிரான்சில் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவது மட்டுமன்றி அவர்களின் இரண்டாவது தலைமுறையின் ஒருவகையான எழுச்சியே பாரிசை சூழவர அமைந்திருக்கும் மக்கள் குடியிருப்புக்களைச் சார்ந்த இளைஞர்களின் போராட்டமாகும். 2005 நவம்பரில் ஆரம்பித்து ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிகழ்ந்த இவ்விளைஞர்களின் பிரஞ்சு அரசிற்கெதிரான வன்முறைகள் இவர்கள் இன்றைய பிரஞ்சு சமூகத்தின் பொதுவான சமூகப் பொருளாதாரக் கூறுகளோடு தம்மை இணைத்துக் கொள்ளவில்லை என்பதைச் சுட்டி நிற்கிறது.
பிரித்தானியாவில் வாழுகின்ற 1.5 மில்லியன் இந்தியர்களில் 19ம் நூற்றாண்டிற்குப் பின்னானவர்கள் பிரித்தானிய சமூகத்துடன் முற்றாக இணைந்து கொள்ளாத தனியான சமூகக் குழுவாகவே வாழ்கின்றனர்.
வரலாற்றின் ஒரு குறித்த கட்டத்தில் ஒன்றிணைந்து ஒரே தேசியமன மக்கட் பகுதிகள் பிறிதொரு கட்டத்தில் தமக்கான தனி அடையாளங்களைத் தேடி வலுப்படுத்திக் கொள்ள முனைவது ஏன் என்பது பல மனிதவியலாளர்களின் ஆய்வுகளின் அடிப்படை மூலக்கூறாக அமைந்திருக்கிறது.
பொருள்முதல்வாதம் மட்டுமே இதற்கான புறநிலை யதார்த்தத்தை விளக்கவல்ல அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள, இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் பெரும்பான்மையினராக இங்கிலாந்தின் உபநகரங்களின் ஒன்றான சவுதோல் என்ற நகர்ப்புறப் பகுதியை பிரதான ஆய்வுதளமாகக் கொண்டு கெர்ட் போமன் என்பவரின் நூல் (Contesting Culture: Discourses of Identity in Multi-ethnic London) துறைசார் மனிதவியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் வாதங்களைத் தோற்றுவித்திருந்தது.
சவுத்தோலில் வாழுகின்ற வெள்ளை இனத்தவர், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் போன்ற கலாச்சாரக் குழுக்கள் தமக்கான அடையாளத்தை மிக இறுக்கமாகப் பேணிக்கொள்வதான புள்ளிவிபரங்களை முன்வைக்கும் இவர் இதற்கான விளக்கத்தைப் பின்நவீனத்துவத்தின் அடையாள அரசியலிருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்.
இந்த அடையாள அரசியல் தேசிய இனங்கள் உருவான நவீனத்துவத்திற்குப் பின்னான காலகட்டத்தின் சமூக விஞ்ஞாத்திற்குப் பொருத்தமற்றதாகிவிடுகிறது.

ஆக, இதற்கான பொருள்முதல்வாத விளக்கமே இன்றைய மேற்கின் சமூக அமைப்பின் புறநிலை யதார்த்தத்தை முன்வைக்க உதவும்.
சந்தைப் பொருளாதாரம் உருவான காலப்பகுதியைப் போலன்றி இன்று மேற்கு நாடுகளில் ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு முறை நிலவுகிறது. சேவைத்துறை, வங்கித்துறை போன்ற உற்பத்தித் திறனற்ற தொழில்களே இங்கெல்லாம் பிரதான தொழிற்துறையாக அமைய, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அற்றுப்போன நிலையே மேற்கு நாடுகளில் காணப்படுகின்றது. முதலாளித்துவம் உருவான சூழலில் காணப்பட்ட இயக்கம் இப்போது இல்லை. தொழிலையும், வியாபாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட மக்களின் இடப்பெயர்வு முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டது. வேலையின்மை என்பது, தொழிலாளர்களாக மக்கள் ஒருங்கிணைவதைத் தடுக்கிறது. ஆசியர்கள், ஆபிரிக்கர்கள் போன்றோர் அடையாளம் தெரியாமல் இணைவதற்கான இயங்கு விசை இங்க்கு இல்லை. சந்தைப் பொருளாதாரம் மக்களை இணைக்கும் இயங்கு சக்தியாக இல்லாமல் போன சூழலில், ஏற்கனவே இருக்கும் அடையளங்களோடு மக்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்கிறார்கள்.
