ஈழத் தமிழர்களுக்காக பெங்களூருவில் அதிமுக ஆர்ப்பாட்டம்- ஜெ, அறிக்கை.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்பப்படவில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, ராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை; எடுப்பதாகவும் தெரியவில்லை.ஏனெனில், தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குப் பதிலாக, தமிழர் வாழ் பகுதியான வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தமிழில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும், தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும், இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித் தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுகின்றன.இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு இரங்கை அரசு அனுப்பி வைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?.அப்படியே அனுப்பினாலும் அங்கு சென்று அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? இந்த நிலைமையில், தமிழர்களின் மறுவாழ்விற்காக ரூ. 1,500 கோடி நிதி உதவியை மத்திய அரசு அளித்திருக்கிறது. வெறும் நிதி உதவியை சிங்கள அரசிடம் அளித்ததன் காரணமாக, அங்குள்ள தமிழர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ரூ.1,500 கோடி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்படுவதாக செய்திகள் வருவது குறித்து ஆராய்ந்து, அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளான மறுவாழ்வு, விவசாய நிலங்களை சீரமைத்தல், நீர் ஆதாரங்களை சீரமைத்தல், கல்வி நிறுவனங்களை சீரமைத்தல், வழிபாட்டுத் தலங்களை கட்டித் தருதல், அனைத்து நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில் அமர்த்துதல், பத்திரிகையாளர்களை அனுமதித்தல் போன்ற பணிகளை இலங்கை அரசு மேற்கொள்கிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற்கொள்ள மத்திய அரசை முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண்டும்.இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன.எனவே, சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக கர்நாடக மாநிலக் கிளை சார்பில் நாளை பெங்களூரு எம்.ஜி. ரோடு, மகாத்மா காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா எம்.பி தலைமையிலும், கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் புகழேந்தி முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

4 thoughts on “ஈழத் தமிழர்களுக்காக பெங்களூருவில் அதிமுக ஆர்ப்பாட்டம்- ஜெ, அறிக்கை.”

  1. மாநிலம் கடந்த போராட்டம்…தமிழ்நாடு என்னாச்சுங்கோ ?

    1. பெங்களூர் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கன்னடத்தோடு இனைக்கப்பட்டது.

      1. பெங்களூரு தமிழ்நட்டுக்குச் சொந்தமானல், தமிழ்நாடு பம்பாய்க்குக் கூடச் சொந்தம் கொண்டாடலாம்.

  2. ஒரு வேண்டுகோள். கட்டுரை – செய்தி – இவற்றில் வெளியிடும் தேதியை இணைய பக்கத்தில் எங்காவது குறிப்பிடுங்கள். தேதியே இல்லாவிட்டால் இணையதளத்தில் இதே பக்கத்தை பல மாதங்கள் கழித்து ஒருவர் வாசித்து எப்போது, என்ன போராட்டம் என்று குழம்பக் கூடும்.

Comments are closed.