ஈ.பி.டி.பியினர் மீது ரி.எம்.வி.பினரே குண்டு வீசினர்!:அக்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு!!

30.08.2008.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஈ.பி.டி.பியினர் மீது ரி.எம்.வி.பி. உறுப்பினர்களே குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி கட்சி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. கிழக்கின் விடுவிப்பு, ஜனநாயகம் என்ற பெயரில் இப்படியான அராஜகங்கள் நடந்து வருகின்றன என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. நேற்றைய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து ஈ.பி.டி.பி. வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த அறிக்கை விவரம் வருமாறு:
குற்றச்சாட்டுகளின் பெயரால் எமது உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமக்கான நியாயமும், நீதியும் கிடைக்குமென நாம் நம்புகின்றோம். எமது அரசியல் செயற்பாடுகளை மட்டக்களப்பிலிருந்து அகற்றும் நோக்கத்தோடு காலத்துக்குக் காலம் எம்மீது பலவிதமான வன்முறைகளை சமூக விரோதிகள் புரிந்துவருவதை எமது மக்கள் அறிவார்கள்.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த எமது நீண்டகால உறுப்பினர் தோழர் அப்பாஸ் சுடப்பட்டமையையும் மக்கள் அறிவார்கள.
வாழைச்சேனையில் எமது உறுப்பினரான தோழர் சீலன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும், அது குறித்து இன்றுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர்களைக் கடத்தியவர்கள் அஜித் தலைமையிலான ரி.எம்.வி.பியினர்தான் என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த விடயத்தில் தமது தலையீட்டை அவர்கள் அரசியல் செல்வாக்குச் செலுத்தித் தப்பித்துக் கொண்டுள்ளனர்.
இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோகமானது நீதி, நியாயம் கிடைக்கவிடாது, கிழக்கில் அச்சமான சூழலையே தோற்றுவித்துள்ளது. இத்தகைய பயங்கரமான சூழலின் பின்னணியிலேயே 29.08.2008 அன்று மட்டக்களப்பு சிறையில் நடந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அன்று காலை 6.30 மணிக்கு சிறையில் இருப்பவர்களை இயற்கைக் கடமைகளுக்காகத் திறந்துவிடும் வழக்கமான நேரத்திலேயே எமது உறுப்பினர்கள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் செங்கலடியின் பொறுப்பாளர் தோழர் ரவி (தர்மரெட்ணம் ஈழமாறன்), தோழர் சேகர் (வீரகுட்டி சேகர்), தோழர் ஜெயக்குமார் (யோகராசா ஜெயக்குமார்), தோழர் விஜய் (மகேந்திரராஜ் வினோதராஜ்), தோழர் விஜி ( கோவிந்தன் பிரதீப்) ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள்ளேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கில் இருக்கும் குறைபாடுகளையே இது கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியையே மக்கள் கொண்டிருக்கின்றனர்.
இத்தாக்குதலை நடத்திய ரி.எம்.வி.பி. உறுப்பினரை எமது உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்தப் பாரபட்சம்? இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் ஜனநாயகம் என்று நம்புகின்றோம் என மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும்?
சட்டம், ஒழுங்கைச் செயற்படுத்த வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட தரப்பை பாதுகாக்க செயற்படுகின்றனர். அப்படியாயின், அப்பாவிப் பொதுமக்களையும், அரசியல் சக்திகளையும் பாதுகாக்க வழியேதுமில்லையா? நீதிக்காகக் காத்திருப்போரை சிறையிலேயே கொலை செய்யும் கொடூரம்தான் கிழக்கின் தற்போதைய அரசியல் போக்காக மாறி யிருக்கிறது. மக்களே அரசியல் பலத்தையும்,ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. மக்களையும், மக்கள் சேவகர்களையும், வன்முறையைப் பிரயோகித்து அடிமைப்படுத்த நினைக்கும் சக்திகளின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றுள்ளது.