லெனின் குறிப்பிடுவது போல உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு இல்லை. அவர்களிடமிருக்கும் சந்தையைப் பாதுகாத்துக்கொள்ளவும் தேசம் கடந்த சந்தையை உருவாக்கிக் கொள்வதுமே இங்கு பிரதான நோக்கமாகக் காணப்படுகிறது.
இவர்கள் கூட ஒருங்கிணைந்த தேசியத்தை முன்மொழிவதை விட இருக்கின்ற அடையாளக் குழுக்களிடையே முரண்பாடுகளைப் பேணிக்கொள்வதே வசதியானதாக அமைகிறது.
ஆக, ஏகாதிபத்தியப் பொருளுற்பத்தி முறை ஏற்படுத்திய இந்தச் சமூகப் பொருளாதாரப் பகைபுலம் மக்கள் குழுக்களின் அடையாளங்களையும், அவர்களிடையேயான முரண்பாடுகளையும் மேலும் மேலும் வளர்க்கிறது. இவ்வாறு வளர்ச்சியடையும் அடையாளங்கள் ஒரு வகையான சமூக வளர்ச்சிக்கு எதிரான பாசிசத்தை வளர்க்கிறது. இதைத்தான் பி.பி.சி ஆங்கில சேவையின் ஊடகவியலாளரான ஜோர்ஜ் அழகையா “பாகிஸ்தானை விட பாகிஸ்தானியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரித்தானியாவின் பெட்வேட் பகுதியில் இஸ்லாமியப் பற்றாளர்களை அதிகமாகக் காணலாம்” என்கிறார்.
இவ்வாறு வளர்ச்சியடைந்த அடையாளக் குழுக்கள் மத்தியிலிருந்து உருவான இனப்பற்றையே “தொலை தூரத் தேசியவாதம்” என்று பெனடிக்ட் அன்டர்சன் என்ற மனிதவியலாளர் குறிப்பிடுகிறார்.
தொலை தூரத் தேசியவாதம் எனத் தேசிய வாதத்தின் அடிப்படைக் கருத்தியலையே தவறாகப் புரிந்துகொண்ட அன்டர்சன் குறிப்பிடும் இந்த இனப்பற்று என்பதன் அபயகரமான இன்னொரு வடிவம் தான் அடிப்படைவாதம். பிரித்தானியாவிலும் அமரிக்காவிலும் வாழுகின்ற இந்தியர்கள் ஆர்.எஸ்.எஸ் இன் நிதிவழங்கும் பிரதான மூலமாக அமைகின்றனர்.
லிட்டிள் இந்தியா என அழைக்கப்படுகின்ற பிரித்தானியாவின் மற்றுமொரு புறநகர்ப்பகுதியான லெஸ்டரில் அத்வானி நிகழ்த்தும் கூட்டங்களுக்கு அப்பகுதிகளே செயலிழந்து போகுமளவிற்கு இந்தியர்கள் கூடுவதை இங்கு குறிப்பிட்டுக்காட்டலாம்.
அன்னிய நாட்டின் செயலற்ற உற்பத்தியுடன் தம்மை இணைத்துக் கொள்ள இயலாத அடையாளத்தை, தமது இனக்குழுக்களோடு இணைத்துக் கொள்ளும் செயல்முறையின் இன்னொரு வடிவம் தான் புலிகளுக்கான புலம்பெயர் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த நிபந்தனையற்ற ஆதரவுத்தளமாகும்.
பிரித்தானியா, பிரான்ஸ், போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், கனடா போன்ற நாடுகளிலும் சிறீ லங்கா அரசு வன்னிப்படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், புலி ஆதரவுப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்ட பெரும்பான்மையினர் இந்நாடுகளில் வாழுகின்ற இரண்டாவது தலைமுறைத் தமிழ் இளைஞர்களே. சமூக மாற்றத்திற்கான அறிவியற் பின்புலமோ, மனிதாபிமான நோக்கங்களோ அன்றி வெறுமனே ஒரு இனப்பற்றுதலின் வெளிப்பாடாகவே இவர்களின் போராட்டங்கள் அமைந்திருந்தன. புலிகளின் அழிவின் பின்னான காலப்பகுதியில் இவர்களின் போராட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இவர்களின் இனப்பற்றிற்கும் லெனின், கெல்னர், ஸ்டாலின் போன்றோர் குறிப்பிடுகின்ற தேசிய வாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளும் அதனூடான அடையாள அழுத்தங்களும், தமது மூல நாடுகளில் உருவாகவல்ல தேசிய வாதத்துட்டன் இவர்களை அடையாளப்படுத்த உந்துகிறது. இதனையே ஒரு கருவியாக உபயோகித்து இவர்களைச் சர்வதேசிய வாதிகளாக வளர்த்தெடுத்தல் என்பது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய பிறிதொரு விடயம்.
