இழப்பையும் தியாகத்தையும் கொள்ளையர்களிடம் விற்பனை செய்யும் சிறீதரன் எம்.பி

sritharan-mpதமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் விடுதலைக்காகப் போராடி மண்ணில் விதைக்கப்பட்டனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துப் போயினர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது சொந்த நிலங்களைவிட்டுப் பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் மக்களின் வாக்குகளைப் பொறுக்கி பாராளுமன்றப் பதவிகளைக் கையகப்படுத்திய உறுப்பினர் ஒருவர் மக்களின் வீரத்தையும் தியாகத்தையும் மக்கள் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடித்துச் சிறை சென்ற ஜெயலலிதாவிடம் அடகுவைத்துள்ளார்.

ஜெயலலிதா மக்களுக்காகப் போராடியா சிறை சென்றார்? மக்களின் பணத்தை அவர்களின் அவலங்களின் பெயாரால் கொள்ளையடித்துச் சிறைப்பிடிக்கப்பட்டார். இதனையே நீதிபதி குன் ஹா ஆயிரம் பக்கங்களாகத் தனது தீர்பு முழுவதும் ஆதாரங்களோடு முன்வைத்துள்ளார். இதற்குப் பின்பும் ஜெயலலிதாவைச் சிறை வைத்தது அதர்மம் என்றும் ஈழத் தமிழர்கள் கலங்கிப் போனார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதானியும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் கூறியுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் உலகில் போராடும் மக்களும், ஜனநாகவாதிகளும், முற்போக்கு சக்திகளும் ஈழத்தமிழர்கள் குறித்து எவ்வளவு கேவலமாக எண்ணிக்கொள்வார்கள்.? சிறைக்குச் செல்வதற்குச் சற்று முன்னர் கூட விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்து என்று கூறியவர் ஜெயலலிதா. பேரினவாத அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி தமிழகத்திற்குச் சென்றவர்களைச் சிறைக்குள் அடைத்து நவீன அடிமைகளாக நடத்தும் ஜெயலலிதாவை சிறீதரன் பின்வருமாறு விழிக்கிறார்:

“இன்றைக்கு அந்த பொன்மனச் செம்மலின் வடிவமாகவும் உள்ளமாகவும் தமிழர்கள் உங்களை காண்கின்றனர். நீங்கள் தமிழர்களின் இதயத்துடிப்பை உணர்ந்துள்ளீர்கள். உங்களை சிறையில் அடைத்தது அதர்மம். ஆனால் அதர்மத்தால் உங்கள் தர்மத்தின் முன் ஈடுகொடுக்க முடியவில்லை”
அவர் மேலும் சொல்கிறார் “தமிழகத்தின் பல கோடிக்கணக்கான உறவுகள் நாம் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கு தம் உயிர் கொடுக்கவும் சித்தமாயிருந்து வந்துள்ளார்கள். தமிழக கானகங்களில் தான் எம்வீரம் முறுக்கேறி வளர்ந்தது.”

முறுக்கேறி வளர்ந்த போது ஜெயலலிதா சொன்னது இதுதான் “போர் என்றால் அழிவு சகஜமானது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு, இலங்கையில் நடப்பது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”.
மக்களின் இழப்பையும், தியாகத்தையும் வீரத்தையும் ஒரே அறிக்கையில் கொச்சைப்படுத்தி கொள்ளைக்காரர்களிடம் விற்பனை செய்துள்ளார் சிறீதரன்.

3 thoughts on “இழப்பையும் தியாகத்தையும் கொள்ளையர்களிடம் விற்பனை செய்யும் சிறீதரன் எம்.பி”

  1. இப்படியுமா ஜால்ரா அடிப்பது ?.
    ‘அக்மார்க்’ அரசியல் வியாதியாகிவிட்டாரு ஸ்ரீதரன்.

  2. கொள்ளைக்காரா்கள்,கொலைகாரா்கள்,மக்கள் விரோதசக்திகள் போன்றோாில் ஒரு இனம் தனது விடுதலைக்காக தங்கியிருக்கவேண்டிய நிலையென்றால் அந்த இனத்திற்கு அப்படிப்பட்ட விடுதலை தேவைதானா? இப்படிப்பட்ட போலிகளை முதன்மைப்படுத்தி உருவாகும் சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று சொல்லித்தொியவேண்டியதில்லை.

Comments are closed.