இவர்களும் மனிதர்கள் தான்:கணேசகுமாரன்

 
THE DIFFERENCE BETWEEN ME AND A MAD MAN IS THAT I’M NOT MAD

என்கிறது ஆங்கில சொற்றொடர் ஒன்று. உடை உதிர்த்து உலகமெங்கும் நடைபோடும் மனநிலை தவறியவர்களின் எச்சரிக்கையே மேற்சொன்ன தங்கமொழியில் தங்கி நிற்கிறது. மனிதன் உடல் உறுப்புகள் அத்தனைக்கும் இன்று மாற்று வந்துவிட்டது ஒன்றைத் தவிர மண்ணையும் மற்ற உயிரினங்களையும் தன் காலடியில் பணியவைத்த அவனது அறிவுத்திறனுக்கு காரணமான மூளை. கோடி நியூரான்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதம் நிகழ்த்தும் மூளை எந்த கட்டளைக்கு கீழ்படிந்து தன்னை முடமாக்கிக் கொள்கிறது? அதீத வறுமை , கொடூர பசியினை தாள முடியாத மென்மனம் ஒரு புள்ளியியல் தன்னைப் பைத்தியமென அறிவித்துக்கொண்டு வறுமையும் பசியையும் கொள்கிறதா?

சொந்தவீடு, பேங்க்பேலன்ஸ், சொத்து மதிப்பு, 3 அண்ணன்கள் உறவுகள் என்று நிறைந்த வீட்டிலிருந்து வந்த செல்வராஜ் இன்றும் உங்கள் தோள்தொட்டு குதூகலமாய் சிரித்தபடி ‘5 ரூபா சார் ‘ பத்து ரூபா சார் எனக் கேட்க எது காரணம் ? டிகிரி முடித்த செல்வராஜ் வேலை கிடைக்காத விரக்தியா? தன் படிப்பிற்கு வெளியில் கிடைத்த அவமரியாதையா, அழுக்கு ஆடையில் சிக்கய வாச போதையா……. ??? தெரியவில்லை மனிதனாய் வாழ்ந்த பணக்கார நாட்கள் மனதில் உறைந்து போனதன் விளைவுதான் 50 பைசா, 1 ரூபாய்க்குப் பதிலாக, ‘5 ரூபா சார் ‘பத்து ரூபா சார்’ . பைத்திங்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதைவிட “ஏன்” என்ற கேள்வி் ஒன்றே வாழ்வின் அசட்டுத்தனங்கள் கோரமுகம்காட்டி நகரக்கூடும். உலகம் அறிவித்திருக்கும் விளிம்பு நிலைப் பட்டியலில் பைத்தியங்கள் உண்டு, மனிதர்களின் விளிம்பு பைத்தியமென்றால் பைத்தியத்தின் விளிம்பு எது? மையம் எது?

கலியனுக்கு வயதென்னவோ தெரியாது. பார்க்க 35 இருக்கும் – எப்போதும் நயினா வீட்டுத் திண்ணை வாசம் . எப்போது அவர்கள் திண்ணையில் அவன் அடைக்கலமானாவென யாருக்கும் தெரியாது. அந்த திண்னணயப் படைத்த நயினாவிற்குக் கூட உடலில் துளி ஆடையின்றி அடையாய் படர்ந்த அழுக்குடன், தளர்ந்த குறியுடதும் படுத்துக்கிடைக்கும் கலியன் பலருக்கு சாமி. காலை எட்டு மணிக்கு தன் மளிகைக்கடையை திறக்கச் செல்லும் அண்ணாச்சி தினமும் ஒரு காரியம் செய்வார். 1 ரூபா நாணயமொன்னற கலியன் கையில் தந்து வாங்கிச் செல்வார். 10 மணிமேல் அண்ணாச்யிடமிருந்து கலியனுக்கு டிபன் போகும். கலியனின் மூன்றுவேளை உணவிற்கும் உத்திரவாதமாய் ஊரில் ஆட்கள் இருந்தார்கள். பைத்தியமாதலின் முதல் தகுதி ஆடைகளைத் துறத்தல் என்பது எவரிட்ட சட்டமோ. நிர்வாணமாய் நடைபோடும் கலியனன மட்டும் ஊர் சகித்துக் கொண்டது – பைத்தியமென்பதால்தான். ஒரு நாள் காலை ரத்தம் கக்கிச் செத்துக்கிடந்த கலியனை நகராட்சி வண்டி அள்ளிச்சென்று எரித்து வந்தது, கலியன் எதற்குப் பயந்தானோ … தன்னை பைத்தியமென அறிவித்துக்கொண்டான். எவருக்கும் தொந்திரவு தராமலிருந்து இறந்தான் அவனால் பலன் அடைந்தவர்களே ஊரில் அதிகம்.