இவ்வாறுதான் ஐரோப்பிய தேசங்கள், அடையாளத்தைத் நோக்கி இணையும் இனப்பற்று என்பன, ஈழப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மறுதலையான பங்காற்றியுள்ளன.
உலக மயமாதலின் பின்னான ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி மேலும் மேலும் தேய்வடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்க இவ்வாறான அடையாள அரசியல் எதிர்வரும் சில ஆண்டுகளில் பயங்கரவாதம் என்ற நிலைக்குத் தீவிரமடையும் என அமரிக்க தேசிய உளவுப் பிரிவு தனது அறிக்கையில் எதிர்வு கூறுகிறது.

மேற்கு நாடுகளும், ஏகபோக வல்லரசுகளும் இவ்வாறு தனது உள்ளகக் கட்டமைப்பை எதிர்கொள்ள, மறுபுறத்தில், மூன்றாமுலக நாடுகளில் தேசியம், தேசம் தொடர்பான கருத்து நிலையும் அதன் இலங்கை வடிவமும் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது மேலும் சிக்கலான பிரச்சனையாகும்.
மேற்கின் உற்பத்தி என்பது ஆசிய நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதும், இதனூடான ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் அதனை மையமாகக் கொண்ட ஆசியாவின் புதிய உற்பத்தி உறவுகளுமே தேசியம், தேசம் குறித்த கருத்தியலின் அடிப்படையை உருவாக்க முடியும். உலக மயமாதலின் பின்னர் மூன்றாமுலக நாடுகளில் அடையாளத்தை நிறுவும் அரசியற் போக்கு அதிகரித்து வருகிறது. இன்று முன்னெழுகின்ற தேசிய வாதம் அலை என்பது உலகமயமாதல் உருவாக்குகின்ற சமூகமாற்றங்களுக்கான எதிர்வினையே தவிர, தேசியவாம் அதனது உண்மையான பண்பிலிருந்து எழவில்லை என்கிறார் Smith, Anthony D. (2001), Nationalism – Theory, Ideology, History. Cambridge: Polity. என்ற தமது நூலில்.
மூன்றாமுலக நாட்டு மக்கள் மத்தியிலிருந்து சிமித் குறிப்பிடுவது போல தமது அடையாளம் சிதைக்கப்படுவதற்கு எதிரான உணர்வலைகள் அவர்களை ஒருங்கிணைகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய மூன்றாமுலக நாட்டு மக்கள் கூட்டங்கள் வெறுமனே அடையாளங்களை முன்னிறுத்தும் பற்றுதலா இல்லை, தேசிய இனங்கள் குறித்து லெனின் கூறுகின்ற வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டங்களா என்பதே இங்கு பிரதான விவாதப்பொருள்.
மூன்றாமுலக நாடுகள் என்ற ஒற்றைக் குறியீட்டை வழங்குதல் என்பது குறித்தே, உலக மயமாதல் ஏற்படுத்தி வருகின்ற புதிய உலக ஒழுங்கு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஆக, இந்தியா, இலங்கை என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்திய தேசியம் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் விடயங்களை இலகுபடுத்தலாம்.
பின்க்காலனியக் காலப்பகுதியில் 90 களின் ஆரம்காலம் வரை தெற்காசிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது முற்றாகவே அற்றுப் போயிருந்த சூழலே காணப்பட்டது. பாரம்பரிய விவசாய முறைகள், பழமை வாய்ந்த அதே தொழில் நுட்ப முறைகள், காலனியக் காலத்துக் கட்டமைப்பு முறைகள் போன்றனவே எந்த மாற்றமுமின்றிக் காணப்பட்டன. உலகமயமாதல் இந்தியாவில் நேர்மறை மாற்றங்களைச் சமூகக் கட்டமைபில் ஏற்படுத்துகிறதா என்ற விவாதங்களுக்கு அப்பால் இந்தியாவின் உற்பத்தி சக்திகள் உலக முதலாளித்துவத்தின் தேவையான உற்பத்தியை அதிகரித்தல் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நவீனமயத்திற்கு உள்ளாகி வருகின்றன.
பெரு நிலப்பிரபுத்துவம் என்பது அழிந்து வருகிறது. விவசாயம் நவீனமயப்படுத்தப்பட்டு வணிக மயப்படுத்தப்படுகிறது; பண்ணையார் பண்ணையடிமைகள் என்ற நிலை புதிய வடிவத்திற்கு மாற்றப்படுகிறது.
மேற்கில் முதலாளித்துவம் உருவான காலப்பகுதியில் உள்நாட்டுத் தேசிய முதலாளிகளின் இலாப நோக்கை முன்வைத்தே உற்பத்தி சக்திகளின் புதிய பரிணாமம் அமைந்திருந்தது. இந்திய உற்பத்தியின் இன்றைய தன்மை இதிலிருந்து மாறுபட்டு உலக முதலாளிகளின் இலாப நோக்கை முன்வைத்தே உற்பத்தி சக்திகளின் நவீனமயமாக்கல் அமைந்துள்ளது. ஆனால இங்கு இரண்டு பொதுப் புள்ளிகள் இலாப நோக்கும், உற்பத்தி சக்திகளின் நவீனமயமாக்கலும் என்பவையாகும்.
வேறுபடும் அம்சங்கள் உலக முதலாளித்துவமும் தேசிய முதலாளித்துவமும் என்பவையாகும். முன்னர் தரகு முதலாளிகளாகவும், ஏகபோகங்களின் அடியாட்களாகவும் அமைந்திருந்த ஒரு வர்க்கம் இன்று உலக முதலாளித்துவத்தின் பங்காளர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர் என்பதும் மற்றுமொரு பிரதான வேறுபாடு.
ஆக, உற்பத்தி சக்திகள் வணிகத் தேவைகளுக்கேற்ப நவீனமயமாதலை மறுக்கமுடியாதாயினும், இவையெல்லாம லெனின் குறிப்பிடுவதுபோல் தேசிய முதலாளித்துவத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. அவர்கள் அதிகார சக்திகளாகவும் இல்லை. குறிப்பாக “ஒரே மொழியைப் பேசுகின்ற அரசாங்க ரீதியாக ஐக்கியப்படுத்தப்பட்ட நிலப்பிரபுக்கள்” இங்கு இல்லை.
மறுபுறத்தில் உள்நாட்டு உற்பத்தி முறைகளைச் சார்ந்து நின்ற மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதி, அதுவும் குறிப்பாக உலக முதலாளித்துவத்தின் கொடூரமான தலையீட்டினால் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் மத்தியதரவர்க்கத்தின் ஒரு பகுதியான மேலணிகள் தமது உற்பத்திகளை முன்னிறுத்துவதற்கான தொடர்ச்சியான போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக கொக்கோ கோலாவின் இந்திய ஆதிக்கத்தின் போது ஒருபகுதி உள்ளூர் முதலாளிகள் கொக்கோ கோலாவின் முகவர்களாக மாறிவிட, இன்னுமொரு பலமான பகுதியானது தமது வியாபாரத்தை மறுபடி நிலைநாட்ட கொக்கொ கோலாவை எதிர்கொள்ளத் தம்மைத் தயார்படுத்திகொள்கின்றனர்.
இது போன்ற பல உதாரணங்களை நாம் காண முடியும்.
இவ்வாறான உலக முதலாளித்துவத்தின் மூலதனச் சுரணடலுக்கு எதிரான இரண்டு போக்குகள் காணப்படுகின்றன.
1. உற்பத்தி சக்திகளின் நவீனமயமாதலை எதித்து பழய உற்பத்தி முறைகளை முன்னிறுத்தும் பகுதியினர்.
2. நவீனமயப்பட்ட உற்பத்தியின் எல்லைக்குல் தமது பங்கை நிலைநிறுத்திக் கொள்ளல்.
இந்த இரண்டு வகையிலும் முதலாம் வகையினர் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகள் சார்ந்து நவீனத்துவத்தை எதிர்கும் பழமைவாதிகள். இரண்டாவது வகையினர் தேசிய உற்பத்தியின் நவீன மயமாதலை எதிர்ப்பார்ப்பவர்கள்.
சிமித் தனது பிரபலம் மிக்க நூலில் கூறுகின்ற நிலைகொள்ள முடியாத உலக மயமாதலுக்குப் பின்னான தேசியவாதம் என்பது முதலாவது வகையினரிடமிருந்தே எழுகிறது.