“ஒரு புளியமரத்தின் கதையில்” சுந்தரராம மாமா சொவ்வது போல் எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிடுவது என்பது எப்போதுமே புத்திசாலித்தனம்தானோ ? பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழுந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் காரியம்தானோ?

படிக்கும் காலத்திலேயே லாட்டரிச்சீட்டு வித்து சம்பாதித்த கால் ஊனமான ராஜேந்திரன் தன்னை தானே ஒற்றைச் செருப்பால் தரையினும் தலையிலும் மாறிமாறி அடித்தபடி வீதியில் ஒடியது ஏன் ? 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் பேரின்பம் வழங்கிய மணிக்கூண்டு மஹாராணி ஆடி ஓடி தேய்ந்த நாளில் ஆஞ்சநேயர் கோவில் வாசலில் பிச்சையெடுத்து பின்பொரு கோடையில் தலையெங்கும் பிளாஸ்டிக் பூக்களைச் செருகிக்கொண்டு கிழிந்த புடவையுடன் கற்கள் பொறுக்கிக்கொண்டிருந்தது யாரை அடிக்க ? இனி இழப்பதற்கு எதுவுழிப்பாமல். பைத்தியமானாலும் உயிரோடு இருக்கவேண்டுமென்ற ஆசையும் எதன்பொருட்டு ? தற்கொலையின் வலிக்குப் பயந்த அறிவு தன்னைப் பைத்தியமென பிரகடனப்படுத்திக்கொள்கிறதா….?

பள்ளியல் கற்றுத்தரப்படும் பாடத்தில் மனிதர்கள் இருவகையினர் : 1. ஆண்கள் 2. பெண்கள். இவர்கள் எப்போது மனிதர்களற்ற பைத்தியமாகலாம் என்பது கற்காமல்லிட்ட பாடம்தானே? பலருக்கும் சாமியான பைத்தியக் கலியன்,எல்லாமிரும்ந்தும் ஏது மற்றிருக்கும் 5 ரூபா செல்வராஜ், பைத்தியமாய் ஓடும் மஹாரணி, கல்வி காலத்திலே காசின் அருமை புரிந்து சம்பாதித்து பின் அழுக்கு முட்டைக்குள் அடங்கிப்போன ராஜேந்திரன். எல்லோரும் மனிதர்களின் இரு பிரிவினரில் பிறந்து பின் எப்புள்ளியில் இணைந்து பைத்திய்பிரிவு அடைந்தார்கள்?

ஒரு இந்தி பைத்தியம் தந்துபோன உதிரியான பீடிகளை தன் மேசைக் கல்லாமீது வைத்திருக்கும் பலசரக்குக் கடைகாரரை நாம் பார்த்திருக்கிறோம்தானே….? சமூகம் இப்போதெல்லாம் பைத்தியங்களை கல்லால் அடிப்பதில்லை. கல்லடி தாங்குமளவிற்கு எந்த பைத்தியமும் இப்போது உறுதியில்லை. சிறு அதட்டலுக்கும் மிரண்டு விலகிவிடுகின்றன. கோவில்கள் நிறைந்த சுற்றுலா ஸ்தலங்களில் அலையும் பைத்தியங்களின் பிறந்த ஊர் யாருக்குத் தெரிந்திருக்கும் ? பைத்தியர்கள் எல்லோரிடத்தும் இருக்கிறார்கள். ஒரு குரலுக்குக் காத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். நம் உலகத்தில் வர அவர்களுக்கு அனுமதி மறுக்கும் நாம் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் உலகத்திற்குள் அவர்கள் அனுமதியின்றி நுழையக்கூடும் என்பது மனம் நடுங்கும் உண்மை. மனிதானால் கடவுளையும் கடவுளால் மனிதனையும் கண்டு சமாதானமாகும் மானுடம் பைத்தியக் கடவுளை படைக்காமல் விட்டது எப்படி ? பைத்தியத்தின் கடவுள் எது ? மனிதன் பைத்தியமாகமல் காக்கும் வழிகளை மேற் கொள்ளும் மனம் பைத்தியம் மனிகனாகாமல் தடுக்கும் வழி செய்யுமா ? ஒரு மனிதனாய் சக மனிதர்களிடம் நாம் கேட்டுக்கொள்ளப்போவதைல்லாம் வேறொன்றுமில்லை. பைத்தியங்களை பைத்தியமாகவே விடுங்கள்.
 http://www.thadagam.com/topstory_week13.aspx

2 thoughts on “இவர்களும் மனிதர்கள் தான்:கணேசகுமாரன்”

  1. கணேசகுமாரனின் கட்டுரை நன்றாக உள்ளது.

  2. kaneshakumaran
    katturai karuthudan nantraga ullathu.
    vazhthukkal.

Comments are closed.