இரண்டாவது வகையினரிடம் தேசிய உற்பத்தியை கைப்பற்றுகின்ற போராட்டத்தில் உலக மூலதனத்திற்கு எதிரான உணர்வைக் கொண்டுள்ளனர்.
ஆக, தேசிய உணர்வு மிக்கவர்களாகவும் தேசியப் பொருளாதாரத்தின் ஆதர சக்திகளாகவும் இவர்களே அமையந்திருப்பார்கள். மறுபுறத்தில் தேசியம் என்பதும் தேசம் என்பதும் ஒரு பொதுவான மொழியைக் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதன் இன்றைய குறித்த புற்நிலைச் சூழலில் தேசியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக அமைந்திருக்குமா என்பது இன்னுமொரு விவாதத்திற்குட்பட்ட ப்பொருளாகும்,
பின்நவீனத்துவ வாதிகளும் பிற நவ-மார்க்சிஸ்டுக்கள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் சில குழுக்களும், இனத் தேசியம், கலாச்சார தேசியம் போன்ற வேறுபட்ட சொற்பதங்களை உபயோகத்திற்குக் கொண்டுவருகின்றனர்.
தேசிய உற்பத்தியை முதலில் தேசிய எல்லைக்குள் எதிர்பார்க்கும் மத்திய தர வர்க்கத்தின் எந்தப்பிரிவினருக்கும் மொழியின் அவசியம் இன்றியமையாததாகவே அமைகின்றது. தவிர ஏற்கனவே முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு காலனியாதிக்க நாடுகளால் ஏற்றுமதி செய்யப்பட்ட வேளையில் உருவகிக் குறை நிலை வளர்ச்சியிலிருந்த தேசிய இனங்கள், அவர்களை மையப்படுத்திய சந்தையை நோக்கி மேலும் வளர்ச்சியடைகின்ற வகையிலான கட்டமைப்பு இன்று காணப்படுகின்றது. ஆங்கில மொழியின் ஆதிக்கம் என்பது கூட உலக முதலாளித்துவத்தைச் சுற்றி உருவாகியுள்ள உற்பத்தித் திறனற்ற ஏகாதிபத்தியப் பங்காளர்கள் மத்தியிலும், அதனோடிணைந்து வளரும் மேல் மத்தியதர வர்க்கத்தின் மத்தியிலுமே காணப்படுகிறது.

மூன்றாவது உலக நாடுகள் என்று குறிக்கப்பட்ட நாடுகளைப் பொறுத்த வரை, முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது காலனியாதிக்க நாடுகளால் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது. கிழக்க்கு ஐரோப்பிய நாடுகளில் குறை நிலை வளர்ச்சியடைந்த நாடுகள் என லெனின் குறிப்பிடும் நாடுகளில் நிலவிய சமூக அமைப்பு முறை கூட, இந்தியா இலங்கை போன்ற முதலாளித்துவம் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளில் நிலவிவந்த சமூக அமைப்பிலிருந்து பல கூறுகளில் வேறுபட்டதாகவே அமைந்திருந்தது.
குறிப்பாக இலங்கையில் தேசிய இனங்கள் அதன் ஆரம்ப வளர்ச்சி நிலையிலேயே இன்று வரைக்கும் இருந்து வருகின்றது.
இந்தியா போன்ற நாடுகளில் உலக மயமாதலின் பின்னதன மட்டுப்படுத்தப்பட்ட தேசியப் பொருளாதார வளர்ச்சியும், அதன் மீதான உலக முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையும் அதிகரித்துள்ளன.இதன் வெளிப்பட்டாக தேசிய இனங்களின் தேசியத் தன்மையும், தேசியவாதமும் அதிகரித்திருப்பதாகவே காணப்படுகிறது.
சிமித் தனது ஆய்வு நூலில், தேசிய வாதம் உடனடியாக அழிக்கப்ட்டு விட்ட ஒன்றாகக் கருத முடியாது, உலக மயமாதல் பிரதேசங்கள் தொலை கிராமங்கள் வரை உள்ளீடு செய்யும் வரை தேசிய வாதம் அதிகரித்த போக்கிலேயே காணப்படும் என்கிறார்.
உலகம்யமாதல் தனது பொருளாதாரத்தை விரிவாக்கிய அனைத்துப் பிரதேசங்களிலும், அதன் சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், மட்டுப்படுத்தப்பட்ட தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியூடான முன்னெழுந்த தேசிய முதலாளித்துவத்தின் எதிர்ப்பையுமே சந்தித்துக் கொள்கிறது.
உலக மயமாதல் என்ற நிகழ்ச்சிப் போக்கானது மட்டுப்படுத்தப்பட்ட தேசியச் சந்தைப்பொருளாதாரத்தை உருவாகும் சமூகப் பின்புலத்தில் தான் முன்னைய சோவியத் சோசலிசக் குடியரசின் மத்திய ஆசியப் பகுதிகளிலும், போல்டிக் பகுதிகளிலும் உலகமயப் பொருளாதாரத்தின் பின்னான தேசியவாததின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.
உலகமயமாதலின் பின்னர் தான் மத்திய கிழக்கில் தேசியவாதம் மறுபடி தலைதுக்கியது.
இங்கெல்லாம் ஒரு புறத்தில் தேசியவாதமும் மறுபுறத்தில் அதனை மேலும் வலுப்படுத்தும் அடக்கு முறைக் காரணிகளையும் காணமுடியும்.

1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை நிலவிய பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக ஐ.எம்.எfப் இன் அழுத்தங்களுக்குட்பட்டு,லத்தீன் அமரிக்க நாடுகள் நவ-தாரளவாத நிகழ்ச்சித் திட்ட அடிப்படையில் உலக முதலாளித்துவத்திற்கு தனது சந்தையை திறந்தது.
இதன் விளைவாக லத்தீன அமரிக்காவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு புறத்தில் தேசிய வாதமும் மறு புறத்தில் பிரதேச வாதமும் தலைதூக்க ஆரம்பித்தது. மக்கூசர் அன்டீன் போன்ற குழுக்கள் உருவாகின.
பல ஆண்டுகளாக நிலைகுலைந்து போயிருந்த மெக்சிக்கொ சியாபாஸ் தேசிய வாதிகளின் போராட்டம் புதிய உத்வேகம் பெற்றது.
இவ்வாறு உலகம் முழுவதும் உலகமயமாதலின் பின்னான சந்தைப் பொருளாதாரம் தேசிய வாதத்தை மறுபடி முன்னெழச் செய்திருக்கிறது. இவ்வாறான தேசிய வாத்தை எதிர் கொள்ளவிளையும் தன்னார்வ அமைப்புக்கள் அடையாள அரசியலை முன்வைத்து கீழிருந்து சீர்குலைப்பை ஏற்படுத்த முனைகின்றன என்பது லத்தீன் அமரிக்க நாடுகளிலிருந்து ஆசிய நாடுகள் வரைக்குமான உலக முதலாளித்துவத்தின் திட்டமிட்ட சதி என்பது வேறான விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய விடயம்.
ஆக, உலக மயமாதல் என்பது தேசிய இனங்களின் இருப்பை மேலும் இறுக்கப்படுத்துவதாகவும் தேசிய வாதத்தை அதிகரிப்பதாகவுமே காணப்படுகிறது. ஆனாலும், இந்தத் தேசிய இனங்களின் வர்க்கக் கட்டமைப்பு என்பது ஐரோப்பிய தேசிய இனங்களின் வர்க்கக் கட்டமைப்பிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதாகவே அமைகிறது.
ஒரு பொதுவான நோக்கு நிலையில் இலங்கையில் வாழுகின்ற இனங்களுக்கும் இது பொருத்தமுடையதாக அமையினும் இன்னும் அங்கு நிலவும் குறிப்பான புறச் சூழல் சற்று வேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது.
மிகப்பிரதானமாக இந்தியாவில் தேசிய இனங்கள் மீதான அடக்கு முறை என்பது பிரதான முரண்பாடாக அமைந்திருக்கவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடே அமைந்திருக்கிறது.
இலங்கையில் முதலாளித்துவத்தின் உருவாக்கம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. பெருந்தோட்டத் தொழிற்துறையின் ஆரம்பம் அதன் உப உற்பத்தித் துறைகளையும் சேவைத் துறையையும் துரிதப்படுத்துகிறது. சேவைத் துறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமும் அதனூடான உப தொழில்களும் வடபகுதியை அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட மட்டுபடுத்தப்பட்ட சந்தைப் பொருளாதாம் ஒன்றை உருவாக்குகிறது. இதன் உச்ச வளர்ச்சி நிலையாக 70 களின் ஆரம்பம் அமைந்திருந்தது. தனி நாட்டிற்கான கோரிக்கை கூட இந்த சேவைத்துறையை மையமாகக் கொண்டிருந்த சந்தையைப் பாதிக்கவல்ல, உயர்கல்வி கற்றலுக்கான தனியுரிமையை நிலை நாட்டுவதிலிருந்தே எழுகிறது. 70 களில் சிரிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கான மொழிவாரித் தரப்படுத்தலைச் சட்டமாக்கிய போதே யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட தேசிய எழுச்சியும் தனி நாட்டுக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
இவ்வாறு உருவான சந்தைப் பொருளாதாரம் சேவைத் துறையில் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண படித்த மேல்தட்டு வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயெ அமைந்திருந்தது. இந்த மேல்தட்டு வர்க்கம் குறிப்பாக படித்த சைவ அல்லது கிறிஸ்தவ வேளாளர்களாகவே அமைந்திருந்தனர். இந்தச் சமூகப் பகைப்புலம் தான் யாழ் மையவாதத்தை உருவாக்கியிருந்தது.
சேவைத்துறை ஊழியர்களையும், சிறு நிலப்பிபுக்களையும், சிறு வணிகர்களையும் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட தேசிய வாதத்தை சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் மேலும் வளர்த்தெடுத்தது.
எழுபதுகளின் பின்னதாக சிங்களப் பெருந்தேசியவாதமாகவும் தமிழ் தேசியவாதமாகவும் பரிமாணம் பெற்ற சிந்தனை முறையானது அனைத்து தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறையாக உருவானது. யாழ்ப்பாணத்தை மையாமாகக் கொண்ட, சிறு வியாபாரங்களின் மேல் உருவான சந்தை, ஒரே தொடர்ச்சியான நிலப்பரப்பில் அமைந்திருந்த, சற்றே வேறுபட்ட கலாச்சாரத்தையும் கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களையும் இணைத்துக்கொண்டது. ஏறத்தாள 60 வருட காலப்பகுதியில் சேவைத்துறை உற்பத்தியும், அரச ஒடுக்குமுறையும், சிறு வணிகப் பொருளாதாரமும் உருவாக்கிய சந்தைப் பொருளாதாரம் முழுமையான முதலாளித்துவப் பொருளாதாரத்துடனோ, அல்லது வளர்ச்சி நிலையிலுள்ள மூலதனத்துடனோ ஒப்பிட முடியாத அளவிற்கு உற்பத்தித் திறனற்ற சந்தைப் பொருளாதாரமாக அமைந்திருந்தது.
வட கிழக்கு இணைந்த யாழ்ப்பாணத்தை நோக்கி மையபடுத்தப்பட்ட சந்தை என்பது கூட மிகப்பலவீனமானதாக வளர்ச்சியற்ற நிலையான தன்மையிலேயெ காணப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் மீதான பெருந்தேசிய வாத ஒடுக்குமுறை மட்டும்தான் கிழக்கு மக்களையும் வடக்கு மக்களையும் ஒரு பொதுவான மொழிசார் மூலதனச் சந்தையோடு இணைத்திருந்தது. இதனால் தான் வடகிழக்கு தமிழ் தேசியம் என்பது, தேசியத்திற்கான எந்த அடிப்படை நிபந்தனைகளையும் உறுதியாகக் கொண்டிராத அதன் மிகுந்த ஆரம்ப நிலைகளிலேயெ இன்று வரை இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில் தான் கிழக்குப் பிரிவினை என்ற கோஷமும், அதன் நியாயத் தன்மையும் உருவானது. 80 களின் பிற்பகுதியிலிருந்து வட கிழக்குப் பகுதியிலான சந்தைப் பொருளாதாரம் முற்றாகவே அற்றுப் போயிருந்தது. பொருளாதாரம் இயக்கமின்றியிருந்தது. சேவைத்ட் குறையிலிருந்த தமிழ்ப் பேசும் பிரிவினரான மேல் மத்தியதர வர்க்க யாழ்ப்பாணத்தவர் குறைக்கப்பட்டனர். இத்துறையில் தங்கியிருந்த இவ்வர்க்கத்தினர் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஆக், ஏற்கனவே உருவாகியிருந்த குறைந்தபட்ச வடகிழக்கு இணைந்த மொழி சார் சந்தைப் பொருளாதாரமும் அற்றுப் போக வட கிழக்கு முரண்பாடுகளும், பிரதேச வாதக் கருத்துக்களும் முன் நிலைக்கு வந்ததன. பெருந்தேசிய ஒடுக்கு முறையே இவர்களை இணைக்கும் சங்கிலியாக அமைந்திருந்ததால், ஒவ்வொரு சமாதான ஒப்பந்த காலத்திலும் வட-கிழக்கு முரண்பாடு மோதல்களும் தலைதூக்கியிருந்தன.
இம் முரண்பாடுகளை அரசு தனக்குச் சாதகாமாகப் பயன்படுத்தியதன் விளைவே பிள்ளையான், கருணா போன்ற அரச ஆதரவாளர்களின் உருவாக்கமும் ஆகும். பெருந்தேசிய ஒடுக்கு முறை வரலாற்றில் என்றுமில்லாதவாறு உச்சநிலையை அடைந்திருக்கும் இன்றைய சூழலில் பிள்ளையான் போன்ற அரச எடுபிடிகள் கூட பெருந்தேசிய வாதத்திற்கு எதிராகப் பேசாமல் அரசியற் பலம் பெற இயலாதிருப்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
மிகப் பலவீனமான, பெருந்தேசிய ஒடுக்கு முறையின் அழுத்தங்களால் இணைவிற்குட்பட்டிருந்த வட-கிழக்குத் தமிழ் தேசியம் என்பது எதிர்வரும் காலங்களில் மிகவும் தீவிரமாக வேரூன்றுகின்ற புறச் சூழ்நிலைகளாக பின்வரும் புறனிலைகளைக் காணலாம்.
1. பெருந்தேசிய ஒடுக்குமுறை
2. உலக மயமாதலின் பின்னான தேசியவாதம்
3. புலம்பெயர் தமிழர்களின் அடையாள நெருக்கடி.
4. தமிழ் நாட்டு மக்களின் மொழி சார் அடையாளம்.
புலிகளின் அழிவிற்குப் பின்னர் இதற்கான நிகழ்சிப்போக்கின் ஆரம்பத்தைப் பல வேறுபட்ட வடிவங்களைக் காணலாம்.
1. கிழக்கு மாகாணத்தின் பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான எதிர்ப்பரசியல்.
2. வடமாகாணத்தின் தமிழ் தேசியக் கூட்டமைபிற்கு தேர்தலில் கிடைத்த வெற்றி.
3. உலகெங்கும் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தக் கோரும் பல்வேறு சக்திகளின் எழுச்சி.
இவை அனைத்துமே வடகிழக்குத் தமிழர்களின் தேசிய வாதத்துடன் நேரடித் தொடர்பற்ரவையாக இருப்பினும் அதை மையமாகக் கொண்ட உப கூறுகளாகவே காணமுடியும்.
சனத்தொகைக் கணக்கீட்டு அறிவுப்புகள் இலங்கையின் வடகிழக்குத் தமிழர்களின் தொகை 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்திருந்ததை விட அதன் அரைவாசிப் பகுதிகிவிட்டது என்று வேறுபட்ட தகவல்கள் கூறுகின்றன.
சனத்தொகையின் அடர்த்தியும் பிரதேசம் சார் அதன் பரம்பலும் தேசியத் தன்மையைத் தீர்மானித்ததாக எங்கும் வரலாறில்லை.
ஆக, பல ஆண்டுகளாக மேற்குறித்த அனைத்துக் காரணங்களாலும், தமது வளர்ச்சியின் ஆரம்ப்பகட்டத்திலேயே முடக்கப்பட்டுள்ள வட-கிழக்குத் தமிழ் தேசியம் மேலும் வளர்வது தவிர்க்க முடியாதது என்பதே பொருள்முதல்வாத ஆய்வு தரக்கூடிய முடிவாகும்.
இனி, மூன்று பிரதான விடங்கள் விவாததிற்கு உட்படுத்தப்படவேண்டும் 1. இலங்கைப் பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது தேசிய விடுதலைப் போராட்டமாகத் தான் அமைய முடியுமா? 2. அவ்வாறான ஒரு போராட்டம் சாத்தியமானதா? 3. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டம் தேசியவாதச் சூழலில் எவ்வாறு அமையலாம் என்பன மிகச் சிக்கலான பிரச்சனைகள்.

3 thoughts on “ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? : சபா நாவலன்

  1. It is true that the west economy based on services and unessential and luxury items and greedy bankers are the cause of the present downfall of their economy. Countries rely on and produce essential items mostly food, clothing and shelter are doing well and self sufficent.

  2. ழுக்த்தாளன் திசநாயகத்திற்கு கிடைத்த 20 வருடசிறைதண்டனைமனிதநாகா

Comments are closed.